ஒவ்வொரு இரவும் .. முட்கள் நிறைந்த பூவொன்றுக்குள்ளிருந்து அரும்புவதாகவே தோன்றும் எனக்கு ஒவ்வொரு இரவிலும். எனக்குப் பின்னால் விரிந்துகிடக்கும் நீல நிற நெடுங்காடு ஒன்றைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து எதிர்த்திசையில் நீண்டு திறந்திருந்த கண்ணாடிக் கதவொன்றுக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டேன்.. கருப்பு நிறத் தண்ணீர்ப் பிம்பமாய் மாறிக்கொண்டிருந்த இன்றைய இரவைக் கழித்துவிட.

யாருமற்று தனித்திருக்கும் நடுநிசி நேரத்தில் ஒலிக்கும் அமைதியின் சத்தத்தை உற்றுக் கவனிக்கும்போது அந்தச் சப்தம் கடல் சங்கினுள் ஒலிக்கும் சப்தத்தை ஒத்திருக்கிறதல்லவா என்றோர் கற்பனை தோன்றுவதுண்டு எனக்கு. அந்தக் கற்பனையின் முடிவில் அந்த இரவு கடல் சங்கொன்றின் ஒலியோடு நிரம்பிப்போயிருக்கும்.

அதீத அமைதி கொடுத்த பயங்களுக்குள் முன்பெப்போதோ தன்னந்தனியாக நான் நடந்துபோன பாதையொன்றில் இப்போது நான் மீண்டும் நடந்துகொண்டிருப்பது குறித்து ஏதொரு சலனமுமில்லை என் பாதத்தடங்களுக்கு. எனினும் என் பார்வை அறிந்து வைத்திருந்தன என் மனதின் வாசனையை. இரண்டு நொடிகளுக்கு நடுவே நின்று போய்விட்டிருந்த இந்த நிசப்தப்பொழுதில் எனைப்பார்த்துக்கொண்டே கடந்து சென்று எங்கோ மறைந்துபோனது ஒரு செந்நிறப்பறவை. அந்தப்பறவை கடந்துசென்ற பிறகே கவனித்தேன் ஈரம் உலர்ந்திராத சிறிய இறகொன்றும் அந்த இறகைப் பிணைத்தபடி ஒரு சங்கிலியும் கிடந்தன என் பாதங்களினடியில். அந்தச் செந்நிற இறகோடு சேர்த்து சிறு படகு முழுக்க சின்னச் சின்னக் கூழாங்கற்களை நிரப்பிக்கொண்டு திரும்பிய அந்த நாளை இன்னும் நிறமற்றதாகவே வைத்திருக்கிறேன் , அந்தச் சங்கிலியையும் பிணைத்தபடி.

கடலும் வானமும் ஒன்று சேரும் நேர்கோட்டில் ஓர் இளவரசி பல நூறு ஆண்டுகளாக தன் கோட்டையில் வாழ்ந்து வருகிறாளென்றும் அவள்தான் தினமும் இரவில் மேகங்களின் மீது ஏறி நின்றுகொண்டு வானம் முழுவதும் சிவந்த ரோஜாப்பூக்களின் இதழ்களைத் தூவுகிறாளென்றும் அவை விடியும்வரை நட்சத்திரமாக மின்னுவதாகவும் சிறு வயதில் நான் நினைத்திருந்தேன். என்றேனும் ஒரு நாளின் நள்ளிரவில் அந்த இளவரசியையும் அவளின் கோட்டையிலிருந்து அவள் பூக்கள் தூவுவதையும் பார்த்துவிட வேண்டுமென்று மொட்டைமாடியில் நட்சத்திரங்களோடு கழித்திருக்கிறேன் என் பல இரவுகளை.

மங்கலான என் அறை வெளிச்சத்தில் கொஞ்சம் வண்ணங்களை சில சில புள்ளிகளாக ஒன்று சேர்த்து.. பின் கலைத்து.. இன்னும் கொஞ்சம் உருமாற்றி.. மீண்டும் வேறோர் வடிவத்தில் அமைத்து சின்னச் சின்ன ஓவியங்களாக்கி அவற்றை நடமாடச் செய்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன் ஒரு நாள். என் அறை முழுதும் நிரம்பியிருந்த அந்த ஓவியங்களுள் தனியாக அமர்ந்திருந்த பெண் ஒருத்தி கண்கள் வரை மெல்லிய துணி ஒன்றைப் போர்த்தியபடி வெள்ளை நிறத்திலொன்றும் கருப்பு நிறத்திலொன்றுமாக கைகளில் எதையோ வைத்து விளையாடிக் கொண்டேயிருந்தாள். அவ்வப்போது விளையாடுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு அவளருகே இருந்த ஒரு பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்த எதையோ நுகர்ந்து பார்த்து புன்னகைத்துவிட்டு பின் பெட்டியை மூடிவைத்துக்கொண்டாள்.

