(அண்மையில் ஈழத்தில் மறைந்த முன்னாள் போராளி அ.டேவிட்டின் நினைவாக…)

பரபரப்பான நகர இரைச்சல்களையும், அவசர கதிகளையும் புறக்கணித்தவாறு இருந்தது தெருவின் ஒடுங்கிய அந்த கீற்றணிந்த வீடு. நானும், சுந்தரும் கதவருகே நின்று மரியாதை நிமித்தமாக தட்டுவதற்கு முன்பாகவே அது திறந்து கொண்டு, இருமல் சத்தம் ஒன்று தொடர்ச்சியாக எங்களை கடந்து வெளியேறியது. உள்ளே பரவிய திடீர் வெளிச்சத்திற்கு கயிற்றுக் கட்டிலில் கிடந்த அந்த உருவம் சற்றே அசைந்து கொண்டு எழ முயன்றதை லேசான இருளை மீறித் தெரிந்தது. ”யாரது! என்றார் அவர். சற்றே நிதானமான அதே இருமல் குரலில்.

சுந்தர் முந்திக் கொண்டு “நாங்கதான் அய்யா!” என்றார். நேற்றைக்கு முந்தய தினம்தான் நாங்கள் அவருடன் நண்பர் ஒருவரின் தொலைபேசி வழி அறிமுகமாகியிருந்ததால் சுந்தரின் குரல் அடையாளமே போதுமானதாயிருந்திருக்க வேண்டும்! மெல்ல எழுந்து எங்களை வரவேற்று எதிரே இருந்த சிறிதும் பெரிதுமாக உடைந்த இரு கதிரைகளை காட்டி அமரச் சொன்னார் அவர். ”என்கிட்ட என்ன விசேடமிருக்கின்னு வந்திங்க!” என்று கம்மிய குரலில் வெளுப்பேறிய கால வரிகள் நிறைந்த அந்த முகத்தை நாங்கள் ஏறிட்டுப்பார்க்கவும் மெல்ல வெண்தாடிக்குள்ளாக லேசாக சிரிப்பதை காண இயலுவதாய் இருந்தது.

முதுமையின் வீச்சமும், பழந் துணிகளின் வாடையும், வெளவால்களின் எச்சங்களும் கலந்த அந்த அறையில் எழுந்த நெடியினையும் கடந்து அந்த பெரியவரின் புன்னகை எழுந்து போகவிடாத புது நறுமணத்தையும், வெளிச்சத்தையும் சேர்ப்பதாகவிருந்தது. அடுக்குகளில் பெரிய, பெரிய புத்தகங்கள் தூசு படிந்து பழுப்பேறிக் கிடக்கின்றன ”என்ன பாக்கறிங்க எண்ட சுவாசமே இவையள்தான்!” என்கிறார். அவரிடம் எஞ்சியிருக்கும் யாழ் தமிழில். அந்தனி சாமுவேல் இராசதுரை என்ற அ. துரை. துரைமாஸ்றர் என்று புலத்திலும், களத்திலும் அழைக்கப்பட்ட அ. துரைக்கு, தற்போது எங்கள் எதிரே தளர்ந்து அமர்ந்திருக்கும் அவருக்கு வயது என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் முன்பாகவே “எண்பத்தைந்து வயது..!" என்று தரையைப் பார்த்தவாறு மெல்லிய நடுங்கும் குரலில் சொல்கிறார். கைகள் கட்டிலின் மூங்கில் மரங்களை உறுதியாக பற்றிக் கொள்ள தொடர்கிறது எங்களிடம் பகிரும் அவரது வாழ்வின் கணங்கள்.. இடை இடையே சிறு புன்னகையும், சீற்றமும், நம்பிக்கையற்றதுமாக மாறி மாறி ஒலிக்க எங்களுடன் நட்பு ரீதியிலான அவரது உரையாடல் அப்படித்தான் தொடங்கிற்று.

"இலங்கை தமிழ் பகுதிகளில் சிங்கள இனவெறி ஒரு மறைமுகப் போராக மாறிக் கொண்ட நாளில் தமிழர், வீடு வாசல்கள், காணி, வளவுகள், கடை வீதிகளென பறித்துக் கொண்டு அவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது; பொருட்கள் சூறையாடப்பட்டன; வீடுகள், வீதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தமிழர் பலரும் படுகொலைக்கும், பெண்கள் படையினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்கும், சிறார் எரியும் தீயிலும், சாலை போடுவதற்கு வைத்திருக்கும் தாரிலும் முக்கி கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் ஏதுமற்ற அகதிகளாக, ஏதிலிகளாக ஆயினர்.

