உணர்ச்சி வேகத்தில் கண்மண் தெரியாமல் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள பொதுப்பண்புதான் என்கிற போதிலும், தமிழன் சற்று மிகைப்பட்டு தெரிய முயற்சிக்கும் தனிப்பிறவியாகவே தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் மட்டுமே நடிகனும், அரசியல்வாதியும் நாடாளும் அரசனைப்போல் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உணர்ச்சிவேகம் என்கிற இந்த வினோதமான பண்பில் மாட்டிக்கொண்டு தினசரி நடைபெறும் பல்வேறு வினோத நிகழ்ச்சிகளில் மாட்டிக்கொண்டு சிக்கித்திணறி பாடம் கற்பவர்கள் ஏராளம் என்றாலும் அவர் சற்று வினோதமான உணர்ச்சி வேகத்தில் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

அவர்............. அவரைப் பற்றி சில குறிப்புகள்

அவர் அலுவலகத்தில் 2 பேருக்கு மட்டுமே முழுவதுமாக 2 கதவையும் திறந்து விடுவார்கள். ஒன்று அலுவலக எம்.டி... மற்றொன்று அவர்...... ஆஃபிஸ் எம்.டி.க்கு மரியாதை நிமித்தமாக அலுவலகத்தின் 2 கதவுகளையும் திறந்துவிடுவார்கள். ஆனால் அவருக்கோ, 2 கதவுகளையும் திறந்துவிட வில்லை என்றால் அலுவலகத்திற்குள் நுழையவே முடியாது. கேட் கீப்பர் அவருக்கு வைத்திருக்கும் பெயர் திருமலை (சைலண்ட் - நாயக்கர் தூண்)

அவர் அலுவலகத்தில் ஒரு பெண் அவரைப் பார்த்து எப்பொழுதும் இந்தப் பாடலை மட்டுமே பாடுவாள், “கத்திரிக்கா..... குண்டு கத்திரிக்கா....” அவள் ஹ்ரித்திக் ரோஷனுடைய ஃபேன். நிறைய ஹிந்திப்படம் பார்ப்பவள்.

அலுவலகம் அருகில் அமைந்திருக்கும் தேநீர் கடையில், அனைவரும் 2 போண்டா சாப்பிட்டு விட்டு பசியாறும் நிலையில், அவர் 5 போண்டாவை இரைப்பைக்குள் இறக்கிவிட்டு ஆறாவது போண்டாவுக்கு தட்டை நீட்டுவார். போண்டா மாஸ்டர் இவருடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிப் போவார்.

இப்படியாக போண்டாவாக சாப்பிட்டு பாண்டா கரடியைப் போல் காணப்பட்ட இவர்..... பார்ப்பதாக இருந்தால் ஒரு பழைய சிவாஜி படத்தை பார்த்திருக்க வேண்டும். அவருடைய போதாத நேரம் ஹ்ரித்திக் ரோஷன் படத்திற்கு சென்றுவிட்டார்... அவளுடன்..... அவள் வேறு அழகாக இருந்தாள். அடிக்‍கடி கிண்டல் வேறு செய்து கொண்டிருந்தாள். 6 பேக் ஆசை யாரைத்தான் விட்டது. அவர உணர்ச்சிவசப்பட்டார்.

அவருக்கு கழுத்துக்குக் கீழ் நேரடியாக வயிறு ஆரம்பித்து விடுகிறது. உன் நெஞ்சத்தில் ஈரமே இல்லையா என்று யாரும் அவரைப் பார்த்து கேட்டு விட முடியாது. ஏனெனில் அவருக்கு நெஞ்சு என்ற ஒரு பாகமே கிடையாது. அவர் தன் கால் கட்டைவிரலை பார்க்க வேண்டும் என்றால் 2 அடி முன்னே குனிய வேண்டும். தெரியாத்தனமாக ஒரு ரூபாய் நாணயத்தை கீழே போட்டு விட்டால் அதை குனிந்து எடுக்க மாட்டார். அவர் தன்னை வள்ளலாக நினைத்துக் கொள்வது இதன் மூலமாகக்கூட இருக்கலாம்.

