உலக அதிசயங்களு​ம் உடன் வந்த கதைகளும் - 2

ஒலிவியாவிற்கு அந்த இரவு நெடிய இரவாக இருந்தது. எவ்வளவு முயன்றும் தூங்க இயலாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். எழுந்து வந்து மொட்டை மாடியில் நின்று பார்த்தவளுக்கு மேகங்களும் மெதுவாக மிதந்து போய்க் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அதைப் பார்த்து ரசித்தபடி சிதறிக் கிடந்த விண்மீன்களை நேரக் கழிப்பிற்காக விளையாட்டாக எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் திடீரென்று அவளின் தலைக்கு மேல் வெகு சமீபத்தில் கடற்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து சென்றன‌. அவைகள் எழுப்பிய கீச்சுக் குரலால் நிலை தடுமாறி எண்ணிக்கைகளை மறந்து போன ஒலிவியா, தனக்குள் சிரித்தபடி முதலிலிருந்து மீண்டும் விண்மீன்களை எண்ணத் தொடங்கினாள். அடிவானத்தில் இருந்து கசிந்துருகிய பொன் வெளிச்சம் நம்பிக்கை அளிக்கும் விடியலின் மகிழ்ச்சியான முகவுரையாகத் தெரிய, தன் பார்வையை மெல்லக் கீழிறக்கி வலது கையால் தன் நிறைமாத வயிற்றினை வாஞ்சையுடன் ஒரு முறை தடவிக் கொடுத்தாள்.

colossium_rome1மார்க்கஸ் முதன் முதலாக அவளுக்கு வாங்கிக் கொடுத்த சந்தன நிற ஆடையைத் தேர்ந்தெடுத்தாள். இடுப்புப் பகுதியில் மட்டும் தையலை சிறிது பிரித்தவள் பல முறை அதை அணிந்து நிலைக் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டாள். குறைந்த அளவு ஒப்பனையுடன் இறுதியாக டோகா என்ற பெரிய சால்வையை போர்த்திக் கொண்டாள். அவளின் நிறை மாத வயிறு இப்போது அவ்வளவாகத் தெரியவில்லை என்பதை மறுபடியும் கண்ணாடி முன் நின்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள். சிறிது தூரம் நடந்தாலும் மூச்சிறைக்கும் நிறைமாதக் கர்ப்பிணி ஆனதால் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே விளையாட்டு அரங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சாலையில் எதிர்படுவோர்களிடம் எல்லாம் இன்று கேளிக்கை அரங்கில் தன் கணவன் மார்க்கஸ்தான் போட்டியிடப் போவதாகப் பெருமையாகக் கூறினாள்.

கேளிக்கை அரங்க நுழைவாயிலை அடைந்தவுடன், பருத்த அவளின் வயிற்றினைப் பார்த்த காவலன் “அம்மணி மன்னிக்க வேண்டும், நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இங்கு அனுமதியில்லை என்பது தங்களுக்குத் தெரியாதா?” என்றான். சிறிதும் நம்பிக்கையை இழக்காமல் ஒலிவியா தன் ஆள் காட்டி விரலில் அணிந்த மோதிரத்தை எடுத்து யாருமறியாமல் காவலனின் உள்ளங்கைகளில் திணித்து, இரு கைகளைக் குவித்து பணிவாக அவனை வணங்கி “அன்பான காவலரே, என் கணவன் மார்க்கஸ் இன்றைய போட்டியில் கலந்து கொள்ளப் போகிறார். அவரை நான் பார்க்கப் போகும் இந்த அரிய சந்தர்ப்பம் என் வாழ்க்கையின் கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கலாம். என்னை தயவு செய்து அனுமதி. அவரைப் பார்த்து நான் ஊக்குவிக்க வேண்டும்” என்று கண்களில் தளும்பிய நீருடன் மன்றாடினாள். அவளின் பரிதாபமான நிலைமையைப் பார்த்த காவலாளி மனம் இறங்கி “அம்மணி, அப்படி எனில் நீங்கள் நான்காவது மாடிக்குத்தான் போக வேண்டும். இந்த நிலைமையில் உங்களால் அத்தனை படியேற சாத்தியப்படுமா?” என்று மிகுந்த அக்கறையுடன் ஒலிவியாவிடம் கேட்டான். துளியும் தாமதிக்காமல் “நிச்சயமாக என்னால் முடியும் காவலனே. என் நன்றியை உனக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று நுழைவுச் சீட்டை அவனிடம் இருந்து பெற்றுக் கொண்டு மெதுவாகப் படியேற ஆரம்பித்தாள் ஒலிவியா.

