"சில நேரத்துல நமக்கே சிலது தோணும். அது அப்டியே நடக்கும்.... இப்போ எனக்கு தோணின விஷயம் நடக்குமா நடக்காதான்னு யோசிக்கறக்குள்ள சட்டுனு எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டு அந்த பைக் வேகமா போய்ட்டிருக்கு.... நான் வேற வழியே இல்லாம பின்னாலயே போறேன்..."

man 237எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.

ரோட்டில் செல்லும் பைக்கின் பின்னாலோ முன்னாலோ ஏதாவது வாசகம் எழுதியிருந்தால் அதை படித்தால் தான் நிம்மதியாக இருக்கும்.

அச்சம் தவிர்... டூ ஆர் டை... எஸ் திஸ் ஐஸ் மை டாட்'ஸ் ரோட்.... தி கிபிட் பிரம் ஹெவன்....இப் யு ஆர் பேட் ஐ ம் யுவர் டாட்...

இப்படி இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ வாசகங்கள். இப்படி எழுதுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். அவர்களுக்கு பிடித்ததை ஊருக்கு சொல்ல முனைகிறார்களா... ஏதாவது செய்து மற்றவர்களின் கவனத்தை அவர்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்களா.... ஆனால் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதனால்
எனக்கு பிடிக்கும். நான் வேக வேகமாய் சென்று அவைகளை படித்து விடுவேன். அப்படி படிக்கையில் கொஞ்சம் ஓவர் ஆக்ட் கூட நான் செய்வதுண்டு. அப்போது அந்த பைக்காரரின் உடல்மொழி ஒரு விதமான பெருமையை வெளிப்படுத்தும். அது நன்றாகத்தான் இருக்கும். பெண்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும். நான் படித்து விட்டேன் என்று தெரிந்த பிறகு அவர்கள் வண்டி ஓட்டும் விதமே மாறி விடும். நான் சிரித்துக் கொண்டே அடுத்த வண்டியை விரட்டத் தொடங்கி விடுவேன்.

எனக்கு இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கிறது.

பைக்கில் அமர்ந்திருக்கும் இருவர் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்பது மிகவும் பிடித்த பழக்கம். அவர்கள் விட்ட கதையை தொடர அல்லது இட்டு கட்டி நானே அந்தக் கதையை நகர்த்திக் கொண்டு போக அத்தனை அலாதி பிரியம் எனக்கு. இதோ இப்பொது கூட எனக்கு முன்னால் சென்ற வண்டியில்.....இரு பெண்கள்.....முகத்தை மூடிக்கொண்டு கொள்ளைக் கூட்டத்துக்காரிகள் மாதிரி ஏதோ முனங்கி முனங்கி பேசிக் கொண்டு நின்றார்கள். பின்னால் முன்னால் சதுர சதுரமாய் நீள வாக்கில் நீண்டிருந்த கூட்டத்தில் அந்த பெண்களின் அருகாமை ஜிவ்வென்று இருந்தது.

நான் கவனம் சேர்ந்து அவர்களை கவனிக்க கவனிக்க......கிராஸ் கட் சிக்னல் திறந்து விட....சிட்டாய் பறக்க தொடங்கினார்கள்.

"அய்யயோ...அவுங்க பேசிட்டிருந்தது செமயா இருந்துச்சே... அடுத்து என்னதான் ஆச்சு......"

அதற்குள்... பறந்து விட்டார்களே என்று வேகமெடுத்தேன். காக்கா குருவிகள் பைக் ஓட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த சாலை. வெயிலை இழுத்துக் கொண்டு அலையும் பகலை என்ன தான் செய்ய...? பிழிந்து காயப்போட மனதுக்குள் அத்தனை புழுக்கமும் காத்திருந்தது.

மேம்பாலம் ஏறுகையில்... ட்ராபிக்கில் மாட்டிக் கொண்ட அந்த பெண்கள், வண்டியை இடது வலது என்று ஆட்டிக் கொண்டே மெல்ல முன்னேறினார்கள். இப்போது அவர்கள் பேசியது ஒளியாகி பிழையாகி காதில் விழுந்து கொண்டிருந்தது. காதை கூர் தீட்டினேன். இடைஞ்சலாக இருந்த ஹெல்மெட்டை கழற்றி டேங்க் மீது வைத்துக் கொண்டேன். காதை கழுதை காதாக்கி விடைத்துக் கொண்டேன். அவர்களை ஒட்டி, தொடர்ந்து மெல்ல மெல்ல நானும் பயணிக்க... அவர்கள் பேசிக் கொண்டு சென்ற கதையை கேட்க முடிந்தது. நான் எங்கு சென்று கொண்டிருந்தேன் என்பதை மறந்தே போயிருந்தேன். கதை சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அவர்கள் கொஞ்சம் வேகமெடுத்து முன்னால் சென்ற லாரியை கடந்து வேகமாய் முன்னேறி விட நொடியில் தப்ப விட்டு விட்டேன். கிராஸ் கட்டில் பேசியதற்கும்......சற்று முன் பேசியதற்கும் இடையே இருக்கும் இடைவெளியில் என்ன பேசியிருப்பார்கள்?