அவரால் படுத்துக் கொண்டு வயிற்றுக்கு அந்தப் பக்கமாக இருக்கும் டி.வி.யைப் பார்க்க முடியாத ஒரே காரணத்தால் தினசரி உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அவர் அணிந்திருப்பது நிச்சயமாக கால்சட்டைதான் என்கிற பட்சத்தில் அதன் அளவு குறித்து அதைத் தைப்பதற்காக (அல்லது) மூட்டுவதற்காக வாரக்கணக்கில் போராடிய டெய்லரிடம்தான் கேட்க வேண்டும். அவருக்காக சில பல சட்டைகளையும், அதே டெய்லர் ஒரு சாதனை முயற்சியாக தைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. அவரது உள்ளாடை பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை.

அவருடைய இரு சக்கர வாகனம்... 200சிசி பல்சர். .... தினசரி ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேச உனக்கு வாய்ப்பளிக்கிறேன் என்று கடவுள் அதனிடம் கூறுவாரேயானால், அது இந்த ஒரு வார்த்தையைத் தான் தயக்கமின்றி கூறும். 

“நரகத்துக்குப் போ.....”

வாயில்லாப் பூச்சியை வதைப்பது என்பது இதுதான் போல, 2 முறை டயர் வெடித்ததை பார்த்து ஆச்சரியமடைந்த மெக்கானிக்கைப் பார்த்து, இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்க... மெக்கானிக் கூறினார். ”இது ட்யூப்லெஸ் டயர் சார்”

அவர் 2 மாடிகள் படியேறி வெற்றிகரமாக (ஒருவேளை) வந்து விட்டால், அவருக்கு ஏற்படும் மூச்சிரைப்பு இருக்கிறதே.....அதை மட்டும் ஒரு ஸ்பெயின் காளை பார்க்க நேரிடும் பட்சத்தில் தன் சகோதரன் வந்து விட்டதாக நினைக்க ஆரம்பித்துவிடும்.

ஊருக்குள் எடை பார்க்கும் இயந்திரங்கள் பழுதடைந்து காலாவதியாகி கிடக்கிறதென்றால் பொத்தாம் பொதுவாக தமிழர்களை சபிக்கக் கூடாது. அவர் எடையை தாங்கக் கூடிய அளவுக்கு இந்தியர்களால் எடைபார்க்கும் இயந்திரம் தயாரிக்க முடியவில்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும் சபிப்பதாக இருந்தால் அவரை மட்டும் சபித்தால் போதுமானது.

இதுபோன்ற சாபங்கள், கிண்டல்கள், அசௌகரியங்கள், தோல்விகள், சுயபச்சாதாபங்கள் முதலான காரணங்களால் எல்லாம் வெறுத்துப்போன அவர் உணர்ச்சி வேகத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்.

6 பேக்....

தானும் 6 பேக் வைக்க வேண்டும் என்கிற அந்தமுடிவை அவர் ஒரு நொடியில் எடுத்தார். 4 இதய நோயாளிகள் இதைக் கேட்டிருக்கும் பட்சத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்றாலும் வாழ்க்கையில் எப்பொழுதுமே ஒரு வாய்ப்பு திறந்தபடியேதானே இருக்கும்.

அவர் என்ன நினைத்தாரோ, உணர்ச்சி வேகத்தில் எரிந்து கொண்டிருக்கும் சூடத்தின் மீது சத்தென்று உள்ளங்கையால் அடித்து சத்தியம் செய்தார்.

அந்தத் தருணத்தில்தான் அவரால் ஒரு விஷயத்தை உணர்வுப்பூர்வமாக உணர முடிந்தது. எரிந்து கொண்டிருக்கும் சூடத்தின் மீது கையை வைத்து சத்தியம் செய்கிறேன் என்கிற பெயரில் அழுத்தினால் கை கொப்பளித்துவிடும் என்று. தமிழ் சினிமா பார்த்து உணர்ச்சி வேகத்தில் ஒரு முடிவுக்கு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்.