ரோமில் 72 ஆம் ஆண்டு தொடங்கி 80 ஆம் ஆண்டு வாக்கில் கட்டி முடிக்கப்பட்ட திறந்த வெளி கேளிக்கை அரங்கில் ஒரே நேரத்தில் குறைந்தது 55000 பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க முடியும். மொத்தம் 80 நுழை வாயில்கள். அதில் ஒரு நுழைவாயில் அரசருக்கான பிரத்யேக வாசல். அரங்கின் மையப் பகுதியில் மணலைப் பரப்பி வைத்திருப்பார்கள். பாதாள அறையில் போட்டிக்கான மிருகங்களும், ஆயுதங்களும் இருக்கும். 48 மீட்டர் உயரமான அரங்கம் நான்கு அடுக்குகளைக் கொண்டது. மேல் அடுக்கு, வசதி குறைவான மக்களுக்கும், கீழ் அடுக்கு அறிவாளிகளுக்கும், செல்வந்தர்களுக்குமானது. நீள் வட்டத்தில் இருக்கும் அரங்கின் அதிக பட்ச விட்டம் 188 மீட்டர், குறைந்த பட்சம் 156 மீட்டர். இறந்தவர்களின் ஈமச் சடங்கினை கௌரவப்படுத்துவதற்காக ஆரம்பித்த வீர விளையாட்டுக்கள் பிற்காலங்களில் போட்டிக்காகவும், பரிசுத் தொகைக்காகவும் நடந்தேறின‌. ஜூலியஸ் சீசர் அவர்தம் மகள் ஜூலியா இறந்த பிறகு அவளின் இறப்பினை கௌரவப்படுத்துவதற்காக 320 வீர விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதாகவும், அந்தப் போட்டிகளில் இறந்தவர்களின் ஆவி தன் மகளின் பாதுகாப்பிற்காக உடன் சென்றதாகவும் நம்பினார்கள்.

அந்தக் காலங்களில் ரோம் இளைஞர்களின் அதிகப்படியான வாழ்க்கைக் காலம் இருபது வயதில் இருந்து அதிகபட்சம் முப்பது வயது வரைதான். ரோம் இளைஞர்கள் இறப்பதற்காகவே பிறந்தவர்கள். போட்டிக்காகவும், பரிசுத் தொகைக்காகவும், மற்றவர்களின் முன் தாம் பெருமையாகப் பேசப்படுவதற்காகவும் அதிகபட்ச இளைஞர்கள் விளையாட்டு வீரர்களாக பயிற்சி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.

மார்க்கஸோ தன் வீட்டு வறுமையை மாற்றுவதற்காகவும், தன் மனைவி ஒலிவியாவை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பதற்காகவும், தன் வயதான விதவைத் தாயிற்கு எந்த வித குறைகளும் இல்லாமல் காப்பாற்றுவதற்காகவும், கப்புவா என்ற வீரர்கள் பயிற்சி முகாமில் சேர்ந்தான். தினமும் கடுமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டான். பயிற்சி முகாமில் கட்டுப்பாடான மரக்கறி உணவை உண்ணும் போதெல்லாம், அவன் அம்மா ஆசையுடன் அவனுக்காகவே நல்ல சதைப் பற்றான மீனைத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்திக் குழைத்து, புளித்த வெனீகரிட்டு சூரிய ஒளியில் நன்றாகக் காயவைத்து குறு மிளகுப் பொடி தூவிக் கொடுத்ததை நினைத்துக் கொள்வான். சிறு வயதாக இருக்கும் போதே தன் தந்தையை வீர விளையாட்டில் இழந்த மார்க்கஸுக்கு அம்மாதான் எல்லாமுமாக இருந்தாள். கப்புவா செல்லும் போது தனக்குத் தானே பிதற்றிக் கொண்டிருந்த அம்மாவை தேற்றுவதற்கு மார்க்கஸ் மிகவும் சிரமப்பட்டான். அரை மனதுடன் அனுமதி கொடுத்தவள், அவன் தெரு முனையைக் கடக்கும் வரை ஒலிவியாவுடன் வாசலிலேயே நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள்.