கண்முன்னே தமது உறவுகளும், ஊரினரும் இனவெறிக்கு பலியானதை, ஊர்விட்டு ஊர் அகதியாக இடம் பெயர்ந்து செல்வதை கண்ணி வெடியில், கால் அகற்றப்பட்டவனின் இயலாதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அ.துரையின் வாழ்வின் பல தருணங்களினூடே சாவின் வலிய கரங்கள் அவரது இள வயது உடலில் ஆறா வடுக்களை கீறிச் செல்லவே செய்தது.

படையினரின் ஒரு அதிகாலை தேடுதல் வேட்டையின் போது அவரது குடும்பத்தினர் உட்பட வேறு மூன்று குடும்பங்களும் கைது செய்யப்பட்டு அருகிலிருந்த தேவாலய மைதானத்திற்கு இழுத்துச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். துரை அப்போது மேல்படிப்பிற்காக அய்ரோப்பிய நாடொன்றில் இருந்தவர் பாதியில் திரும்பினார். தாம் கேள்விப்பட்டதற்கும் மேலாக நாட்டின் நிலை மோசமடைவதைக் கண்டு மனம் வெதும்பினார். உடனடியாக தமது மக்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற மனத்துடிப்பு அவரை ஏதிலியர் புனர்வாழ்வுக் கழகம் ஒன்றை அமைக்கத் தூண்டியது. கட்சி சார்பற்ற சில அயலக மற்றும் உள்ளூர் நண்பர்கள் உதவியுடன் துரை, செயலாற்றத் தொடங்கினார். விரைவில் அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இழப்பதற்கு ஏதுமற்ற உழைப்பை மட்டுமே உடைமையாகக் கொண்ட ஏதிலியர் இரவு பகலாக பாடுபட்டு கிடைத்த நிலத்தை அட்சயப் பாத்திரமாக மாற்றினர்.

நம்பிக்கைக்குரிய நண்பர்களுடன் துரையின் அப்போதைய எண்ணமெல்லாம் மக்களை ஆசுவாசப்படுத்துவது; நம்பிக்கை கொள்ளச் செய்வது என்பதாக இருந்தது. ஆனால் இந்தப் பணிகள் யாவையும் ஒரு மக்கள் அரசு செய்ய வேண்டிய ஒன்றாகும். தனி மனிதராக துரை துணிந்து மேற்கொண்ட முயற்சிகள் சிங்கள இனவெறி அரசை ஆத்திரப்படுத்துவதாகவே அமைந்தன. அரசதிகாரம் துரையின் மீது காட்டமாக இருந்ததோடு, அவரை காவலில் வைக்கும் நாளுக்காக காத்திருந்தது.

இதற்கிடையே, தமிழர் விரோதப் போக்கில் பயணித்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அரசு, அவர்களது அரசியல் உரிமைகளை மறுத்ததோடு, காந்திய மென்முறை வழியில், தெருவில் இறங்கிப் போராடியோரையும் கைது செய்து காவலில் வைத்து கடும் வதைகளுக்கு உட்படுத்தியது. தமிழ் இளைஞர்கள் வேறு, தமது கல்வி வாய்ப்பும், பணியிடத்தில் சிங்கள மொழித் திணிப்பும், வேலை மறுப்பும் அவர்களை முற்றிலும் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு உந்தித் தள்ளியது.

ஆனால் இருவேறுபட்ட போராட்டங்களுக்கு நடுவே துரையின் ஆக்கப்பூர்வமான பணிகள் இரு போராட்டக்காரர்களாலும் ஆதரிக்கவும் மேற்கொண்ட பணிக்கான உதவிக்கும் துணையாக இருந்தார்கள். துரையைப் பொருத்தவரை மக்களுக்கான உதவியை அரசே செய்வதானாலும் அதைப் பெற்று ஏதுமற்ற அவர்களுக்கு புதுவாழ்க்கையைத் தொடர உதவுவதற்குத் தயாராக இருந்தார். வளர்ந்து வரும் ஆயுதக் குழுக்களாக இருந்தாலும் சரி அமிர் போன்ற அரசியல் தலைமையானாலும் சரி மக்களுக்காக தம்மை துரோகி என்றே சொன்னாலும் அதையும் ஏற்கத் தயாராகவே இருந்தார்.

