காடே தனதென கெடக்குது வெயில். குறுக்கும், நெடுக்குமாய் விரவிக் கிடந்த மலைகள் காய்ந்து கருகியிருந்தன. காற்றின் வருகைக்காக காத்திருந்த மரங்கள் மெல்ல அசைந்தன. காற்றிலாடும் தூசியைப் போல, ரங்கனின் மனம் எங்கெங்கோ அலைந்தது. எவ்வளவு முயற்சித்தும் மனம் நிலை கொள்ள மறுத்தது. மலையடிவார வேப்ப மரத்தின் மீது போடப்பட்ட பரணில் நின்றபடி, ரங்கன் கண்களைத் தேட விட்டான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த நடமாட்டமும் இல்லை. பழுப்பும், பச்சையும் சீரற்றுக் கலந்திருந்த உடையில், வேட்டை தடுப்புக் காவலர் என்ற பட்டை இருந்தது. பாக்கெட்டில் இருந்த பீடியை எடுத்து, பற்ற வைத்து புகையினை ஊதினான். புகையோடு சேர்ந்து மனமும் அலைக்கழிந்தது.

Elephants at Garbage‘இருட்டு இறங்க, இறங்க யானைகளும் கூட்டம் கூட்டமா இறங்கிடும். தீவன‌மும், தண்ணியும் இல்லாதனால இப்ப பகல்லயே இறங்கிடுதுக. இதுல ராஜாவ எங்க தேடிப் பிடிக்கறது? தடமிருக்கிற வரைக்கும் காட்டுக்குள்ள போய் பார்த்தாச்சு. அதுக்கு மேல போகலாம்னா புதர் மண்டிக் கெடக்கு. எதுக்க யானை வந்தாலும் தெரியாது, தப்பிச்சும் வர முடியாது. ஆர்டர் போடுறது சுலபம் தான். காட்டுல வந்து பாத்தா தானே, நம்ம பாடு தெரியும். என்ன பண்ணுவது? எதுக்கும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்’ என பரணில் அமர்ந்தான்.

மேய்ச்சல் முடிந்து ஆடுகள் வரிசையாய் வந்தன. மேய்ப்பன் இல்லை என்றாலும், அவை வருவதில் ஒரு ஒழுங்கிருந்தது. ஆடுகள் சென்ற வெகு நேரத்திற்குப் பின்னர், ஆட்டுக்குட்டியை தோளில் சுமந்தபடி கையில் குச்சியுடன் மேய்ப்பன் வந்தான். "யோவ்… கரட்டி இங்க வா” என ரங்கன் கூப்பிட்டான். கிழிந்த கருப்புக் கட்டம் போட்ட சட்டை, தலையில் உருமாடு, வெற்றிலை போட்டு சிவந்த வாய், ஒடுங்கிய முகத்தை மறைக்கும் லேசான தாடி என இருந்த கரட்டி, ”என்ன ரெங்கா?” எனக் கேட்டான்.

"ராச்சா பத்தி எதாச்சும் தகவல் இருக்காய்யா?”

”இல்ல ரெங்கா… நீங்க பண்ணுறது நிய்யாமா?”

”டிபார்மெண்டுல யாருக்கும் பிடிக்கறுதுல இண்ட்ரெஸ்ட் இல்ல, வெவசாயிக கலெக்டர் ஆபிஸ், டி.எப்.ஒ ஆபிஸ், முற்றுகை, மறியல்னு தொல்லை பண்ணுறாங்க, பிடிக்கச் சொல்லி மினிஸ்டர் பிரச்சர். என்ன பண்ணுறது கரட்டி?”

”நம்த்தது சாண் வயரு, அத்துக்கு பெல்லா வயறு, ஏங்க போவினா, பெணாங்காதலா… பச்சியில வூட்டுக்குள்ள புந்தாலும் குஞ்சு, குழந்தைகள, ஆளுகள தொட்டிருக்கா? எதுக்க வந்த்தாலும், கையெடுத்துக் கும்பிட்டு போ சாமினா திரும்பிப் போயிடுவானே. நாம வாயிக்கு ருசியா என்னென்ன திண்ணுறோம்? அது போற வர வழியில வாழ, கரும்புனு போட்ட அதுக்கு ருசியா திங்கத் தோணாதா?" என்ற கரட்டி சிறு இடைவெளி விட்டு, “மலய்யயும், காட்டய்யும் பட்டா போட்டிட்டு, வூருக்குள்ள வருதுனு சொல்லிறது நெயாயமா? அத்துக்கு வாழிடமும், வலசயும் வேணாமா? இப்படி புடிக்க ஆரம்பிச்சா, காட்டுல எந்த ஜீவனும் இருக்காது” என்றபடி ஆட்டை தூக்கிக் கொண்டு சென்றான். வெகு தொலைவிற்குச் சென்று புள்ளியாய் மாறி மறையும் வரை அவனையே ரங்கன் பார்த்தபடி இருந்தான்.