கேளிக்கை அரங்கின் ஆரவாரத்திற்கு இடையே மத்திய அலங்கார மேடையை நோக்கி வண்ண ஆடைகளில், ஜால வித்தைக்காரர்களும், கழைக் கூத்தாடிகளும், இசை வல்லுனர்களும் வீரர்களைத் தொடர்ந்து பவனி வர, பார்வையாளர்கள் வரிசையில் இருக்கும் இளைஞர்கள் இசைக்கு ஏற்ப தத்தம் இருக்கைகளில் இருந்து கைகளை பரவசத்துடன் தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்கள். மத்திய மேடையை வீரர்கள் நெருங்கி வர, அவர்களுடன் நுழைவாயிலில் இருந்து அணிவகுப்பாக வந்தவர்கள் முறையாகக் கலைய ஆரம்பித்தார்கள். வெகு விமரிசையான ஆரம்ப நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, வீர விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் உடல் நிலை அரண்மனை வைத்தியர்களல் பரிசோதிக்கப்பட்டு, போட்டியாளர்களுக்கான ஆயுதங்களும் தீர்மானிக்கப்பட்டது. இறுதிக் கட்டமாக உறுதி மொழி. “என்னைச் சங்கிலியால் பிணைப்பதற்கும், மார்பில் முத்திரை பதிப்பதற்கும், இரும்பு ஆயுதங்களால் காயப்படுவதற்கும், என் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நான் எதிர்கொள்ளும் உடல் வேதனையை தாங்கிக் கொள்வதற்கும், நான் உங்களின் தயவினால் உண்ட உணவிற்கும், பருகிய நீருக்கும் என் ரத்தத்தால் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறேன்” என்று மார்க்கஸ் முதலில் உறுதி மொழி எடுத்துக் கொண்டான். அவனைத் தொடர்ந்து பல வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

colossium_rome2மார்க்கஸ் பதப்படுத்தப்படாத முரட்டுத் தோலினால் ஆன அலங்காரப் பட்டையை மார்பிற்கு குறுக்காக அணிந்திருந்தான். இறுக்கமாகக் கட்டிய மஞ்சள் நிற இடுப்புக் கச்சையின் இரு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டு இருந்தது கவர்ச்சியான சிகப்புக் குஞ்சங்கள். அடிப்படைப் பாதுகாப்பிற்கான எந்த கவசங்களும் அணியாமல் ஒரேயொரு குத்து வாளை மட்டும் கையில் ஏந்தியபடி பார்வையாளர்கள் முன் வந்து நின்றான் மார்க்கஸ். பிறகு வந்தான் அகஸ்டோ என்ற மற்றொரு வீரன். முழுப் பாதுகாப்புடன் இறுக்கமான உலோக உடையுடன் இருந்தான். கைகளில் முட்கள் பதித்த உலோக உருண்டையில் இணைத்துள்ள சங்கிலியினை ஒரு கைகளால் பிடித்துக் கொண்டு வேகமாகச் சுழற்றியபடி பார்வையாளர்களைப் பார்த்து மிருகமென கர்ஜித்துக் கொண்டே மார்க்கஸை எதிர் நோக்கி வந்தான். இந்தப் போட்டியில் மார்க்கஸ் வென்றால் பரிசுத் தொகையுடன் அரசாங்கப் பதவியும் கிடைக்கும். தராசின் அடுத்த தட்டத்தில் இருக்கும் விகாரமான மரணம் அவனைத் துளியும் அச்சுறுத்தவில்லை. மனம் முழுவதும் விதவைத் தாயையும், மனைவி ஒலிவியாவையும் நினைத்துக் கொண்டான். பார்வையாளர்களோ “அடி, குத்து, கொல்லு” என்று மிகுந்த சப்தத்துடன் வெறித்தனமாகக் குரல் எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். இறுதியாக போட்டியாளர்கள் இருவரும் களம் இறங்கினார்கள்.

