"நாங்கெல்லாம் சுனாமியில ஸ்விம்மிங்க போடுறவுங்க " என்ற தனுஷின் டயலாக்கை கேட்கும் போது தோன்றும்... "சுனாமி என்ன கடல்ல மட்டுமா வரும் .... எனக்கு வாழ்க்கைலயே வந்து இருக்கு .. அதுலயே ஸ்விம்மிங்க போட்டவுங்கடா நாங்க " என்று..

சரி பன்ச் டயலாக் பேசியாச்சு இனி கதைக்கு வருவோம்...

ஒரு பதினெட்டு வருடம் பின்னோக்கி செல்ல வேண்டும்... போவோம்...

நாங்கள் திருச்சியில் இருந்த சமயம்..

அம்மா, நான், என் தங்கை இது தான் எங்கள் வீடு.. ......

அம்மா TMSSS ல் ஒரு ஸ்டோரில் பணி புரிந்து கொண்டு இருந்தார்கள்.... நானும் பகுதி நேர வேலை பார்த்து கொண்டே படித்து கொண்டு இருந்தேன்... தங்கை பிலோமினாசில் படித்து கொண்டு இருந்தாள் ...

அப்பா நான் 9ம் வகுப்பு படிக்கும் போதே காலமாகி சுனாமியை ஏற்படுத்தியவர்..

சுனாமியில் ஸ்விம்மிங்க போட்டு கொண்டு இருந்த நாட்கள்..

பிளஸ் டூ முடிந்து இருந்தது ...

கோடை விடுமுறை நாட்களில் திருச்சி பர்மா பஜாரில் பாய் கடைக்கு பக்கத்தில் அருளானந்தம் அவர்களின் கடையில் வேலைக்கு சென்று விடுவேன்.....

"இனி முழு நேர வேலைக்கு தான் நீ போக வேண்டும்... காலேஜ் போறது எல்லாம் நடக்காது" என்றாள் அம்மா.

"கம்ப்யூட்டர் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், ஆறு மாத கால கோர்ஸ் படித்தால் போதும் " என்றேன்...

"சரி நல்லா விசாரி "

விசாரித்ததில் JKK Computer Institute சற்று குறைவான பீஸாக தெரிந்தது...

நன்றாக சொல்லியும் தருகிறார்கள், ஐயாயிரம் ரூபாய், மாதா மாதம் தவணை முறையிலும் செலுத்தலாம் என்றாலும் கூட அது ஒரு பெரிய தொகையாக தான் தெரிந்தது...

அப்போது என் தங்கை தனக்கு ஒரு சைக்கிள் வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தாள் ...

எப்படியும் வட்டிக்கு வாங்க வேண்டும் ... முதலில் சைக்கிள் வாங்கி விடலாம் ... கோர்சுக்கு மாதா மாதம் செலுத்தி விடலாம் என்றேன்...

அந்த காலத்தில் சைக்கிளில் BSA SLR தான் டாப் ... வளைவான ஹான்டில் பாருடன் அழகாக இருக்கும். வேகமாகவும் போகும்... புதிதாக லேடி பர்ட் என்று ஒரு மாடல் அறிமுக படுத்தி இருந்தார்கள்... சரி அதையே வாங்கலாம் என முடிவாயிற்று..

சைக்கிள் வாங்கியாயிற்று ... கோர்ஸும் முடிந்தது ...

பின் வரும் நாட்களில் நினைத்தது போலவே பிஷப் ஹீபர் கல்லூரியின் லைப்ரரியில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் ஆக எனக்கு வேலை கிடைத்தது...

ஒரு நாள் ஸ்ரீரங்கத்தில் என் நண்பனிடம் பேசி கொண்டு இருந்தேன்...

"Foxbaseஅ விட அட்வான்சா Foxpro ன்னு ஒண்ணு வந்து இருக்குடா... அத படிக்கணும்." என்றேன் நான்..

"தெரியும், ஸ்ரீரங்கத்துல நான் ஒரு வீட்ல கம்ப்யூட்டர் கத்துக்க போறேன்.. அங்க இருக்கு. ஹவர்லி பேசிஸ்ல கொடுக்கிறாங்க... ஆனா நீயே தான் கத்துக்கணும் " என்றான்..