”யான, பன்னி திங்கதா கடன உடன வாங்கி வெவசாயம் பண்ணுறோமா? வெள்ளாமை பண்ண மழ, தண்ணி இல்ல, வெளஞ்சா வெலயில்ல. நாலு காசு வந்தா தானே நாங்களும் பொழைக்க முடியும். இதுலராச்சா ஆனாயல ஒரே தலவலி. நிம்மதியா நைட்டுல தூங்கி ஒன்றரை மாசமாச்சு. தெனமும் தூக்கம் கெட்டு விடிய, விடிய எத்தன நாளுக்கு வெரட்டுறது? ஒன்னு நீங்க பிடிச்சிட்டுப் போங்க, இல்லானா சுட்டுக் கொல்ல பெர்மிசன் கொடுங்க” பழனிசாமி ரேஞ்சரைப் பார்த்து ஆவேசமாக சொன்னான்.

”அந்த யானைய பிடிக்கத் தானே 4 கும்கிய கொண்டு வந்து நிறுத்திருக்கோம், ஆர்டரும் வந்திடுச்சு.பிடுச்சுட்டுப் போக எல்லாம் ரெடியா இருக்கு” ரேஞ்சர் பதிலளித்தான்.

“இன்னும் எத்தன நாளிக்கு இதயே சொல்லுவீங்க? ஒன்னு நாங்க இருக்கணும், இல்ல அந்த யானை இருக்கணும். ரெண்டுல ஒரு முடிவ சொல்லுங்க” என பழனிசாமி மீசையை முறுக்கினான்.

”நம்புங்க சார், எங்க ஆளுகளும் ராப்பகலா அலைஞ்சிட்டு தான் இருக்காங்க. இன்னும் ரெண்டோரு நாள் பொறுத்துக்கங்க, பிளீஸ்” என்றான் ரேஞ்சர்.

”இன்னும் ரெண்டு நாளுல பிடிக்கலானா டி.எப்.ஒ. ஆபிஸ்லையே நாங்க குடும்பம், குட்டியோட வந்து குடியிருந்திருக்கோம். அங்க தான் யானை எதுவும் வராது, உயிர்பயம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்” என்றான் பழனிசாமி

”கண்டிப்பாக பிடிச்சிடுவோம், நிம்மதியா போயிட்டு வாங்க”என்றான் ரேஞ்சர்.

”என்ன பண்ணுவிங்களோ எங்களுக்குத் தெரியாது, எங்க பட்டா நெலத்துக்குள்ள யான வரக்கூடாது, அவ்வளவு தான்” என்றபடி பழனிசாமியும், உடன் வந்த நான்கு பேரும் வெளியே கிளம்பினார்கள்.

சுற்றும் முற்றும் இருட்டு திரண்டிருந்தது. கிச்ச்ச்… ச்ச்ச்… என பூச்சிகள் சத்தமிட்டபடி இருந்தன. தூரத்தில் சாலையோர தெருவிளக்கு விட்டு, விட்டு எரிந்து கொண்டிருந்தது. டியுப்லைட்டின் கீழ் இருட்டும், வெளிச்சமும் மாறி, மாறி வந்தது. பீடியைப் பற்ற வைக்க உரசிய தீக்குச்சி வெளிச்சத்தில் ரங்கனின் முகம், வாட்சர் குமாருக்குத் தெரிந்தது. டியுப் லைட் வெளிச்சம் வந்த பக்கம் பார்வையைத் திருப்பினான். இருட்டில் இருந்து வெளிச்சம் வந்தபோது, லைட்டின் கீழ் யானை நின்றிருப்பது போலத் தெரிந்தது. கண்களை கையால் தேய்த்து விட்டு, மீண்டும் பார்த்தான். டியுப்லைட்டின் கீழ் கருத்த, பெருத்த உடம்புடனும், கூர்மையான மினுங்கும் நீண்ட தந்தங்களுடனும்ஆஜானுபகுவாய் நின்றிருந்தது ஒரு யானை. ”ராஜா” என முணுமுணுத்தபடி, ரங்கனின் தோளில் தட்டி,லைட்டை நோக்கி பாக்கும்படி சைகை செய்தான். ராஜா தும்பிக்கையைத் தூக்கி, பிளிறியது. காடெங்கும் பிளிறல் எதிரொலித்தது.

