"மிஞ்சியிருக்கும் டிபார்ட்மெண்ட் எக்சாம எழுதி முடிச்சிட்டீங்கனா சமுதாயம், இலக்கியம்னு அலைய உங்களுக்கு தோதா இருக்கும்ல?" பதவி உயர்வுக்காக எழுதச் சொல்லி மண்டியிடாத குறையாக கேட்கிறாள். வீட்டுக்காரியின் முணுமுணுப்பும் நச்சரிப்பும் என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தியது.

"உம், உம், பார்க்கலாம். அதுக்குல்லாம் நேரமும் காலமும் வரவேண்டாமா? வயசான காலத்துல எவன் ஒக்காந்து படிக்கிறது? நீ வேற தொண, தொணன்னு என்னுயிர வாங்குற" சலித்துக்கொண்டே கெஞ்சும் மனைவியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பாய் தலையணையைத் தூக்கி அக்குளில் இறுக்கிக் கொண்டு மாடிப் படிகட்டுகளில் ஏறத் தொடங்கினேன். .

"ஆமாமா, ஒங்க நல்லதுக்கு சொன்னா நான் தொண தொணக்குறன்னு பேசமாட்டீங்க பின்ன? வூட்டுகாரர் பெரிய உத்யோகத்துல கீறார்னு நானும் பெருமையா சொல்லிக்கலாமேன்னு பாத்தேன். அது தப்பா? நாந்தான் கடைசி காலத்துல காரு ஜீப்புன்னு கெத்தா ரிடயர் ஆகப் போறனாங்காட்டியும்! எனக்கென்ன வந்தது? நல்லதுக்கு சொன்னா மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு போறத பாரு. அதுக்கல்லாம் நான் கொடுத்து வக்கிலபோல" உணர்ச்சி வசப்பட்டு மூக்கைச் சிந்தும் மனைவியின் வார்த்தைகளும் என்னுடன் மாடிப்படிகளில் ஏறின.

டிபார்ட்மெண்ட்ல இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருக்குன்னு இவகிட்ட எதுக்குத்துதான் சொல்லித் தொலைச்சுட்டு பெரிய பாடாய் போச்சே இவகூட என்ற ஆதங்கத்துடன் மொட்டை மாடியில் பாய்விரித்து படுத்தேன். விரிந்து கிடக்கும் வானம் இரவு முழுக்க என்னை முறைத்துக் கொண்டிருந்தது. முனங்கிக் கொண்டும் தாடையை விரல்களால் சொறிந்தபடியும், இந்த வயசுல மனுசனுக்கு இப்படி ஒரு சோதனையா என்று படுக்கையில் புழுவாக நெளிந்தேன். பரிட்சையை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி மனசுக்குள் அனலாகத் தகித்துக் கொண்டிருந்தது.

புகைந்து கொண்டிருந்த இரவு வேப்பமரக் காக்கைகளின் பேச்சரவம் கேட்டு விடிந்தது. மனைவியிடம் பேச்செதுவும் கொடுக்காமல் காலைநேர கடமைகளை முடித்துக்கொண்டு வெளியில் புறப்பட்டேன். வீட்டுவாசலின் கீழ்ப்படியில் காட்சிப் பொருளாக புடவைத் தலைப்பால் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தாயாரிடம் "போய்ட்டு வரேம்மா" என்று சம்பிரதாயத்துக்கு சொற்களை உதிர்த்துவிட்டு தெருவில் இறங்கி நடக்க முற்பட்டேன்.

"அய்யோ... என்ன சொல்லிட்டேன்னு இப்படி வயித்துக்குக் கூட கொட்டிக்காம ஜம்பமா பொறப்பட்டுப் போறாரு இந்த மனுசன்" என்று ஏக்கமும் எதிர்பாப்ர்புமாய் எழுந்த மனைவியின் கூப்பாடு வீட்டுவாசலில் ஒலித்தது. அந்தக் கோபக் குமுறல் அக்கம் பக்கம் வீடுகள் தாண்டி பாதி தெருவுக்கு நன்றாகவே கேட்டிருக்கும். சன்னல்களில், வாயிற்படிகளில் மனித முகங்கள் முளைக்க ஆரம்பித்தன. முதுகிற்குப் பின்னால் நடக்கப் போகும் வாசல் நாடகத்தை திரும்பிப் பார்க்கப் பிடிக்காமல் பிடிவாதமாக நடையைத் தொடர்ந்தேன்.