அவளின் செய்கைகளையே விசித்திரமாகக்  பார்த்துக்கொண்டிருந்த என்னை சட்டென்று கவனித்துவிட்ட அவள் விருட்டென்று திரும்பி , அப்போதுதான் நீல நிறத்தில் சிறு சிறு புள்ளிகளாக உருவாகிக்கொண்டிருந்த சின்னப்பெண் ஒருத்தியின் கையைப்பிடித்து இழுத்தவாறு கலைந்து மறைந்து போய்விட்டாள்.. ம்ம். அவள் அந்த இடத்திலேயே விட்டுச் சென்ற பெட்டிக்குள் என்னவிருக்கிறதென்று திறந்து பார்க்க மனமில்லை எனக்கு. இன்னும் அங்கேயே தானிருக்கிறதந்தப் பெட்டி.

சிறு கூண்டுக்குள் அடைபட்டு அமர்ந்துகொண்டு தன்னைச்சுற்றிப் பறந்துகொண்டிருந்த பறவைகளோடு பேசிக் கொண்டேயிருந்த ஒருத்தியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன் அன்று. அந்தப் பறவைகள் அங்கிருந்து பறந்துபோய்விட்டிருந்தபோது கூண்டுக் கம்பிகளை இறுகப் பற்றிக்கொண்டு தூரத்தில் தெரிந்தவொரு கண்ணாடியில் தன்னுருவத்தைப் பார்க்க முயற்சித்துக்கொண்டே இருந்தாள் அவள். அவளின் பெயர்.. என்னவாய் இருக்கக்கூடுமென்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது எனக்கு. நான் நினைத்தது அவளுக்குக் கேட்டிருக்க வேண்டும். கண்ணாடியை எட்டிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மெதுவாய் என் பக்கம் திரும்பி என்னோடு ஏதோ சொல்ல முயற்சித்துத் தயங்கினாள். சட்டென நான் அவளின் பார்வையைத் தவிர்த்துவிட்டு .. என் கூண்டுக்கு வெளியே வட்டமடித்துக் கொண்டிருந்த பறவையொன்றின் அலகை எட்டித்தொடத் தொடங்கினேன்.. கூண்டுக் கம்பிகளை இறுகப்பற்றிக்கொண்டு.

என் வீட்டுக்கருகே ஒரு நாள் தன் பூனைக்குட்டிக்கு உணவூட்டிக்கொண்டிருந்த சிறுமியொருத்தி ஏதோ ஒரு புத்தகத்தைத் தன் கைகளில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமாக மெல்ல திருப்பி திருப்பி அந்தப் பூனைக்குக் காண்பித்து ஏதேதோ கதைகள் சொல்லிக்கொண்டிருந்தாள். அந்தப் பூனை தன் நகங்களால் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் கீறிக்கொண்டேயிருந்தது. மரப்பட்டையினாலான காகிதங்களின் ஒவ்வொரு பக்கங்களையும் அந்தச் சிறுமி மெதுவாய்த்திருப்பும் ஒவ்வொரு முறையும் அந்தப் பக்கங்களில் பதிந்திருந்த உருவங்களின் நிழல்கள் வேறுவேறு வடிவத்துக்கு மாறிக்கொண்டேயிருந்தன. முன்பு நான் அறிந்திருந்த தேவதைக்கதை ஒன்றை வேறோர் வடிவத்தில் சொல்லிக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவள் சொன்ன கதையில் உலவும் நிழல் தேசத்து உருவங்களை இதற்குமுன்பெப்போதோ பார்த்திருக்கிறேனென்று யோசித்துக்கொண்டிருந்தேன் நான். அப்போதுதான் கவனித்தேன். என் நிழல் வேறோர் வடிவத்துக்கு என் உருவத்தை மாற்றிக்கொள்ளத் துவங்கிவிட்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாய்.

- கிருத்திகா தாஸ்

Pin It