மண்டைக்குள் டிராபிக் ஜாம்.

அடுத்து கொஞ்சம் பேசினார்கள் என்றால் அந்த இடைவெளியை நிரப்பி விட முடியும் என்று நம்பினேன். மீண்டும் வேகமெடுத்தேன்.

தொடர ஆரம்பித்து விட்டால் பாதை தானாக அமைந்து கொள்ளும் என்பது சரி தான் போல.. நான் இப்போது சாய்பாபா கோவில் சிஃனலில் அவர்களை ஒட்டி நின்று கொண்டிருந்தேன். தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல அவர்களின் பேச்சின் சுவாரஷ்யம் மிதந்து கொண்டிருந்தது. இன்னும் 35 வினாடிகள் இருக்கிறது என்று எதிரே இருந்து சிவப்பு விளக்கு காட்டிக் கொண்டிருக்க பின்னால் அமர்ந்திருந்தவள் பேசிக் கொண்டே என்னை மெல்ல திரும்பி பார்த்தாள். அனிச்சையாக இருக்கலாம். ஆசுவாசமாக இருக்கலாம். அழகா இருக்கானே என்று கூட இருக்கலாம்.. என்னடா இவன் நம்ம கூடயே வந்துட்டு இருக்கானே என்று கூட இருக்கலாம். ஒருவேளை பாலோ பண்றானோ என்று கூட எல்லாருக்கும் வரும் இயல்பான சந்தேகத்தில் இரண்டு முறைக்கு மேல் வந்து போயிருந்தது அவளின் கண்கள். கதையின் ஒலி வடிவம் கூட முக அசைவுக்கு தகுந்தாற் போல காற்றில் திசை மாறிக் கொண்டிருந்தது. நான் சிஃனலை பார்ப்பது போல முகத்தை வேறு மாதிரி வைத்துக் கொண்டேன். அவள் மீண்டும் தொய்வில்லாமல் கதைக்க தொடங்கினாள்.

இம்முறை ஓரளவுக்கு என்னால் என்ன பேசுகிறார்கள் என்று யூகிக்க முடிந்தது.

"ஓ.... அப்டி ஆரம்பிச்சு...... இந்த மாதிரி ஆகியிருக்கு. அதனாலதான்... அந்த ரிசல்ட். வேற வழி இல்லாமதான் இந்த முடிவுக்கு வந்துருக்காங்க. சரி.. ஆனா... அத நினைச்சிருந்தா வேற மாதிரி பண்ணிருக்கலாமே.....? அதை ஏன் பண்ணல.....!"

இன்னும் கொஞ்சம் பேசினார்கள் என்றால் அதையும் கண்டு பிடித்து விடலாம் என்று முழுதாக நம்பினேன். மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பைக் ஓட்டுவது போல இருந்தது.

மீண்டும் வேட்டை தொடர்ந்தது.

என்ன நடக்கிறது.... ஒன்றும் புரியாமல் நான் வந்து நின்றிருந்த இடத்தை சுற்று சுற்றி நோட்டம் விட கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது.

கணுவாய் தாண்டி ஆனைக்கட்டி போகிற வழியில்.....ஒரு ஒற்றை வீட்டின் முன் அவர்கள் பைக் நிற்க, அவர்களை காணவில்லை. மாலை மயங்கி மயங்கி முகம் மாற்றிக் கொண்டிருந்தது. எங்கிருந்து வேண்டுமானால் வந்து விடலாம் என்பது போல வந்திருந்த காற்றை என்ன செய்வதென்று தெரியாமல் வெறிக்க பார்த்தேன். அந்த வீட்டை சுற்றி வௌவால்களும்......பட்சிகளும் படபடக்க.......வீட்டு வாசலில் கிடந்த சருகுகள் எல்லாம் மெல்ல மெல்ல சுழன்று மேலெழும்பி சரிந்து ஒரு விதமான அமானுஷ்யத்தை வீசிக் கொண்டிருந்தது. இரவு தன் நிறத்தை சாம்பல் வண்ணத்தில் விரவத் துவங்கி இருந்தது.