அவர் தனது உள்ளங்யையைப் பார்த்தார். சரவண பவன் மினி இட்லியைப் போல் கொப்பளித்துப் போய்க் கிடந்தது. உணர்ச்சி வேகத்தில் வெகுநேரம் சூடத்தில் மீது கையை வைத்து சத்தியம் செய்ததால் இந்த வீக்கம் குஷ்பு இட்லி சைசுக்கு பெரிதாகுமோ என்கிற பயமும் அவருக்கு இல்லாமல் இல்லை.

அவர் கடுமையான கோபத்தில் இருந்தார். அவருடைய கோபம் தமிழக மக்கள் மீது திரும்பியது. எரிந்து கொண்டிருக்கும் சூடத்தின் மீது அடித்து சத்தியம் செய்வது போன்ற முட்டாள்தனமான மூட பழக்க வழக்கங்களில் இந்தத் தமிழ்நாட்டு மக்கள் ஏன் ஊறித் திளைக்கிறார்கள். இவர்கள் வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க தங்கள் சுயபுத்தியையும் அடகு வைத்து விட்டாகளா? அல்லது சத்தியம் செய்வதில் கூட தங்கள் வன்முறை எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களா? எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இதுபோன்று சத்தியம் செய்பவர்களை, சத்தியமாக சத்தியம் செய்யக் கூடாது என்று சத்தியம் வாங்கி விடுவேன்.

கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட வலியிலும், துன்பத்திலும் அவசரப்படாமல் சிந்தனையில் மூழ்குபவனே தமிழன் என்கிற பாரம்பரிய விதிமுறைக்கு உட்பட்டு சிந்தனையின் ஆடியாழத்தில் சில முத்து போன்ற உண்மைகளை ஆய்வு செய்தார். 

உண்மை 1 

இதற்கெல்லாம் காரணம் அந்தத் திரைப்பட நடிகர் விசு என்பவர்தான்.

அவர் நடித்திருந்த அந்த 3 மணி நேர வசன நாடகத்தை (திரைப்படத்தை) ராஜ் டி.வியில் ஒளிபரப்பியிருந்தார்கள். அதில் ஒரு ஜாதிவெறிப் பிடித்த தமிழ்பாம்பு பழிக்கு பழி வாங்குவதற்காக பற்களை நறநறவென கடித்தபடி சென்று கொண்டிருக்கும். அதை ஆவேசத்துடன் தடுத்து நிறுத்தும் விசு அவர்கள், அந்த பாம்பைப் பார்த்து நாக்கைப் பிடிங்கிக் கொள்ளுமாறு 4 கேள்விகளை நறுக்கென்ற கேட்பார். பாம்பு, நாணி, கோணி, வெட்கி, தலைகுனிந்து திரும்பி செல்ல நினைக்கும்பொழுது, ஒரு தட்டில் சூடத்தை பொறுத்தி இனிமேல் பழி வாங்குகிறேன் என்கிற பெயரில் இந்தப் பக்கம் வரக்கூடாது என்று சத்தியம் வாங்கி விடுவார். 