ராஜா மெல்ல நடந்து செல்ல, வெளிச்சத்தில் இருந்து மறைந்தது. குமார் டார்ச்லைட்டினை இடமிருந்து வலமாகத் திருப்பினான். இருட்டைக் கிழித்துச் சென்ற வெளிச்சத்தில் யானை நடந்து செல்வது தெரிந்தது. கொஞ்ச தூரம் நடந்த ராஜா எதிர்பட்ட ஒரு பெட்டிக்கடையின் முன்பு நின்றது. தும்பிக்கையைத் தூக்கி முகர்ந்து பார்த்தது. சட்டென கடையின் ஓட்டை தும்பிக்கையால் அடித்துஉடைத்த ராஜா, ஓட்டின் ஓட்டை வழியாக தும்பிக்கையை நுழைத்து கடைக்குள் தேடியது. எவ்வளவு முயன்றும் வெறும் இரண்டு குடல் பாக்கெட்டுகளே கிடைத்தது. குடல் பாக்கெட்டை வெளியே எடுத்த ராஜா, குடலைத் தின்றுவிட்டு பிளாஸ்டிக் கவரை கடைக்குள் போட்டு விட்டு நகர்ந்தது.
பழனிசாமியின் வாழைத் தோட்டத்தை சுற்றி எழுப்பப்ப‌ட்ட கம்பவுண்ட் சுவர் ராஜாவை மறித்தது. தும்பிக்கையால் கம்பவுண்ட் சுவரின் மேல்பாகத்தைக் கொஞ்சம் உடைத்துத் தள்ளிய அது, வலது முன்னங்காலை தூக்கிப் பார்த்தது. தாண்டுமளவு இருந்ததால் வலது மற்றும் இடது முன்னங்கால்களை சுவரைத் தாண்டி வைத்தது. அதன் முன்னங்கால்கள் சுவரைத் தாண்டியும், வயிறு சுவர்மீதும் இருந்தது. அப்படியே ஒரு நிமிடம் நிதானித்த ராஜா, பின்னங்கால்களை அடுத்தடுத்து இழுத்து சுவரைத் தாண்டியது. வாழைத் தோப்பிற்குள் நுழைந்த ராஜா வயிறாரத் தின்று தீர்த்தது.

வாழைத் தோப்பிற்குள் நுழைந்த ரங்கனும், குமாரும் யானையைப் பார்க்கவும், குமாரின் செல்போன் ”குக்கூ…” என சத்தமிடவும் சரியாய் இருந்தது. குமார் அதை எடுத்து காதில் வைத்தபடி, “ஐயா.. சொல்லுங்க…”

”என்னய்யா புடுங்கிட்டு இருக்கீங்க?” ரேஞ்சர் போனில் கேட்டான்.

”பழனிசாமி தோப்புல யானை வந்திடுச்சுனு தகவல் வந்துச்சு, அதா பக்கலாம்னு வந்தோம்”

”ரெண்டு வெடிய போட்டு ரோட்டத் தாண்டி, அடுத்த லிமிட்டுக்கு அனுப்பிட்டு வர வேண்டியது தானே?”

”இல்லைங்கய்யா, ஊருக்குள்ள போயிடுச்சுணா வம்பாயிடும்”

”நீ ரேஞ்சரா, நான் ரேஞ்சரா? ஒழுங்கா சொன்னத மட்டும் செய்”

”ஏய்ய்ய்ய்.. ஏய்ய்ய்… போ, போ” என கத்தியபடி, ரங்கன் தோளில் தொங்க விடப்பட்டிருந்த கயிற்றில் பட்டாசைப் பற்ற வைத்து, “உப்ப்ப்” என ஊதியபடி யானையை நோக்கி வீசினான். பறந்து சென்ற பட்டாசு யானைக்கருகே டப்பென வெடித்தது. மூணு, நாலு பட்டாசுகளை எதிர்த்து வந்த யானை, அடுத்தடுத்து விழுந்த பட்டாசுகளில் ஓடியது. அப்போது காட்டோரம் கடை விரித்திருந்த யோகி யோகா மையத்துக்குள் புகுந்து ரணகளப்படுத்தியது.