தன்னை தற்காத்துக் கொள்வதிலேயே மார்க்கஸ் அதிக சிரமத்துடன் தான் கற்றறிந்த அனைத்து வித்தைகளையும் ஒத்திகை பார்க்க, மிருக வெறியுடன் சண்டையிட்டான் அகஸ்டோ. எவ்வளவு போராடியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் மார்க்கஸ்ஸால் அகஸ்டோவை தாக்குப்பிடிக்க முடியவில்லை. மயங்கி விழுவதும், மீண்டும் தள்ளாடியபடி எழுந்து அகஸ்டோவை எதிர்கொள்வதுமாக இருந்தான். வீர விளையாட்டின் போது அடிபட்ட வீரர்கள் செயலிழந்து தரையில் விழுந்து இறக்காமல் வெகு நேரம் வரை இருந்தால், “டிஸ்பாட்டா” என்ற இறப்புக் கடவுளின் வேஷம் தரித்த ஒருவன் அந்த வீரனின் உச்சிக் கபாலத்தில் பலம் கொண்ட மட்டும் இரும்புச் சுத்தியால் அடித்து உயிர் துறக்க வைப்பான். இதைத் தவிர்ப்பதற்காகவே மார்க்கஸ் ஒவ்வொரு முறையும் போராடியபடி எழுந்திருந்தான்.

உடலெங்கும் மரண காயங்கள். நெற்றியில் ஏற்பட்ட நீளமான‌ வெட்டில் இருந்து தொடர்ந்து கசிந்த குருதி, மார்க்கஸின் பார்வையை மறைக்க தொடர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். நிராயுதபாணியாக தரையில் தளர்ந்து சரிந்தவனின் பார்வையில், தூரத்தில் கைகளை உயர்த்தி அழுகையுடன் உற்சாகப்படுத்தும் ஒலிவியா மங்கலாகத் தெரிந்தாள். தன்னால் இயன்ற வரை மீண்டெழுந்து போராடினான் மார்க்கஸ். கடைசியாக செயலிழந்து உயிருக்குப் போராடி, தரையில் விழுந்தவன், தன் முழுப் பலத்தையும் திரட்டித் தன் ஆள்காட்டி விரலை விண்ணை நோக்கி உயர்த்தி பார்வையாளர்களிடம் தன் கருணை மனுவைச் சமர்ப்பித்தான். சிலர் தம் கைகளில் இருக்கும் கைக்குட்டைகளை உயர்த்தி ஆட்டி மார்க்கஸை விடுவிக்கக் கோரினாலும், அதிகப்படியான பார்வையாளர்கள் நெஞ்சில் கட்டை விரலால் அழுத்திக் காட்டி அவன் ஆயுதத்தால் நெஞ்சு பிளக்கக் கொல்லப்படவேண்டும் என ஆர்ப்பரித்தார்கள். மக்களின் தீர்ப்பே இறுதியானது. மார்க்கஸின் தொண்டையிலிருந்து மார்பு வழியாகக் கீழிறங்கிய கூர்வாள் அவனின் இதயத்தைத் துளைத்தது. பாய்ச்சிய வாளினை அகஸ்டோ வேகமாகப் பொறுமையின்றி உருவி கைகளில் வழிந்த ரத்தக் கறையை சலிப்புடன் வழித்து, எதுவும் நடவாதது போல இறந்தவனைக் கடந்து போனான். தேவ தூதன் வேஷத்தில் இருந்த ஒருவன் இறந்து போன மார்க்கஸின் சடலத்தை அரங்கினில் இருந்து எடுத்துப் போக வந்திருந்தான்.

அனைத்தையும் காணச் சகியாமல் அரங்கத்தினில் பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்தாள் ஒலிவியா. அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தை தன் பிஞ்சு விரல்களைக் குவித்து கையை விண்ணை நோக்கி உயர்த்தியது. 

- பிரேம பிரபா

Pin It