அப்படி ஒரு காலமும் வரத்தான் செய்தது. தமிழ் இளைஞர் முன் அன்றைக்கு இரண்டுத் தெரிவுகளே இருந்தன. ஒன்று படையினரின் கைதுக்கு ஆளாகி சாவது அல்லது ஆயுதக் குழுக்களில் சேர்ந்து பயிற்சி எடுப்பது. பலரும் கைதாவதை விரும்பவில்லை. தமிழர் பகுதிகளில் அரச அடக்குமுறையை எதிர்த்து பலரும் தனித்தனி குழுக்களாக பொலீசாருக்கு எதிராகவும், படையினருக்கு எதிராகவும் தாக்குதலில் இறங்கியிருந்தனர். அது மட்டுமல்லாது, அவரவர்களுக்கு என பல்வேறு சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை வரித்துக் கொண்டு ஆயுதங்களைக் காவிக் கொண்டு திரிந்தனர்.

ஒரு முறை தமிழ் ஆயுதக் குழுவொன்று ஒரு வங்கியொன்றில் கொள்ளையடித்துவிட்டு சிங்களக் குடியிருப்பு பகுதியிலும் புகுந்து சில சிங்கள குடும்பங்களையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி கொன்றுவிட்டுத் தப்பினர். அது அப்போதைய நாளிதழ்களிலும் வந்து பரபரப்பாக பேசப்பட்டதுதான். ஒரு சூதும் அறியாத அந்த சிங்களக் குடும்பங்கள் இனவெறி அரசால் புதிய குடியேற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் நாட்டின் தெற்குப் பகுதியொன்றிலிருந்து வலுவில் கொண்டுவந்து குடியமர்த்தப்பட்டவர்களாவர். துரை அப்போது அப்பகுதியின் அருகில் இருந்த புனர்வாழ்வுக் கழகத்தின் பண்ணையில் இருந்தார். இதை கேள்விப் பட்டதும், விரைந்து சென்று பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னதோடு, தேவையான உதவிகளையும் செய்தார். இதை அறிந்த தொடர்புடைய ஆயுதக் குழு துரையை இனத் துரோகி என்று பிரசாரம் செய்ததோடு, அவருக்கு மறைமுக எச்சரிக்கையையும் விடுத்தது. எனினும் கழகத்தில் உள்ளோரும், மற்றவர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தமையால் அவர் இது குறித்து கவலைப்படுபவராக இருந்தாரில்லை.

மாறாக கிழக்கிலும், வடக்கிலும் இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டோரைக் கொண்ட மற்றொரு பண்ணையை வன்னியில் துவங்கி நடத்திக் கொண்டிருந்த நாளில்தான் அரசின் உளவுப் பிரிவு பொலீசாரால் துரை கைது செய்யப்பட்டார். அது அவரது வாழ்வில் மறக்க இயலாத தனது கைகளுக்கு வசப்படாத மற்றொரு நாளும் கூட. மற்றொரு நாள் என்று சொல்வதற்குக் காரணம், துரையை பொருத்தவரை அக்கைதுக்குப் பிறகே கடலில் மாட்டிக் கொண்ட படகென அவரது காலம் இங்கும் அங்குமாக இழுபடத் தொடங்கிய அவலம் நேர்ந்தது எனலாம்.

பண்ணையின் உழுவேலைகளை பார்வையிட்டு வந்து மதியம் உண்டுவிட்டு, சிறிது ஒய்வு கொண்டவரைத் தேடி சிலர் வந்திருப்பதாக பண்ணை ஆட்கள் வந்து சொல்லவும், அவர்களை வரச் சொல்லி எழுந்து கூடத்திற்கு வந்தார். வந்தவர்கள் யாரென்று விரைவில் துரைக்கு விளங்கிற்று. அவரால் அவரது சட்டத்தரணியைக் கூட தொடர்புகொள்ள அவர்கள் அனுமதிப்பதாய் இல்லை. பண்ணைக்குள் துரையின் கைது காட்டுத் தீ போல பரவி ஆட்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். எனினும் தொடர்ந்து கவச வண்டிகளில் வந்து இறங்கிய படையினர் அவர்களை களைந்து செல்ல துவக்கு முனையில் மிரட்டவும் ஆட்கள் கலைந்து ஒடி சிதறினர். அன்றைக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த காலமாதலால் எவரையும் எந்த கேள்வியுமற்று கைது செய்து காவலில் வைக்கும் அதிகாரம் பொலீசாரும், படையினரும் இணைந்த கூட்டுத்தலைமைக்கு வழங்கப்பட்டிருந்தது. எனவே துரையின் கைதை எதிர்க்க யாதொருவரும் முன்வருவதாயில்லை. பத்திரிகை தணிக்கை முறை நடப்பில் இருந்தமையால் யாதொன்றும் வாய் திறப்பதாயில்லை. எனினும் கொழும்பிலிருந்து வரும் ‘அய்லென்ட்’ போன்ற ஒரு சில ஆங்கிலப் பத்திரிகைகள் மட்டுமே சிறிய செய்தியாக ஒரு மூலையில் அச்செய்தியை பிரசுரித்திருந்தன. 