"அத்தே உம்புள்ளைக்கு நீயாவது ஒரு முறை சொல்லிப் பாரேன்" மனைவி தன் மாமியாரிடம் முறையிடுவதும் எனக்குக் கேட்டது. அவசரப்படாமல் நான் நடந்து கொண்டிருந்தேன்.

"சும்மா இரும்மே நீய்யி, அந்த கிறுக்குப் பிடிச்ச பையபுள்ள போகும்போது கூவாத. உன் ஆம்பிடியானுக்கு கோபம் வந்தா இந்த பூமியே தாங்காது" கூச்சலிடும் மருமகளுக்கு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த தாயார் சமாதானம் சொல்லி அடக்குவதை காதில் வாங்கிக் கொண்டே நகரப்பேருந்தில் ஏறினேன்.

இரவுக்காவலன் மற்றும் அலுவலக உதவியாளனின் வணக்கங்கள் வரவேற்க அலுவலகத்திற்குள் நுழைந்தேன். துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் இறுதிநாள் என்ற நினைப்பு மட்டும் தலைப்புச்செய்தி போல சதா என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

"இன்னா சார் சீக்கிரமா வந்துட்டீங்க? டல்லா வேற கீறீங்க!" இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களுக்கு பின் இரவுக்காவலன் என்னை சகஜமாக விசாரித்தான்.

"டல்லெல்லாம் ஒண்ணுமில்லப்பா முக்கியமான வேலை ஒண்ணு முடிக்க வேண்டியதிருக்கு அதான் சீக்கிரம் வந்துட்டேன்" என்று ஒரு பொய்யைச் சொல்லி அவனை அனுப்பி வைத்தேன். .

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மேசைமீது முழங்கைகளை ஊன்றி தலை கவிழ்ந்து உட்கார்ந்தேன். இரண்டு கட்டைவிரல்களும் நெற்றியை அழுத்தின. கடந்து வந்த இளமைக் காலம் பற்றிய நினைவுகள் நெஞ்சில் இழையோடின.

அடர் மரங்களுக்கு ஊடே குனிந்து நிமிர்ந்து உதிர்ந்து கிடக்கும் இலந்தை, நாவல் பழங்களை புட்டுக்கூடையில் பொறுக்கியெடுத்து பள்ளிக்கூட வாசலில் விற்பனை செய்து படிக்க வைத்த தாயாரின் முகமே அலை அலையாய் நெஞ்சம் முழுக்க நிறைந்தது.

தாயன்பை கடைசி காலத்தில் பலமடங்காக திருப்பிக் கொடுக்க வேண்டியது மகன்களின் தலையாய கடமையென்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. அதனால்தான் தாயாரின் பூமுகத்தில் தனிமை தோன்றா வண்ணம் கூடவே வைத்துப் பார்த்துக்கொள்கிறேன். கொடிய முதுமையுடன் அவள் தன் வாழ்க்கையைத் தொடர கூட்டுக் குடும்பமாக நாங்கள் உடனிருந்தது அவளுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

பதவி உயர்வு வந்தால் மாநிலத்தின் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் நான் பணி மாற்றம் செய்யப்படலாம். வாழ்ந்த வீட்டில் தாயை தனியாக தவிக்கவிட வேண்டிய நிலை ஏற்படும். இத் தயக்கமான சூழலில்தான் துறைத் தேர்வை எழுதச் சொல்லி மனைவி அழிச்சாட்டியம் பண்ணுகிறாள். . .

"சார்! உங்களூக்குப் போன்" மனதிற்குள் ஆயிரம் குழப்பங்களுடன் கவிழ்ந்திருந்த என்னை அலுவலக உதவியாளனின் குரல் எழுப்பியது. சக பணியாளர்கள் அவரவர் இருக்கையில் வந்து உட்கார்ந்து விட்டிருந்தார்கள்.