நிம்மதி தேடி வருபவர்களால் நிம்மதி இழந்தது காடு. உலகம் முழுக்க கிளை விட்டிருந்த யோகி யோகா மையத்தின் வேர், இந்த காட்டோரம் இருந்தது. கூட்டம் அதிகமாக அதிகமாக கட்டிடங்களும் அதிகரித்தது. அதற்கு எந்த அனுமதியும் தேவையாய் இருக்கவில்லை. ”பட்டா நெலத்துல தானே கட்டுறோம்’’ என யோகா மையத்தினர் வாதிட்டாலும், யானைக்கு அது வலசைப் பாதை. பாதை மாறிய யானைகள் ஊருக்குள் போவது அதிகமாக, ஆளுகளும், யானைகளும் சாகறதும் வழக்கமாகியது. காட்டில் மரத்தை வெட்டிட்டு, ஊருக்குள் மரம் நடுவதும், குப்பைகளை காட்டில் கொட்டி விட்டு, ஊருக்குள் கீளின் பண்ணுவதும் அவர்களின் முரண்நகை பாணி.

’ஊருக்குள்ள வருது, தோட்டத்துல புகுதுனு’ யானை மேல கோபப்பட்ட யாரும், யோகா மையத்தின் மீது கோபப்படவில்லை. கோபம் வராதபடி யோகா மையமும் பார்த்துக் கொண்டது. வெளியூர்க்காரங்களுக்கு நிம்மதி தரும் இடம்னாலும், உள்ளூர்க்காரங்களுக்கு வேலையும், வாழ்வும் அளிக்குமிடம். அதையும் மீறி எதிர்த்த கட்சிகளையும், ஆட்களையும் காசால் அடித்தும், போலீசை கையில் போட்டுக் கொண்டு கேசால் அடித்தும் சரிக்கட்டினர். ஆனால் யானையை எதனால் அடக்குவது? ’நியாயப்படி நாயை அடித்துக் கொல்லனும்னா, அது வெறிநாய்னு எல்லாரையும் நம்ப வைக்கணும்’. அதுதான் ராஜாவுக்கும் நடந்திருந்தது. 'ஆப்ரேசன் ராஜா’ என்ற பெயரில் காடு கடத்த முடிவானது.

காட்டுல தான் இருக்குது. ஆனா காட்டோட எந்தத் தொடர்பும் இல்லை. ஆற்றுத் தண்ணில உருவம் தெரியுறப்ப தான், யானைனே அதுக்கு நெனவு வரும். அந்தளவு யானையின் குணங்களை மறந்து வெகுநாளாச்சு. மரத்தோட பிணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலியின் நீளம், அதன் சுதந்திர தூரம். நிற்கும் இடத்துக்கு உணவும், தண்ணியும் தேடி வரும். காட்டு யானையோனு மிரட்சியோடு நின்னு பாத்தவங்க, பின் தொடர்ந்து வரும் சங்கிலியையும், பாகனையும் பாத்து ”அட… ச்சீ… கும்கியா” என ஏளனமாக சொல்வதுண்டு. அம்மாம் பெரிய உருவம் மாவூத்தின் கையில் இருக்கும் இத்துணூண்டு குச்சிக்கு அடங்கிப் போகும். அந்தக் குச்சி வெறும் குச்சியல்ல, வலி. அந்த வலியே விஜய்யை கும்கியாக மாற்றியது.

என்றும் போல தாய் யானையும், குட்டியும் காட்டிலிருந்து கிளம்பியது. அந்தி சாயும் இந்நேரம் கிளம்பி, விடிந்ததும் காட்டிற்குத் திரும்புவது வழக்கம். அவற்றின் வலசைப் பாதை காட்டிற்கும், யோகா மையத்துக்கும் இடையே இருந்தது. ஏற்கனவே பாதையை மறித்து எழுப்பப்பட்ட செங்கல் சுவரை, உடைத்து எறிந்திருந்தது. அன்று புதிதாய் மறித்த மின்வேலி மீது காலை வைத்த தாய் யானை, மின்சாரம் தாக்கி மாண்டது. கண்ணீர் கொட்ட குட்டி யானை, தாய் யானையை முட்டி மோதி எழுப்ப முயன்றது. எவ்வளவு முயன்றும் அம்முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.பின்னாளில் ஆவேசமாய் சுற்றித் திரிந்த குட்டி ஊருக்குள் அடிக்கடி புகுந்தது. ஒருமுறை எதிரே வந்த இருவரை மிதித்துக் கொன்று ”கில்லர்” என பெயர் பெற்றது.