அன்றைக்கு வடக்கில் நிகழ்ந்த பொதுமக்களின் மீதான படையினர் மற்றும் பொலீசாரின் தாக்குதலுக்குப் பதிலடி தரும் இளைஞர் குழுக்கள் அதன் பிறகு வன்னி காடுகளுக்குள் தலைமறைவாகிவிடுவது வழமை. அந்த வகையில் வன்னிக் காடுகளுக்குள் தலைமறைவாகி ஆயுதப் பயிற்சி பெறும் குழுவொன்றை தேடிச் சென்ற பாஸ்தியம்பிள்ளை என்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அடங்கிய சிறு பொலீஸ் படையொன்று தலைமறைவு இளைஞர் சிலரால் மடுகாட்டுப் பகுதியில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இது ஜெயவர்த்தன அரசிற்கு கடும் சீற்றத்தைக் கொடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அவர்களை ஆறுமாதத்திற்குள் ஒழித்துக் கட்டுவேன் என்ற சபதமேற்ற சனாதிபதி, தமது மருமகனும் படைத்தளபதியுமான திஸ்ஸசவீரத்துங்கவை முப்படை அடங்கிய கூட்டுத்தலைமைக்கு பொறுப்பேற்கச் செய்து சகல அதிகாரங்களையும் வழங்கி, வடபகுதிக்கு அனுப்பி வைத்தார். கூடவே பயங்கரவாத தடைச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதி இளைஞர்கள் கேள்வியற்ற கைதுக்கும், காவல்நிலைய மரணங்களுக்கும் ஆளானார்கள். யாழ்ப்பாணம் குருதியில் உறைந்து கிடந்தது.

அதற்கும் அமைதியான முறையில் அகதிகளின் மறு வாழ்விற்கு உதவிக் கொண்டிருந்த துரைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?! இருந்தது, துரைக்கு பண்ணை இளைஞர்களோடும், அதற்கு வெளியில் உள்ள இளைஞர்களோடும் நல்ல தொடர்பு இருந்தது. துரையின் மேலான அனுபவங்களை கேட்கவும், பெறவும் பலரும் வருவதுண்டு. அந்தவகையில் காவல் கண்காணிப்பாளர் பாஸ்தியம்பிள்ளை கொலையில் தொடர்புடைய இளைஞர் சிலர் பண்ணைக்குள் வந்து போயிருக்கலாம். ஆனால் அவர்களை துரை அறிந்தவரல்லர். எனினும் பொலீசார் அக்குற்றச்சாட்டின் பெயரிலேயே அதாவது கொலையாளிகளுக்கு துரை, பண்ணையில் தங்குவதற்கு இடம் கொடுப்பதோடு ஆயுதப் பயிற்சிக்கும் உதவுவதாக கூறியே கைது செய்திருந்தனர்.

துரை, பிரபல வதைக்கூடமான கொழும்பின் நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு பலவிதமான வதைகளுக்கும் அடி உதைக்கும் ஆளாக்கப்பட்டார். இரப்பர் தடியாலும், பொல்லுகளாலும் தாக்கப்பட்டார். அவரை நிர்வாணப்படுத்தி, இரவு முழுவதும் தலைகீழாக தொங்கவிட்டிருந்தனர். பொலீஸ் உயரத்தியட்சகர் உடுகம்பெல துரையை விசாரிப்பதில் பொறுப்பெடுத்துக் கொண்டார். கொடும் வதைகளுக்குப் பெயரெடுத்தவர் அவர். அவரது வதை காரணமாகவே பல இளைஞர்கள் போராளிகளானதாக சொல்லப்படுவதில் உண்மை இருக்கவே செய்தது. எனினும் இதற்கெல்லாம் மேலாக துரை கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டபோதே சாவின் கருமேகங்கள் அவரை சூழ்ந்து கொள்வதாவதாக இருந்தது.

