ஒரு மாத காலமாக திருவல்லிக்கேணி அனைத்து மூத்திரச் சந்துகளில் எல்லாம் நுழைந்து கடைசியாக இந்த அறையைக் கண்டு பிடித்தேன். வீட்டுக்காரர் தயங்கியபடியே “உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன சார். எனக்கும் எம் மச்சானுக்கும் ஆரம்பத்தில் இருந்தே துளியும் ஆகாது. எங்கிட்டே அவன் கைமாத்தா வாங்குன ஒரு லட்சத்தை நான் அதட்டிக் கேக்க, இந்த வீட்டிலே பேய் இருக்குன்னு ஒரு வதந்தியை ஊருக்குள்ளே கிளப்பிட்டு போயிட்டான். அதை நம்பி யாரும் வாடகைக்கு வரதில்லே. நானும் அலுத்துப் போய் ஒரு வருஷமா வாடகைக்கு அந்த ரூமை விடலை. நீங்க வந்து கேக்கறீங்க. இல்லைன்னு சொல்ல முடியலை”என்றவாறு கைகளைப் பிசைந்துகொண்டு நின்றார். நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.

window 275பர்ஸில் இருந்து இருபது ஐநூறு ரூபாய்களை எடுத்து அவரின் கைகளின் திணித்தேன். "இதை அட்வான்ஸா வைச்சுக்கோங்க. வாடகை பத்தி கவலை இல்லை" என்றேன். வீட்டுக்காரர் மறுபடியும் தொடர்ந்தார். “ராத்திரி வாசல் கதவை தொறந்தே வைச்சு தூங்குங்க. ரூமுக்குள்ளே ரொம்ப புழுக்கமா இருக்கும். நான் கீழேதான் படுத்திருப்பேன். எந்த விதமான பயமும் கிடையாது” என்று சாவியைக் கொடுத்து விட்டு படிகளில் இறங்கினார்.

இருபதிற்கு பத்துக்கு ஒரு பெரிய அறை. சாலையைப் பார்த்தவாறு ஒரே ஒரு ஜன்னல். மற்றபடி இறுக்கமான அறை. காற்று வருவதற்கு சாலையைப் பார்த்தவாறு அந்த ஒரு ஜன்னல்தான் இருந்தது. அதை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும். நுழைந்தவுடன் இடது பக்கத்தில் ஒரு சோஃபா. ஜன்னலிற்கு அருகில் உடையும் தருவாயில் இருக்கும் மூன்று பிளாஸ்டிக் சேர்கள். அடுத்த நாளே எனது ஆகப் பெரும் சொத்தான கருப்பு சூட்கேஸுடனும் ஒரு மடிக் கணினியுடனும் அந்த அறைக்குக் குடி புகுந்தேன். தயாரிப்பாளர் எனக்கு கொடுத்த ஒரு மாதத்திற்குள் நான் ஏற்கனவே கொடுத்த கதையை அவர் கூறியபடி மாற்றி எழுதித் தந்தாக வேண்டிய நெருக்கடியில் இருந்ததால் பேயைப் பற்றி சிந்திக்க எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

அடுத்த நாள் மழைக்கான எந்தவிதமான அறிகுறிகளும் தெரியவில்லை. காற்றிற்கு அந்த ஜன்னலின் கதவு வேகமாக அடித்துக் கொண்டது. ஜன்னல் வழியாக தெருவின் புழுதி அறையெங்கும் பரவியது.. வானம் மெல்லக் கருத்து மழைத்துளிகள் சரம் சரமாக வானிலிருந்து பூமிக்கு ஒரு தேவ தூதனைப் போல கீழே இறங்கி வந்தது. ஒரிரு மழைத் துளிகள் ஜன்னல் கம்பிகளில் வழிந்து கீழிறங்கி சுவரை நனைத்தது. பாலை எடுத்து கார்ன்ஃப்ளாக்ஸ் இருக்கும் அந்தப் பீங்கான் கோப்பையில் சிறிது ஊற்றிக் கொண்டேன். முன்பு போல எனக்கு அதில் ஆப்பில் துண்டங்களையோ செர்ரி பழங்களையோ கலந்து உண்ணும் மன நிலையில் நான் இல்லை. பாலில் இருக்கும் கார்ன்ஃப்ளேக்ஸ் மிருதுவாகவும் இல்லாமல், மொறமொறப்பாக இல்லாமல், அரைப் பதத்திற்கான நேரத்தைக் கடக்க ஜன்னல் வழியாக மறுபடியும் வந்து பார்த்தேன்.