உண்மை 2

நம்பியார்தான் தன் குடும்பம் சிதறிப்போனதற்கு முக்கியக் காரணம் என்பதை அறிந்ததும், சிவப்பு விளக்குக்கு முன் வந்து முகத்தைக் காட்டும் எம்.ஜி.ஆர். தனது வலது கையை முறுக்கி இடது கையில் ஓங்கி குத்தியபடி, உதட்டை சுளித்து, சும்மா படுத்துக் கிடக்கும் அம்மாவை பார்த்து “ அம்மாாாாா......... இனி என்னைத் தடுக்காதீர்கள் என ஆவேசத்துடன் கூறி எழுப்பிவிட்டு குடுகுடு...குடுகுடு.........வென வாசலை நோக்கி துள்ளிக் குதித்து ஓடும்போது, ஒரு கை வந்து மறைக்கும், காலை 10 மணி ஆனவுடன் கரண்ட் நிற்பது போல் எம்.ஜி.ஆர். டிஸ்க் பிரேக் போட்டு நிற்பார். அழுகையை அடக்கியபடி கோபத்துடன் எம்.ஜி.ஆர். பார்க்க, பொங்கி வரும் பாசத்தை கட்டுப்படுத்தியபடி கோபத்துடன், அம்மா, மாலை போட்டு வைக்கப்பட்டிருக்கும் அப்பா போட்டோவை நோ்ககி, ஸ்கூல் பையனை காதைப் பிடித்து இழுத்துச் செல்வது போல் இழுத்துச் சென்று, தயாராக வைக்கப்பட்டிருக்கும் வெண்கலத்தட்டில் சூடத்தை பொறுத்தி

“அப்பா மேல் சத்தியம், இந்த வீட்டை விட்டு ஒரு அடி காலை வெளியே எடுத்து வைக்கக் கூடாது.....ம் சத்தியம் செய்.....” என்று தட்டை நீட்ட. எம்.ஜி.ஆர். உச்சக்கட்ட அழுகையுடன் பொங்கி வழிந்து அம்மா பேச்சை மீற முடியாமல் சத்தியம் செய்து விட்டு அறைக்குள் ஓடி கதவை மூடிக் கொள்வார்.

உண்மை 3

செவ்வாய கிரகத்திற்கு பேருந்து வழித்தடம் அமைக்கப்படாததால், அங்கெல்லாம் சென்று காதலிக்க முடியாத ஒரே காரணத்தால் பூமியிலேயே ஒரு ஓரமாக பார்க், பீச், சினிமா, கோவில் என காதலித்துக் கொண்டிருக்கும் இளம் காதலர்கள், கோவிலுக்குள் கோவில் போலீஸ் பூசாரியிடம் வசமாக மாட்டிக் கொள்ள தின்ற கோறு செரிப்பதற்காக ஆல மரத்தடியோரமாக ஒதுங்கி பேட்டரி சாராயம் குடித்து விட்டு மூன்று சீட்டு ஆடுவோரிடம் அதாவது ஊர் பஞ்சாயத்தாரிடம் கொண்டு வந்து நிறுத்த, அம்மன் கோவிலுக்குள் பூக்குழி இறங்கி உங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு ஈசியான டான்ஸ் ஆடுங்கள் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. நிர்ணயிக்கபா்பட்ட நாளில் அவர்களும் ஏதோ ஊட்டி மலர்க்கண்காட்சியை சுற்றிப் பார்ப்பதுபோல காலார பூக்குழிக்குள் இறங்கி நடந்து தங்களை புனிதமானவர்களாக நிரூபிப்பார்கள்.

உண்மை 4 

ஊர் மக்கள் எல்லாம் ஒன்றுகூடி, யூதர்கள் ஏசுமேல் பழி சுமத்தியதுபோல். அநியாயமாக ரஜினி மேல் பழியை சுமத்தி விடுவார்கள். ரஜினியின் அம்மாவும், தூய்மையே வடிவெடுத்த ரஜினியை நம்பாமல் முட்டாள் மக்களின் பேச்சை நம்பி, ரஜினியை கெட்டவன் என முடிவெடுத்து அழுதபடி 2வார்த்தை அதிகமாக திட்டிவிடுவார், இதையெல்லம் கேட்டுக்கொண்டு அமைதியாக பீடி பிடித்துக் கொண்டிருக்கும் ரஜினி, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் விறகை உருவி அதன் கங்குப் பகுதியில் இருகப் பிடிப்பார். அதைப் பார்த்த ஊர் மக்கள் அனைவரும் வாய்பிளந்து நிற்பார்கள். தாங்கள் செய்த தவறை எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள். ரஜினியின் இந்த செயலைக் கண்டு அதிர்ச்சியடையும் அம்மா.... 22 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு மனிதர் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுகு வீவீவீவீவீல்ல்ல்ல்......... என்று கத்துவார். 