தனி நாடு கேட்டு ஆயுதமேந்திப் போராடிய பல முன்னணிப் போராளி குழுக்களின் உறுப்பினர்கள் அரசியல் கைதிகளாக வெளிக்கடை சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். துரையும் வேறு சில போராளிக் குழு உறுப்பினர்களுடன் அடைக்கப்பட்டிருந்தார். உடல் தளர்ந்திருந்தாலும் உள்ளம் என்னவோ வெளியில் வந்து மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகள், வேலைத் திட்டங்கள் பற்றியே சுற்றி வந்து கொண்டிருந்தது. உடனிருந்த போராளி இளைஞர்கள் அவரை மரியாதையுடன் நடத்தியதுடன் அவரது மேலான கருத்துக்களை செவிமடுப்பதில் ஆர்வமுடையவராகவும் இருந்தமையால் சிறைக்குள்ளே அவர் அவர்களால் ‘துரை மாஸ்றர்’ என்றே அழைக்கப்பட்டார். துரையின் மனது அவரை அறியாமலே விடுதலை சிறகுக்காக ஏங்கியபடியிருந்தது.

துரைக்காக பல முன்னணி சட்டத்தரணிகள் சமூகமளிப்பதை மறைமுகமாக அரசு மிரட்டல் வழி தடை செய்தது. விடுதலைக் கூட்டணி தலைவர்களும் பிரபல சட்டத்தரணிகளுமான கரிகாலன், சிவசிதம்பரம் போன்றோர் துரைக்கு உதவ முன்வந்தனர். எனினும் போராளி இளைஞர்களைக் காணும்போது விடுதலை ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. தம்மை விட அவர்களது நாட்களே சிறையில் வீணே கழிவதாக மனம் கலங்கினார். மேலும், ‘தாம் விடுதலைப் போராளிகள், ஒருபோதும் குற்றவாளிகள் அல்லர்!’ என்ற அந்த வீர்ர்களின் உக்கிர முழக்கம் அவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது. குறிப்பாக நீதிமன்றத்தில் ஓர் அறப் போராளியாக நின்று உறுமிய தங்கத்துரையின் பேச்சு சிறைக்கும், நீதிமன்றத்திற்கும் அப்பால் யாதொருவரையும் தாயக விடுதலைக்குத் தம்மை அர்ப்பணம் செய்யத் தூண்டுவதாய் அமைந்தது. கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துரையின் கைது பற்றி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். அதற்கு எந்த மரியாதையும் இருக்கவில்லை. மாறாக கூட்டணியினர் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சிங்கள இனவாத உறுப்பினர்கள் பதிலுக்கு கூச்சலிட்டனர்.

அவ்வேளையில்தான் கொழும்பை நரகமாக்கும் நிகழ்வொன்று வடக்கே யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் நடைபெற்றது. முதன் முதலாக போராளிகளால் படையினரின் கவசவாகன அணியொன்று கண்ணிவெடிக்கும் கெரில்லாத் தாக்குதலுக்கும் உள்ளானதில் 13 படையினர் தலத்திலேயே கொல்லப்பட்டனர். இதை சாட்டாக் கொண்டு, கொழும்புவில் வன்முறை வெடித்தது. கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து இனவெறி ஊட்டப்பட்டது. அரசே காடையர்களைக் கொண்டு தமிழர்களது, வீடுகள், வணிகத் தலங்கள், வழிபாட்டிடங்கள் என்பவற்றை தாக்குவதற்கு மறைமுக மற்றும் நேரடி ஆதரவளித்தது. நன்கு திட்டமிடப்பட்டு வழிநடத்தப்பட்ட அவ்வன்முறையில் தமிழ்ப் பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலைக் கொண்டு வீதி, வீதியாக, வீடு, வீடாகத் தேடி பொலீசார் மற்றும் காடைக் கும்பல்களால் அடையாளம் காணப்பட்டுத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். பொறளை சந்தியில் தொடங்கிய கலவரம் பெரும் தீயென பற்றிப் படர்ந்தது. கொழும்பின் தமிழர் பகுதிகளில் அப்போது கொடுரமான கொலைகள் அரங்கேறின!"