கில்லர் கரோலில் அடைக்கப்பட்டிருந்தது. நான்கு கால்களும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. யானையின் இயல்பு செத்து, கும்கியாக மாற 48 நாளாகியது. ஆரம்பத்தில் அடங்க மறுத்து பெரும் ரகளை செய்தது. அடியாலும், பசியாலும் வாட்டி வதைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் யானைப் பசி, யானையை அடி பணிய வைத்தது. கரும்பைக் காட்டி இரும்பை உருக்கும் வேலை எடுபட்டது. மாவூத்தின் கையில் இருக்கும் குச்சிக்கு அடிபணிந்து, கட்டளைகளை ஏற்றுச் செய்தது. வெகுகாலம் ஒடிப் போச்சு. கில்லர் யானை, இப்போது கும்கி விஜய்யாக மாறியிருந்தது. விஜய்யைக் கண்டால் மத்த யானைகளே கிலி கொள்ளும். எப்பேர்ப்பட்ட காட்டு யானையையும் அசல்ட்டாக விரட்டி அடித்துவிடும் என்பதால், காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் முதல் சாய்ஸ் கும்கி விஜய் தான்.

விஜய் கும்கி மஞ்சள் நிறக் கயிற்றால் கட்டப்பட்டராஜாவை பின்னால் முட்டித் தள்ள, மற்றொரு கும்கி இழுத்துக் கொண்டிருந்தது. அக்கயிற்றின் முனையைப் பிடித்து ரங்கன், குமாரோடு சேர்த்து பத்திருபது பாரெஸ்ட்காரர்கள் இழுத்தனர். விஜய்யின் மீது அமர்ந்திருந்த பாகன் தனது கால் விரலால் அழுத்தம் தரத் தர முட்டித் தள்ளியது. அரை மயக்கத்தில் இருந்த ராஜா நகராமல் முரண்டு பிடித்தது. விஜய் முட்டியும், தந்தத்தால் குத்தியும் ராஜாவை முன்னேயிருந்த லாரியை நோக்கித் தள்ளியது. ஒவ்வொரு முறை முட்டித் தள்ளும் போதும், ராஜா ஆவேசமாய்ப் பிளிறியது. தந்தம் குத்தக் குத்த, கால் காயத்திலிருந்து ரத்தம் வடிந்தது. திடீரென ஆக்ரோசமான ராஜா விஜய்யை தந்தத்தால் முட்டியது. பதிலுக்கு விஜய்யும் முட்ட இரண்டும் தந்தத்தாலும், தும்பிக்கையாலும் முட்டி மோதின‌. வலு கொடுக்க முடியாத ராஜாவை, விஜய் வலுவாய் முட்டித் தள்ள, லாரிக்கருகே போய் நின்றது. சுற்றித் திரண்டிருந்த ஆட்கள் கூட்டம் ஆரவாரம் செய்தது.

பல நாளாக நடந்த கண்ணாமூச்சி ஆட்டம், அந்த விடியற்காலையில் முடிவுக்கு வந்திருந்தது. அதோட மலையடிவாரக் காட்டுலேயே வசமா சிக்கியது. தன் பாதையில சுதந்திரமாக நடந்ததற்காக சிறைபடுத்தப்பட்டிருந்தது. ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்றிருந்த பாரெஸ்ட் டாக்டர் ஊசி பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியால் யானையை நோக்கி சுட்டான். ’விர்ர்ர்’ என சென்ற ஊசி யானையின் பின்னங்காலில் ஊசி ஏறி நின்றது. பிளிறிக் கொண்டே அதுக்கும் இதுக்கும் ஓடி, ஓடி ஓய்ந்தது. துப்பாக்கியில் இருந்து கிளம்பிய இன்னொரு ஊசி வயிற்றில் ஏறியது.

