“நான் ஜடமாட்டம்  நிக்கறேன். நெஜமாவே ஜடமா ஆகிடலாம்னு தோணறது. இவா பண்ற கொடுமைகளுக்கு அது எவ்வளவோ தேவலை. அவர் என்னை விட்டுப் போனதை விட இந்த சித்ரவதைகளைத்தான் தாங்க முடியலை. அடக் கடவுளே! நான் அவருக்கு முன்னமே போயிருக்கக் கூடாதோ?

யார் தயவிலேயும் இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை... என்கிட்ட படிப்பு,உத்தியோகம் எல்லாம் இருக்கு... அவர் போயிட்ட ஒரே காரணத்தினாலே இப்போ இவன் வீட்டு வாசல்லே அசிங்கப்பட்டு நிக்கறேன்.

ஆமா. அசிங்கப்பட்டுத் தான் நிக்கறேன். அவன் வேற யாருமில்லை.என் மைத்துனன்-அதாவது அவரோட தம்பி.. என்னை கூட்டிண்டு போக வரச்சே   அவனும் அத்தையும் தான் வந்தா. சுமங்கலிகள் வரப்படாதே...... இவன் வீட்டுக்கு வந்து நான் தங்கிடப் போறதில்லை.... இருந்தாலும் அவர் இறந்த பத்து நாளுக்குள்ளே பாத்தியப்பட்டவா யாரேனும் ஒருத்தர் வீட்டுக்காவது போகணுமாம்.

அவன் வீட்டை நெருங்கறதுக்கு கொஞ்ச முன்னாடியே போன் பண்ணி பக்கத்துல வந்துட்டோம்னு சொல்லிட்டான். வீட்டுப் பொம்பளைங்க யாரும் எதிர்த்தாப்பிலே வந்திடக் கூடாதே அதுக்குத்தான். வாசல்ல வாளித் தண்ணியும் சின்னக் கின்னத்துல பாலும் நெய்யும் தயாரா இருந்தது.

நா அதை கால்ல தடவிக்கனுமாம். அப்பறம் பாதத்தை தண்ணியாலே கழுவிக்கனுமாம். அப்பறம் வீடு முழுக்க நடந்து வரனுமாம். அத்தை அழறாங்க. நான் கூடத்தான் அழறேன். ஆனா ரெண்டத்துக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?

14 வயசிலே என் உடம்புல நடந்த அந்தரங்க மாற்றத்தை ஊரக் கூட்டி சொன்னாங்களே-அது பத்து வருஷம் கழிச்சுத் தான் அபத்தம்னு நேக்கு உரைச்சது. என்ன ஒரு முட்டாள்தனம்னு சண்டைக்கு போயிருந்தா என்னை கிறுக்கச்சின்னு சொல்லிருப்பாங்க.

24 வயசிலே அவர் சொல்லிக் கொடுத்தாரே எல்லாத்தையும்.....அவர் சொல்லச் சொல்ல கேட்டுண்டே இருக்கலாம்னு தோணும். சில சமயத்திலே ஆச்சரியமாவும் இருக்கும். அவரோட எல்லாத்திலேயும் நான் ஒத்துப் போனாலும் கடவுள் நம்பிக்கையும் அக்ரஹாரத்திலேயே வளர்ந்திட்டதாலே இந்தப் பேச்சு வழக்கும் என்னை விட்டுப் போகலை. அவர் எல்லாத்திலேயும் நேக்கு சுதந்திரம் கொடுத்ததினாலே இதை ஒரு விஷயமாவே அவர் கண்டுக்கலை. பொண்ணு பிறந்ததுன்னா அதுக்கு  சடங்கு வைக்கக் கூடாதுன்னு முடிவெடுத்தோம். ஆனா எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமப் போயிடுத்து.பாக்கியம்னு அதை சொல்றதை அவர் ஏத்துக்க மாட்டார். ஏன்னா பாக்கியம்னு உலகத்திலே எதுவுமே இல்லையாம். "பாக்கியம் இல்லைன்னா குறை இருக்குன்னு பொருளாயிடும். இப்போ நமக்கு என்ன குறை"ன்னு கேப்பார். உண்மைதானே! அப்பல்லாம் நேக்கென்ன குறை?

இதோ என் கழுத்திலே தொங்கறதே அவர் கட்டினது...இன்னும் நாலு நாள்லே பத்தாவது நாள் காரியம். அதுக்கப்பறம் நேக்கு இது சொந்தமில்லை. அடையாளங்கள் தான் பெருசா? இதை தூக்கி எறிஞ்சுடலாம். அதனால அவரோட வாழ்ந்தது பொய்யின்னு ஆயிடுமா?

இது பெண்களை அடிமைப்படுத்த கண்டுபிடிச்ச ஆயுதம்னு அவர் சொன்னது இப்பத்தானே புரியறது.....

இதோ இவா முன்னாடி தலையக் குனிஞ்சுண்டு உக்காந்திருக்கேனே-இது என்னோட தோல்வியா இல்லை இவாளோட வெற்றியா? ஏற்கனவே மனசளவில் நொந்து போயிருக்குற எம்மேல ஏன் இவாளுக்கு இத்தனை குரூரம்?

திமிறிண்டு நிக்கற என்னோட சுயமரியாதையை எப்படி கட்டுப் படுத்திகிறதுன்னு தெரியாமத் தவிக்கறேன். அவரோட பிரிவு என்னோட சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பறிச்சுண்டு போயிடுத்துன்னு  நினைக்கறப்போ எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கறது. என்னாலே இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. அவா சொன்ன மாதிரியே காலைக் கழுவிண்டு வீடு முழுக்க நடந்தாச்சு. இது இவன் வீட்டுக்கு நான் வந்து தங்கறதுக்கு அச்சாரமில்லை. இதான் கடைசி முறைன்னு சபதம் எடுத்துட்டு கெளம்பறேன்.

இதோ என்னைத் தடுத்து நிறுத்தப் பாக்கறாளே-இவாளுக்கெல்லாம் நான் ஏன் கோவப்பட்டுப் போறேன்னு விளக்க வேண்டிய அவசியமில்லை. சொன்னாலும் புரியாது இல்லையா?”

Pin It