தமக்கு எதிரே மீள அந்நிழ்வுகள் நடந்தேறுவது போன்ற துயர நினைவோடு துரைமாஸ்றரின் குரல் கமறலாக கீச்சிட்டு வருகிறது. லேசாக இருட்டத் தொடங்கிய அதே வேளை, தொலைவில் எங்கோ தர்கா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து தொழுகை பாடல் எழுந்தது. சுந்தர் கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

துரைமாஸ்றர் தொடர்ந்தார், “தமிழ் பெண்டுகள், கொமருகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானவை, கொச்சிக்கடை வீதியில் தமிழ்ப் பெண்களின் மார்புகள் அறுக்கப்பட்டு இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும் எண்டு எழுதி வைத்தவை சிங்களக் காடைகள்..! எனக்குத் தெரிந்த மிகப்பெரிய இந்தியத் தமிழ் தொழிலதிபர்கள் அவர்களது நிறுவனங்கள் சூறையாடப்பட்டதில் ஒரே நாளில் ஒட்டாண்டியாகி அகதி முகாம்களில் தஞ்சமடைந்தவை. வன்முறைக்குப் பயந்து காரில் தப்பிய தமிழ்க் குடும்பம் ஒண்டு.. காருடனே வைத்து எரிக்கப்பட்டது.! ”

“அங்கு சுற்றி இங்கு சுற்றி வன்முறை சூறாவளி கடைசியில் நாங்கள் இருந்த வெளிக்கடை சிறைக்கதவையும் உடைச்சுக் கொண்டு உள்ளே புகுந்தது…” துரை இப்போது கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு தமது பரபரப்பை சற்றே அடங்கும் வரை காத்திருந்துவிட்டு, பரவிவரும் இருளை வெறித்தபடி உதடுகளில் முணுமுணுக்கிறார். "அண்டைக்கு ஆளும்கட்சியின் முக்கிய மந்திரி சிரில் மாத்யூவோடை தொண்டர் படையும், காடையர் படையும் இனவெறி முழக்கமிட்டபடியே சிறைக் கதவை தள்ளி உதைத்தக் கொண்டு திமுதிமுவென்று புகுந்துந்தாங்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்குறாங்கள்..! சில சிறைக் கூடங்களின் திறப்புகள் அவைகளிண்ட கைகளில் இருக்கின்றன. அப்பதான் வடிவா வௌங்கிப் போடுது.. . இவவுக்கு அதிகாரிங்க ஒத்துழைப்பு இருக்குங்கறது..! பலரும் அலறும் சத்தம் கேட்குது.. எனக்கு இடதுபுறமா மூணாவது பிளாக்குளதான் குட்டிமணி, ஜெகன் போன்றவங்க இருந்தாங்க.. அந்தக் கொட்டடியில இருந்துதான் பெலத்த சத்தம் கேட்டுச்சு.. அவங்க போயிட்டாங்க.. அதிகாரிகள்ளாம் திரும்பி வந்து அங்க எதுவுமே நடக்காத மாதிரி நடந்துகிட்டாங்க.. எல்லாம் ஒஞ்சுதுன்னு நெனைச்சப்பவேதான் ஒருநாள் விட்டு மறுநாள் மீளவும் அந்த வெறிபிடிச்ச காடைக் கூட்டம் வந்தவை! .."

தெருவிளக்கின் வெளிச்சம் இருள் படர்ந்த அவரது வீட்டினுள் சிறிது பரவியிருக்க, மெல்லத் தடவி (உதவ எழுந்த எங்களை மறுத்துவிட்டு) எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்தமர்கிறார். மங்கிய வெளிச்சம் அவரது இமைத்து மூடும் கண்களில் நீர் படந்து நிற்பதை காணக்கூடியதாய் இருக்கிறது.