வரவழைக்கப்பட்டநான்கு கும்கிகள் சுற்றி நிறுத்தப்பட்டன. அரை மயக்கத்தில் நின்றிருந்த யானையை கும்கிகள் நகர விடாமல் தடுத்து நிறுத்த, அதன் கழுத்தில் பாகன் ஒருவன் கயிற்றைக் கட்டினான். கயிற்றின் முனையைப் பிடித்து ஒரு கும்கி இழுக்க, பின்னால் இருந்து விஜய் முட்டித் தள்ளியது. மேடு, பள்ளம் பார்க்கமால் இழுக்க ராஜா விழுந்து விழுந்து எழுந்தது.

விஜய் ஆக்ரோசமாக முட்டித் தள்ளியதில், ராஜா லாரியில் மோதி விழுந்தது. தடுமாறியபடி எழுந்து நின்றது. தொடர்ந்து விஜய் தள்ளத் தள்ள லாரிக்குள் மெல்ல ராஜா நுழைந்தது. லாரிக்குள் செல்லச் செல்ல “ஏய்… ஹே…” என திரண்டிருந்த மக்கள் கூட்டம் கத்தியபடி விசிலடித்தும், கைத்தட்டியும் ஆரவாரம் செய்தது. யானையின் கழுத்தில் இருந்த கயிற்றை லாரியோடு சேர்த்துக் கட்டி, அதனால் நகர முடியாதபடி காலுக்குப் பின்னால் ஒரு பெரிய மரக்கட்டை வைக்கப்பட்டது. கூட்டத்தைப் பார்த்து டாட்டா காட்டுவது போல தும்பிக்கையை தூக்கி ஆட்டியபடி விடைபெற்றுச் சென்றது.

வரகலியாறு முகாமில் ராஜா கரோலில் அடைக்கப்பட்டது. காட்டு யானைகளை விரட்டும் கும்கிகள் பற்றாக்குறையைப் போக்க, மிரட்டும் உருவம் கொண்ட ராஜா வனத்துறைக்குத் தேவையாய் இருந்தது. கும்கியாக்கும் முயற்சியாக நகரவோ, திரும்பவோ முடியாதபடி கூண்டில் அடைபட்டிருந்தது. பிளிறியபடி ஆவேசமாக மரக்கட்டைகளில் முட்டி மோதியது. அடர்ந்த காட்டின் அமைதியை அதன் அலறல் கிழித்தது. கரோல் கூண்டை ரங்கன் திரும்பிப் பார்த்தான். காடே கூண்டிலடைப்பட்டு இருப்பது போலத் தெரிந்தது. கூண்டில் முட்டி மோதிய ராஜாவைப் பார்த்த போது, மனம் பதைபதைத்தது.

தும்பிக்கையால் கட்டைகளை அடித்தது. இரண்டு கால்களில் நின்றபடி, பின்னங்கால்களால் உதைத்துப் பார்த்தது. பிளிறியபடி கட்டைகளில் தலையால் முட்டி மோதியது. கூண்டிலிருந்து தப்ப என்னென்மோ செய்து பார்த்தது. ஒன்றும் எடுபடவில்லை. ராஜாவைக் கட்டுப்படுத்த டாக்டர் துப்பாக்கியால் மயக்க ஊசியைச் செலுத்தினான். ஊசி ஏறியதும் யானையின் உடல் சிலிர்த்து அடங்கியது. அப்படியே மெல்ல கூண்டிற்குள் கால்கள் மடங்கி சரிந்து விழுந்தது. ஓடிச் சென்று யானையை சோதித்துப் பார்த்த டாக்டர், ராஜா இறந்து விட்டதாக சொன்னான். சுற்றி நின்றிருந்த கூட்டம் செய்வதறியாது திகைத்து நின்றது. ரங்கன் வடிந்த கண்ணீரை, யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டான்.

காடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. யோகா மையத்தில் ஆட்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. பழனிசாமி தோட்டத்துல புகுந்த யானைகளை தூக்கம் தொலைத்து ரங்கனும், குமாரும் விரட்டிக் கொண்டிருந்தனர். வலசையும், வாழிடத்தையும் மின்வேலிக்குள் தொலைத்த யானைக் கூட்டமொன்று, உணவு தேடித் தேடி அலைந்தலைந்து கலைத்தது. பசி தீர்க்க குட்டியோடு யானைக் கூட்டம் குப்பை மேட்டில் கிளறிக் கொண்டிருந்தது. கரோல் மற்றுமொரு யானையின் வருகைக்காக காத்திருந்தது.

- பிரசாந்த் வே

Pin It