ஒரு காலத்தில் வரவு நல்ல உறவு படம் பார்த்து வழிந்த கண்ணீரை யாரும் பார்க்காத நேரத்தில் துடைத்துக் கொண்டவர்தான் அவர் என்றாலும், சினிமா பார்த்து தீயில் கை வைக்கும் அளவுக்கு என்று முட்டாள் ஆனோம் என்று தீவிரமாக யோசித்துப் பார்த்தும் ஒன்றும் பிடிபடவில்லை.

உள்ளங்கையில் வலி சுருக் சுருக்கென்று குத்திக் கொண்டிருந்தது. இது முட்டாள்தனத்தின் வலி, தீயின் ரூபத்தில் வந்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தது. கண்கள் துடித்தன. 

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உடலும், மனமும் ஒரே கோணத்தில் யோசிக்க வேண்டும். இப்படி உடலை சுட்டுக் கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மனம் தயாராக இருக்கும் நேரத்தில் உடல் சலிப்படையக் கூடாது. உடல் தயாராக இருக்கும் பொழுது மனம் மந்தமாகி விடக்கூடாது. இரண்டையும் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். லட்சியத்தை மணிக்கு ஒருமுறை நினைத்து பார்த்து வலுவேற்றிக் கொள்ள வேண்டும். வலியை ஆனந்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

“பெய்ன் இஸ் கெய்ன்” இதுதான் மனதில் எதிரொலிக்கும் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி.... என் பேச்சை கேட்காத உடல் எனக்கெதற்கு என்கிற தெளிவு இருக்‍க வேண்டும். செயலின் வீரியம் என்ன வென்று காட்டுகிறேன் இந்த உலகத்திற்கு என்கிற வேகம் இருக்‍க வேண்டும்.

சிறிது நேரத்திற்குப் பிறகு உடலும், மனமும் சற்று தினவெடுப்பதாக உணர்ந்தார். மகிழ்ச்சியுடன் தான் அணிந்திருந்த பனியனை சற்று தூக்கி வயிற்றைப் பார்த்தார்.

அவரது இரும்பு போன்ற உறுதியான நெஞ்சத்தை ஹல்க் மாதிரியான ராட்சத மனிதன் சம்மட்டியால் மாறி மாறி அடிப்பதுபோல் பிரமை ஏற்பட்டது.

ஆளில்லாத காட்டுக்குள், கடந்த ஒரு வாரமாக தீனி கிடைக்காமல் பட்டினியில் கிடக்கும் ஒன்றரை மீட்டர் உயர சிங்கத்திடம் தன்னந்தனியாக மாட்டிக் கொண்டதைப் போல, அநிச்சையாக சுரந்த உமிழ்நீரை விழுங்கினார். அவரது அடிவயிற்றை கலக்கியது. ஏதேனும் ஒரு தேவதை தோன்றி 6 பேக் வரம்கொடுக்காதா என்று ஏங்கினார். 

தினசரி குதிரை சவாரி செய்தால் என்ன என்று கூட யோசித்தார். ஆனால் ப்ளூகிராஸ் நபர்கள் சண்டைக்கு வந்து விடுவார்களோ என்று பயந்தார். அவர்கள் தன்னை யானை சவாரி செய்ய கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தே இருந்தார்.

நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிட்டதைப் போல கனவு காணுங்கள் என அப்துல்கலாம் சொன்னது திடீரென அவரது நியாபகத்துக்கு வந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் அப்படி ஒரு கொடூரச் சிந்தனை அவரது மனதிற்குள் தோன்றவே இல்லை. அது இயலாத காரியம் என்று கைவிட்டார்.

முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறாரே, ஏன் நாம் முயற்சிக்கக் கூடாது என்று சிந்தித்துப் பார்த்தார். ஒருவேளை தன்னைப் போன்ற வயிறும், 6 பேக் ஆசையும் திருவள்ளுவருக்கு வந்திருந்தால், முயற்சி திருவினையாக்கும் என்று எழுதுவதற்கு முன் எழுத்தாணியை உதட்டருகே வைத்துக் கொண்டு சற்று யோசித்திருப்பார் என்று அவருக்குத் தோன்றியது.

அலுவலகத்தில் அந்த காவியா, தன்னைப் பார்த்து “கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா......” என்று நக்கலாக பாடிக் கொண்டு போனாளே, அருகிலிருந்த அந்த பட்டாபி பயலும் நக்கலாக சிரித்தானே இவர்கள் மூஞ்சியில் கரியைப் பூச வேண்டாமா? என்று மனதிற்குள்ளாக பொறுமினார். 

விறுவிறுவென தனது செல்ஃபிலிருந்த புத்தகங்களிலிருந்து விவேகானந்தருடைய புத்தகம் ஒன்றை உருவி 83ம் பக்கத்தை விரித்து பார்த்தார். அதில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய் என்றிருந்தது. அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த வாக்கியத்தை உள்வாங்கி புருவ மத்தியில் நிலைநிறுத்தி, மூன்று முறை மனதிற்குள்ளாக அவ்வார்த்தையை ஜெபித்தார். அவர் உடல் குதிரையின் உடல் சிலிப்பதைப்போல் தன்னிச்சையாக சிலிர்த்து அடங்கியது. உடலில் ஒரு புதுவேகம் கட்டுக்கடங்காமல் கரையை உடைத்துக் கொண்டு கட்டுத்தறி காளை போல சிலிர்ப்பெடுத்து ஓடியது. நரம்புகளில் பாய்ந்த புதுரத்தம் சற்று சூடாகவே, விவேகானந்தரின் அந்தப் புனித புத்தகத்தை “சத்.....”தென்று சத்தம் வர மூடினார். 

அதே சமயம் தனது இல்லத்தை அந்த புத்தகத்தின் ஒரு மூளையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து அமைத்திநருந்த எட்டுக்கால் பூச்சி ஒன்று சற்று ஆயாசமாக புத்தகத்தின் நடுவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தது. 3டியாக முப்பரிமாணத்தில் வீறுநடைபோட்ட அந்த அப்பாவி பூச்சி ஒரு நொடியில் ஒரு 2டி பரிமாணத்தில் பாடமானதை அவரால் கவனிக்க முடியவில்லை.

அதிகாலை

மூன்றாவது மாடியில் 2 யானைகள் கால்பந்து விளையாடுவதுபோல் வித்தியாசமான கனவு ஒன்று 2வது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த வீட்டு ஓனருக்கு ஏற்பட்டது. அவர் பற்களை நறநறவென கடித்துக் கொண்டு இவ்வாறு கூறினார்

“சனியனே நிறுத்தப் போறியா இல்லையா?”

கண்கள் இரண்டையும் கசக்கியபடி எழுந்து பார்த்தபோது, எதிரே அவரது மனைவி நிற்க, தான் கனவில் அவ்வாறு கூறியது அப்படி ஒன்றும் பெரிய தவறு இல்லை என்று தோன்றவே பெரிதாக அலட்டிக் கொள்ளவோ, வருத்தப்படவோ இல்லை.

கனவு கலைந்த பின்னரும் சத்தம் இன்னும் தொடரவே, தான் இன்னும் கனவில்தான் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் அவருக்கு தோன்றியது உண்மைதான். இருப்பினும் வீடடு உத்தரத்தில் போன பொங்கலுக்கு அடித்த இண்டிகோ ப்ளூ கலந்த வெள்ளை பூச்சு நில நடுக்கம் ஏற்பட்டதுபோல அதிர்ந்து உதிரும் போது கனவென்று நிஜமென்று பார்க்க முடியுமா?