”இந்த முறை ரொம்பவும் அவதானத்தோடு மேலதிகமான ஆட்களோடை வந்தவை. நாங்க இருந்த அறைக் கதவின் திறப்பை வச்சிருந்த சிறைக் காவலர் பயத்தில ஒடிட்டதால ஒடைச்சே திறந்தாங்க.. அவையிண்ட கையில தடி, பொல்லு, இரும்பு கம்பி என சகல ஆயுதங்களையும் காவி வந்தான்கள்.. எங்கடை அறையில இருந்தவங்கள்ளாம் முக்கியமான மக்கள் தலைவருங்க.. அமைதிவழில நம்பிக்கை உள்ளவங்க.. அவங்களை எல்லாம் மிகக் கேவலமா அடிச்சுக் கொன்னாங்க.. நிராயுதபாணியான எங்களை எவ்வளவு எடுத்துச் சொல்லியும், கெஞ்சியும் விடல.. எல்லோரையும் கொன்னாங்க.. நான் இரண்ரொரு அடியிலேயே மயங்கிட்டேன் எண்டதால இறந்து போட்டன்னு நெனைச்சுப் போயிட்டாங்கள்.. கெதியா ஆமியும் வந்து கண்ணீர்புகை குண்டு வீசி கலைச்சதாலை அவங்கள் வெளிக்கிட நாங்கள் தப்பிச்சம்..! ” விரைத்த அவரது உடல் மெல்லத் தளர்கிறது..

”எங்கடை அருமையான போராளிகள் எல்லாம் அதிலை கொல்லப்பட்டாங்கள்.. குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை.. காந்தியவாதியும் என் நண்பருமான இராஜாபாதர்.. பிறகு, நாங்கள் மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டோம். நாங்கள் எண்டா.. பிழைச்சவங்க.. நிர்மலா நித்தியானந்தம்.. டக்ளஸ்.. வரதன்.. இப்படி அங்கைநிண்டுதான் எங்களை இயக்கங்களின்ரை ஆட்கள் வெளியிலை எடுத்தவை.. தங்களிண்ட உயிரைப் பணயம்வச்சி எம்மைக் காப்பாற்றியதாலை இந்தியா வந்த பிறகு அவைகளுக்கு நன்றி கடனாக இயக்க வேலைகள் கொஞ்சம் பார்த்தன்.. எண்டா அவை கசப்பான நாட்கள் எண்டுதான் சொல்லனும்.. இயக்கத்தாலை நான் பெரியவன் நீ பெரியவன் எண்டு கண போட்டிகள்.. தலைமைக்குப் பொருத்தமான திறமையான பொடியன்களை எல்லாம் போட்டுத் தள்ளினவை..! எனக்கும் குறிவைக்கப்பட்டதுதான்.. போதுமெண்டு விலகி வந்து கண காலம் ஆகிப்போட்டுது..! நினைக்கக்க எங்கட விடுதலையை நாங்களே சிறையாக கைவிலங்காக மாற்றிக் கொண்டோம் எண்டுதான் தோன்றிப் போடுது தம்பி..! எங்கடை தலைமுறைக்கும் போராட்டத்தை கைமாற்றித் தருவதை மட்டும்தான் செஞ்சிருக்கம் நாங்கள்..! ” எங்கள் கைகளை பற்றிக் கொண்டு நடுங்கும் கரங்களால் விடையளித்தார் துரை..!

தமிழீழத்தில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நாளில் ஏனோ என் மனமும், உணர்வும் எதிர்பார்த்திருந்தது போன்றே மிகச் சரியாக சுந்தரிடமிருந்து பதட்டத்துடன் பெரியவர் துரைமாஸ்றரின் மரணச் செய்தி வந்தது. ”இங்கேயெண்டா பொலீசார் எம்மை குற்றவாளிகளாப் பார்க்கிறவை, பொது மக்களெண்டா.. தங்கடை வரிப்பணத்திலை குந்தியிருக்கிற தண்டாமா நினைக்கிறவை.. எல்லாத்துக்கும் வரிசையால நிண்டு, நிண்டு களைச்சிப் போடுறப்ப அகதியா வாழறதுக்கு சொந்த நிலத்திலை சாகலாம் எண்டு தோன்றிப் போடுது தம்பி..!” அவரது வழியனுப்பில் கலந்து வந்த கந்தக வார்த்தைகள் அவை. இரவல் பூமின் குடிசையை விட்டு அவரது உயிர்ப் பறவை நிரந்தரமாகவே சிறகு விரித்துவிட்டது. களப் போராட்டத்தைவிட மனப் போராட்டம் வலியும் துயரும் மிகுந்ததுதான்..! துரைமாஸ்றரின் நித்திய விடுதலையை இனி யாராலும் பறித்தெடுக்க இயலாது என்றே தோன்றிற்று.

- இரா.மோகன்ராஜன்

Pin It