எதிரில் ஒரு நாயர் நடத்தும் டீக்கடையில் வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் வந்தபடி இருந்தார்கள். தகரத்தில் எழுதி இருந்த ‘அம்மு டீக்கடை’ போர்டு காற்றிற்கு முன்னும் பின்னும் ஆடி சப்தம் எழுப்பியபடி இருந்தது. சாலையின் நடுவில் ஒரு வெள்ளை மாருதி கார் நின்றுகொண்டிருந்தது. காரின் ஜன்னலின் வழியாக ஒரு சிறுமி கையை நீட்டி மழையை ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு கருப்பு நாய் மழைக்கு முழுவது நனைந்து குப்பைத் தொட்டிக்கு அருகில் சாரலுக்கு எதிர் திசையில் நடுங்கிக்கொண்டு நின்றிருந்தது. எதிர் வீட்டுச் சிறுவன் மழையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான். அந்தக் கார் கிளம்பிய பிறகு, நான் மேஜைக்கு மீண்டும் திரும்பினேன். நான் எதிர்பார்த்த இளமுதிர் பக்குவத்தில் கார்ன்ஃபிளேக்ஸ் இருந்தது. பிளாஸ்டிக் சேரை ஜன்னலிற்கு அருகில் இழுத்து அதில் அமர்ந்தேன். மழையின் மொத்தக் குளிர்ச்சியும் ஜன்னல் வழியாக நுழைந்தது.

நாயர் கடைக்கு அடுத்து இருக்கும் பேப்பர் கடையில் அன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் கொட்டை எழுத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த அந்த நடிகை இன்று காலை இறந்துவிட்டாள். மூப்பின் காரணம் என்று எஃப் எம்மில் கூறினார்கள். என்னால் அந்தக் காரணத்தை துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் கணக்கில் எழுபது வயது அவ்வளவு பெரிய வயதில்லை. வேறு ஏதாவது காரணம் இருக்கும். உண்மையான காரணத்தை மறைத்து விட்டார்கள். அந்த நடிகைக்கு பதினாறு வயதிருக்கும் போதே உச்சத்தில் இருந்தவள். எனக்கும் அவளுக்குமான வயது வித்தியாசம் கூட ஒன்றோ இரண்டு வருடங்கள்தான் இருக்கலாம். அந்த நடிகையின் மரணம் பற்றி பேஸ்புக்கில் பதிந்தேன். அதற்குள் யாரோ ஒருவன் அந்த நடிகையின் சரித்திரத்தையே புரட்டிப் போட்டு எழுதி இருந்தான். அதற்கு உடனே ஏராளமான லைக்குகள் குவிந்தது. நானும் ஒன்று போட்டு வைத்தேன். உடனே என் பதிவிற்கும் அவனும் ஒரு லைக் போட்டான்.

வீட்டு சொந்தக்காரர் மாடிப்படிகளில் வந்து கொண்டிருந்தார். “ராமநாதன் சார், வெளியே எங்கேயும் போகலையா”? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவர் குடையை மடித்து மூலையில் வைத்து தோளில் இருக்கும் துண்டில் தலையை துவட்டிவிட்டு முகத்தையும் துடைத்துக் கொண்டார். மூக்குக் கண்ணாடியை எடுத்து அழுத்தி துடைத்து மறுபடியும் மாட்டிக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்தவர், என்னருகில் வந்து “சிகரெட் இருக்கா?” என்று கேட்க, ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த என் சட்டையில் இருந்து எடுத்துக் கொடுத்தேன். ஃபில்டரை வாயில் வைத்து, என்னை குறும்பாக பார்த்துச் சிரித்தார். மேஜை டிராயரைத் திறந்து தீப்பெட்டி எடுத்து பற்ற வைத்தேன்.