அவிழ்ந்து விழுந்த கைலியை கூட கவனிக்காமல் அண்ட்ராயரோடு எழுந்து ஓடிய வீட்டு ஓனரை பார்த்து யாரேனும் “உனக்கு மானம் பெரிதா? இல்லை உன் வீடு தான் பெரிதா” என்று கேட்பாரானால், வீடுதான் முக்கியம் என்று தயங்காமல் கூறுவார். 2வது மாடியிலிருந்து மூன்றாவது மாடிக்கு 2 நொடியில் தாவிச் செல்லும் ரெக்கார்ட் பிரேக்கை தன்னையறியாமல் படைத்தார் வீட்டு சொந்தக்காரர்.

16 வயதினிலே ஸ்ரீதேவியைப்போல ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்து பதறிப்போனார் வீட்டு ஓனர். அவரை தள்ளிவிடும் நோக்கில் ஓடிவந்து இரு கைகளாலும் தன் பலம் கொண்ட மட்டும் தள்ள முயற்சி செய்து பொத்தென்று கீழே விழுந்தார். அதிகாலை நேரத்தில் எதிர்பாரா நேரத்தில் தன்னைத் தழுவிச் சென்ற தென்றலை அனுபவித்தபடி அவர் தொடர்ந்து குதித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் 2 ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் பழுதடைந்து போன மைக் முன் தொண்டை கிழிய கத்தி பேருரையாற்றும் அரசியல்வாதியைப் போல் அவரை நோக்‍கி சுமார் 10 நிமிடங்கள் மூச்சுவிட மறந்தவாய் ஒரு பேருரை ஆற்றினார் வீட்டுச் சொந்தக்காரர்.

பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அதிகாலையிலிருந்து 30 நிமிடங்கள் முழுதாக உடற்பயிற்சி செய்தும் வேர்க்காத அவரின் உடல், வீட்டுச் சொந்தக்காரரின் 10 நிமிட பேருரையில் வேர்ததுக் கொட்டியது. பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டது.

வீட்டிற்குள் குதித்து விளையாடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தன் சுதந்திரத்தில் தலையிடும் வீட்டுச் சொந்தக்காரரை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவபில்லை. என்றாவது ஒருநாள் படியிறங்கிச் செல்லும்போது கால் இடறி விழுவதுபோல், அவர் மேல் விழுந்து அவர் கதையை முடித்து விட வேண்டியதுதான். அல்லது அவர் முன் மயக்கம் வருவதுபோல் நடித்து கீழே தடுமாறி விழப்போகும்போது, தாங்கிப் பிடிக்க வரும் அவர் மேல் முழு எடையையும் இறக்கிவிட வேண்டியதுதான் என அஹிம்சை கொலை குறித்த கிரிமினல் எண்ணங்களை யோசித்தபடி அருகில் இருக்கும் ஜிம் ஒன்றக்கு வண்டியைக் கிளப்பினார்.

ஜிம்மிற்குள் நுழையும்போதே.... வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வை தொகுதி மக்கள் பார்ப்பதுபோல் ஆச்சரியமாகப் பார்த்தனர். அவர் ஜிம்மின் மூலையில் ஒட்டப்பட்டிருந்த அர்னால்ட் ஸ்வாஸ்நேக்கர் படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். அர்னால்டின் முகத்தில் தன்முகம் பிரதிபலிப்பதை உணர்ந்தார். கண்களை சிமிட்டியபடி அர்னாலட்டின் புகைப்படத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது தோல்களை குத்துமதிப்பாக பிடித்து உலுக்கி,அவரது கனவை கலைத்தார் ஜிம்மாஸ்டர். மெய் ஞானத்தை தேடி அழையும் சீடன் ஒருவன் தனக்கு தகுந்த குரு ஒருவரை தேடிக் கண்டுபிடித்ததுபோல, ஜிம் மாஸ்டரைப் பார்த்ததும் மனதிற்குள்ளாக ஆனந்தக் கண்ணீர் வடித்தார் அவர். தன்னையும் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு மன்றாடினார். இறுதியாக தனக்கு எப்படியாவது 6 பேக்ஸ் உடலமைப்பை பெறுவதற்குரிய உடற்பயிற்சி ரகசியங்களை கற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