எனக்கு மேற்கொண்டு கதை பயங்கரமாக இருக்கும் போல என்று தோன்றியது.

"இது தேவையா...?" என்னை நானே நொந்து கொண்டேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரோ என்னை பார்ப்பது போலவும் இருந்தது.

"என்ன இடம் இது. ஒருவேளை பணம் பறிக்கிற கூட்டமா.... இல்ல வேற மாதிரி இடமா... ஒன்னும் புரியலையே..." மனதுக்குள் காட்டின் வளைவுகள் நெளியத் தொடங்கின.

அவர்கள் இன்னும் கொஞ்சம் பேசி இருந்தால் முழுக்கதையும் புரிந்திருக்கும்.

"அதற்குள் ஏன் இங்கு வந்தார்கள். இது தான் அவர்கள் வீடா.... பேய் வீடு மாதிரி இருக்கே... கடவுளே..... காப்பாத்து......"

நா உலர....பின் தானாக அதுவே உளற நடுங்கிய கால்களை எடுத்து வைக்க கூட மறந்திருந்தது உடல். மனதுக்குள் முளைத்த பற்களின் கூர்மையை தாங்க முடியாத சூட்சுமத்தில்.. நான் வராத வார்த்தை கொண்டு அழைத்தேன்....

"ஏங்க..... லேடிஸ்...... ஹெலோ....."

"உள்ள தான போனாங்க.. ஏன் பேச மாட்டிக்கறாங்க...."

"ஹெலோ அந்த கதை என்னாச்சுன்னு தான் கேட்க வந்தேன்... வேற ஒன்னும் இல்ல... பிளீஸ்... யாரும் இருக்கீங்களா...?"

யோசிக்க யோசிக்கவே...... வெளியே கேட் தானாக அடைத்தது.

"சரி தான்... நான் நினைச்சது நடக்க தான் போகுது போல...."

எனக்கு இன்றும் சற்று நேரத்தில் அழுகை வந்து விடும் என்று தான் நினைக்கிறேன். உள்ளுக்குள் எல்லா நரம்புகளும் உதறின. சாம்பல் கனவுகளை கவ்விக் கொண்டு திரியும் நாயின் பெரும் பற்கள் அந்த வீட்ட்டின் எல்லா பக்கமிருந்தும் என்னை நெருங்குவதாக தெரிந்தது. கதையும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்.. இங்கிருந்து ஓடினால் போதும்... என்று முடிவுக்கு வந்து வேகமாய் திரும்பினேன். இதோ மீண்டும் திரும்பி வீட்டையே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன கருமம் இது. மீண்டும் கேட்டை பார்த்து திரும்பினேன். தானாக மீண்டும் வீட்டை பார்த்து தானாக திரும்பியிருந்தேன். காற்றின் சப்தமும். இரவின் நிசப்தமும்.... சசருகின் பேரோசையும்... பேய்களை போல அலைந்தன. நான் வீட்டையே வெறித்து பார்த்தேன். எந்த பக்கம் நான் திரும்பினாலும் அந்த பக்கம் அந்த வீடு தான் தெரிந்தது.

அவர்களின் பைக்.. தானாக ஸ்டார்ட் ஆனது. நான் மிரண்டு பயந்து வேகமாய் கத்திக் கொண்டு வீட்டுக்குள் உந்தப்பட்டேன். வீட்டுக்குள் விழுந்த அடுத்த நொடி கதவு பட்டென்று தானாக அடைத்துக் கொண்டது.

வீட்டுக்குள், சமயலறையில் அந்த இரு பெண்களும்... மூச்சை பிடித்து கொண்டு பயந்து நடுங்கியபடியே ஒளிந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கவனம் முழுக்க தலையில்லாமல் இருந்த என் மீதே இருந்தது.

*

மேட்டுப்பாளையம் சாலையில்...பயங்கர ட்ராபிக்.

எட்டிப் பார்த்த யாரின் முகத்திலும் மரண பயம். ஒவ்வொருவராக பயந்தபடியே அவரவர் ஹெல்மட்டை தலையில் மாட்டிக் கொண்டு வண்டியை மெல்ல உருட்ட துவங்கினார்கள்.

தலை நசுங்கி கிடந்த என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.

- கவிஜி

Pin It