“ராமநாதன் சார், உங்க கதை ஒன்னை நேத்து விகடனில் படிச்சேன். ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. ஒரு கதைக்கு எவ்வளவு கொடுப்பாங்க?”. அவரின் கேள்விக்கு உடனே என்னால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. சிறிது நேர அமைதிக்குப் பிறகு, நான் ஜன்னலைப் பார்த்தவாறு நின்றேன். எதிரில் இருக்கும் வீட்டிலிருந்து அந்தப் பெண் கதவைப் பாதி திறந்து எட்டிப் பார்த்தாள். ஐம்பது வயதிருக்கும். தாட்டியான உடம்பு வாகு. திண்ணையில் எதையோ கண்களை சுழற்றித் தேடியவள், தலையை உயர்த்தி ஜன்னலைப் பார்த்தாள். சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தவள், உள்ளே சென்று மீண்டும் கதவை மூடிக்கொண்டாள். என் பின்புறம் நின்றுகொண்டிருந்த வீட்டுக்காரர் “என்ன ராமநாதன் சார். அங்கே என்ன பன்றீங்க ” என்று கேட்க, “ஒன்றுமில்லை” என்று அவர் பக்கம் திரும்பினேன்.

“வாங்க ராமநாதன் சார், எதிரில் இருக்கும் நாயர் டீக்கடையில் ஒரு லெமன் டீ குடிச்சிட்டு வரலாம். மழைக்கு ரொம்ப இதமா இருக்கும்” என்றார். அவருடைய அழைப்பை மறுக்க முடியாமல் அவரைப் பின் தொடர்ந்தேன். நாயரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். “எழுத்தாளர் ராதுவை நெங்களுக்கு தெரியுமா? அத்தேகம்தான் இவர்” என்று அரைகுறை மலையாளத்தில் பேசினார். “ஓ” என்று ஒற்றை எழுத்தில் வியப்பை சுருக்கிக் கொண்டு வேகமாக டீயை ஆற்றிக் கொண்டே என்னைப் பார்த்து சிரித்தார். இரண்டு சுவர்களின் நடுவில் “சிகரெட் புகைக்காதீர்கள்” என்ற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. அதற்குக் கீழே இருக்கும் இரண்டு மரச் சேரில் எப்போதும் யாராவது சிகரெட் புகைத்துக் கொண்டோ அல்லது டீ குடித்துக் கொண்டோ இருந்தார்கள். கடைக்கு முன் போடப்பட்டிருக்கும் நீளமான மரப் பெஞ்சில் அன்றைய தினத்தந்தி மிகவும் நைந்து போய் கிழியும் தருவாயில் இருந்தது.

லெமன் டீயை மிகவும் பவ்யத்துடன் எங்களிடம் கொடுத்த நாயர் “சாரோட ஸ்தலம் எதானு?" என்று கேட்டார். “நாகர்கோயில்” என்றவுடன், “அதானு விஜாரிச்சது. எண்டே ஸ்தலம் குருவாயூர் அடுத்து கோட்டப்படியானு” என்று தன்னை பரிச்சயப்படுத்தி என் அருகில் உட்கார்ந்து கொண்டார். மலையாள இலக்கியம், வைக்கம் முகமது, தகழி சிவசுந்தரம் பிள்ளை என்று எங்களின் பேச்சு நீண்டு கொண்டே போய் சமகால எழுத்தாளர்கள் பக்கம் திரும்பியது. என் கையில் இருக்கும் காலி கிளாஸைப் பார்த்தவுடன் கடைச் சிறுவனிடம் “மூணு லெமன் டீ” என்று கூறிவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

வீட்டுக்காரர் எங்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் ஒரு கவனிப்பாளராகத்தான் இருந்தார். நான் கிளம்பும் சமயம் அவருடைய அருகில் வந்தமர்ந்த இளைஞனிடம் “உன்னை எங்கெல்லாம் தேடறது. எங்கே போனே? எத்தனை தடவை ஃபோன் பன்றது. போன வருஷம் மாடி ரூமுலே ரோட்டைப் பாத்து இருந்த ஒத்தை ஜன்னலே எடுத்து சுவர் வைச்சயே ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேட்டார். பிறகு அவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல், என்னைப் பார்த்து “சார்தான் புதுசா குடிவந்திருக்காரு. மோட்டர் ரூமிலே இருக்கற ஜன்னலை எடுத்து அதே இடத்துலே நாளக்கே வைச்சுடு” என்றார்.

நான் சிறிதும் தாமதிக்காமல் நாயர் கடையிலிருந்து என் அறைச் சுவரைப் பார்த்தேன்.. முழுவதும் நீல டிஸ்டெம்பர் அடித்த சுவர் மட்டுமே தெரிந்தது. மழைக் காற்றிற்கு ஜன்னலின் கதவு மூடித் திறக்கும் சப்தம் மட்டும் தொடர்ந்து எனக்கு மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

- பிரேம பிரபா

Pin It