சொற்களுக்கு வலிக்காமல் தாழ்ந்த குரலில் அழைத்த அலுவலக உதவியாளனை முதுகில் தட்டிக்கொடுத்து, தோளில் கைபோட்டு அவனை ஜன்னலோரம் அழைத்துச் சென்றேன். தொலை பேசியைக் கையிலெடுத்து அவனைப்போலவே நானும் மிகத்தாழ்ந்த குரலில்தான், "யாரு" என ஆரம்பித்தேன்.

ஆனால் "டேய் சிவா ..! நீயாடா?." நிமிடத்திற்குள் என் குரல் உச்சத்திற்கு உயர்ந்தது. பால்ய நினைவுகள் ஒரே நேரத்தில் மனசுக்குள் துள்ளிக் குதித்தன. மும்மரமாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் என் வியப்புக் குரலால் ஈர்க்கப்பட்டு சட்டென்று குரல்வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களை நோக்கி தங்களுக்குள் பார்வையால், பெருமூச்சால் கேள்விக் குறிகளைப் பரிமாறிக் கொண்டனர். மேஜைகளின் மீதிருந்த ஆபிஸ் பேப்பர்கள் காற்றில் அசையும் சப்தமோடு இணைந்து என் உற்சாகத்திற்காண காரணம் அலசப்பட்டது.

"அவசியம் வாடா. உனக்குப் போயி நேரங் காலமா..? எப்போன்னாலும் வீட்டுக்கு வாடா. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்" என்று ஜன்னல் கம்பியில் ஒருகையும் தொலைபேசியில் மறுகையுமாக நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பால்ய சிநேகிதன் முப்பது வருடத்திற்குப் பிறகு பேச நேர்ந்ததால் என் குரலில் உற்சாகம் கரைபுரண்டது.

பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அலுவலக உதவியாளன் மெல்ல விலகிச்செல்வதை பார்வையால் பின் தொடர்ந்தவாறே, "யாரு என் பசங்களா? இரண்டு பேரும் டாக்டருக்குத்தான் படிக்கிறாங்க. பையன் எமெம்சி பொண்ணு சிஎம்சி" என்றேன்.

"டேய் எலந்தை! நீயெல்லாம் பசங்கள டாக்டருக்கு படிக்க வச்சுட்ட....! " மறுமுனையில் ஒலித்த ஏளனமும் நக்கல்பேச்சும் எனக்கு அதிர்ச்சியூட்டின. பத்து நிமிடமாக இலக்கின்றி சந்தோஷமாக நீண்டு கொண்டிருந்த வார்த்தைச் சங்கிலி பட்டென அறுந்தது. குரல் கரகரத்துப் போனது. சட்டென தொலைபேசியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன்.

ஏழ்மை குத்திக்காட்டப்பட்ட ஷாக்கை தாங்க முடியாமல் உடல் வியர்வையால் நனைந்தது. மனசு மரத்துப்போனது. முகச்சோகத்தை மறைக்க முடியாமல் நாற்காலியில் உட்கார்ந்து புருவங்களை உயர்த்தி அறைக்குள் இருந்த ஊழியர்களை ஏறிட்டுப் பார்த்தேன். ஆயாசத்துடன் உதடுகளைச் சுழித்து அலுத்துக் கொண்டேன்.

ஒரிரு மெளன நிமிடங்களுக்குப் பின் சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்த நான் அலுவலக உதவியாளனை நோக்கி, "பேங்க் வரைக்கும் போய் டிபார்ட்மெண்ட் எக்சாமுக்கு பணம் கட்டிட்டு வரேன். யாராவது வந்தா உக்கார வை" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

அறைக்குள் நடந்தவைகளை கண்ணிமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்த அவன், "கொழந்தை மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு என்ன சார் ஆச்சு? யாரு போன்ல?" தலையைச் சொரிந்து கொண்டு அக்கறையோடு கூடவே நடந்து வந்தான்.

"ஒண்ணுமில்லப்பா ஒரு ஊதாங்கோல் அடுப்பு ஊதுச்சு" என்று அழுத்தமாக அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது, யாருமற்ற எங்கள் அலுவலக வாயிலில் அம்மா கையில் டிபன் கேரியருடன் நுழைந்து கொண்டிருந்தாள்.

- கி.மூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It