"சரி, நானும் வரேண்டா, எவ்வளவு "

"ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூபாய்..."

பிறகென்ன கல்லூரியில் இருந்து வந்தவுடன் லேடி பர்டை எடுத்து கொண்டு ஸ்ரீரங்கத்துக்கு கிளம்பி விடுவேன்...

பிறகு வந்த மாலை நேரங்கள் ஸ்ரீரங்கத்தில் தான் கழிந்தன ....

இரவு 10 மணி வரை நண்பனுடன் தெரு முனையில் நின்று நேரம் போவது தெரியாமல் கதை பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது...

"மணி ஒம்போதர... நீ கிளம்பல "

"அதான் சைக்கிள் இருக்கே எப்ப வேணும்னாலும் போகலாம்.."

"நேத்து வீட்ல எனக்கு கம்ப்யூட்டர் வாங்கி கொடுங்கன்னு கேட்டேன், அடிக்க வராங்கடா ..." என்றான் என் நண்பன்..

எனக்கு சிரிப்பு தான் வந்தது...

"கம்ப்யூட்டர் என்ன கொஞ்ச நஞ்ச காசா ... அறுபதினாயிரம் இல்லாம வாங்க முடியாதுடா... என்னமோ குச்சி மிட்டாய் வாங்கி தர சொல்லி கேட்ட மாதிரி கேக்கற."

"மனசு வச்சா வாங்கி தரலாம்... இவுங்களுக்கு தான் மனசு வராதே ..."

என் நண்பனின் அப்பா அரசு வேலையில் இருந்தார்... அவன் அம்மா டீச்சர்....

அப்போதெல்லாம் 286, 386, 486 SX, 486 DX ரக கம்ப்யூட்டர்கள் தான் இருந்தது .... Monochrome டிஸ்ப்ளே தான். Pentium 1 என்று புதிதாக வந்து இருந்தது.. Turbo சுவிட்ச் எல்லாம் வச்சு அத அமுக்குனா இன்னும் வேகமாக வேலை செய்யும் என்றெல்லாம் தில்லாலங்கடி செய்து விற்று கொண்டு இருந்தார்கள்..

இரண்டு மூன்று மாதங்கள் போயிருக்கும்... ஒரு நாள் அவன் வீட்டுக்கு போன் செய்த போது சொன்னான்...

"டேய் கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துட்டாங்கடா ... "

எனக்கு ஆச்சர்யம் தாங்கல ... சந்தோஷமாகவும் இருந்தது...

"எப்பிடிடா ... "

"நீ நேர்ல வா சொல்றேன் ..."

சென்றேன்.....

புத்தம் புதிதாய் ஒரு கணிணி .. விண்டோஸ் 95 உடன் டஸ்ட் கவர் எல்லாம் போட்டு வைத்து இருந்தான்...

நான் மெல்ல கேட்டேன்...

"எப்படிடா... "

"அப்புறம் சொல்றேன்... மொதல்ல வெளியில போவோம்"

ரெண்டு பேரும் அவரவர் சைக்கிள்களை எடுத்து கொண்டு வெளியேறினோம்...

சொல்ல ஆரம்பித்தான்....

"டேய் எவ்வளவு கேட்டும் அவுங்க வாங்கி தர்ற ஐடியாவே இல்ல, என் ப்ரெண்ட் தூக்கத்துல கம்ப்யூட்டர் வேணும்னு பொலம்பி இருக்கான்.. அத பாத்த அவுங்க அப்பா, கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்திருக்கார்.. சரின்னு நானும் தூக்கத்துல புலம்புற மாதிரி கம்ப்யூட்டர் வேணும், கம்ப்யூட்டர் வேணும் னு புலம்பினேன் .... வொர்க் அவுட் ஆயிர்ச்சு... லோன் போட்டு வாங்கி கொடுத்துட்டாங்க...

நீயும் ட்ரை பண்ணு வொர்க் அவுட் ஆவும்."

Pin It