அந்தக் கடைசி வாசகத்தைக் கேட்ட ஜிம்மாஸ்டர் கன்னத்தில் யாரோ பளார்....பளார்..... என மாறி மாறி அறைவதுபோல் உணர்ந்தார். அவருக்கு லோ சுகரோ, ஹை சுகரோ இல்லையென்றாலும் லேசாக தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையை நினைத்து மனம் மகிழ்ந்தவராய் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ததுக் கொள்ளலாம் என யோசித்தார். முதலில் இவரை உடற்பயறி்சிக் கூடத்தில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் சேத மதிப்பை ஆய்வு செய்தார். மோத்தத்தில் கூட்டி கழித்து ஒரு தொகையை கட்டணமாகக் குறிப்பிட்டார் ஜிம்மாஸ்டர். ஒப்புக் கொண்டார் அவர். 

அடுத்த நாள்

அவர் ட்ரெட்மில் என்னும் அந்த நடைபயிற்சி செய்யும் இயந்திரத்தில் நடந்து கொண்டிருக்கும்பொழுது சில பல தீப்பொறிகள் மத்தாப்புக் கம்பியிலிருந்து வெளிப்படுவதுபோல் வெளிப்பட்டது. அதனுடன் சேர்ந்து பட்.....பட்.....படார்........ போன்ற சத்தங்களும் வெளிப்பட்டன. பின் ஒன்றரை அடிக்கு ஒரு உருளை ஒன்று அந்த இயந்திரத்திலிருநது கழன்று உருண்டு ஓடியது. அந்த இயந்திரம் ஒருவேளை இப்படி நினைத்திருக்கலாம் “தன்னிடம் ஏன் தன்னுடைய கடைசி ஆசையை கேட்காமலேயே கொன்றுவிட்டார்கள்” என்று.....அந்த இயந்திரம் பரிதாபமாக சலனமற்று கிடந்தது.

ட்ரெட்மில்லை ஆய்வுசெய்த ஜிம்மாஸ்டர் கண்களிலிருந்து சிவப்பு நிறத்தில் திரவம் வடிந்தது. 57 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து வாங்கிய அந்த ட்ரெட்மில்லுக்கும் இன்னும் ஈ.எம்.ஐ. கூட கட்டி முடிக்கப்படவில்லை. அதற்குள் அது தன் வாயை பிளந்துவிட்டது. அன்றிரவு அவருக்கு மன உளைச்சலால் தூக்கமே வரவில்லை.

அடுத்த நாள்

அவர் ஆவேசமாக சைக்ளிங் செய்து கொண்டிருந்தார். அவருக்கு கீழ் அந்த சைக்கிள் இருந்தது. அதை உற்று பார்த்தால் ஒழிய கண்டுபிடிக்க முடியாது. அதன் மீது ஏறி அமர்ந்து அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சியை ஒற்றை வரியில் வர்ணிக்க வேண்டுமானால்...........அது.........அதன் பெயர் .........

“வன்முறை”

அவர் உடலிலிருந்து வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அவரைப் போலவே ஜிம் மாஸ்டரின் உடலிலிருந்தும் வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அந்த சைக்கிள் மட்டும் இன்று உயிர்தப்பினால் வடபழனி முருகனுக்கு தேங்காய் உடைத்து அபிஷேகம்செய்வதாக வேண்டிக் கொண்டார். அந்த சைக்கிள் தான் ஒரு ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்ட தரமான சைக்கிள் என்பதை நிரூபித்தது. உடற்பயிற்சி கூட ஆசிரியருக்கு அப்பொழுதுதான் தெளிவு ஏற்பட்டது தான் ஒரு நாத்திகன் என்று. இருப்பினும் அவரது உதடுகள் அநிச்சையாக கடவுளுக்கு நன்றி தெரிவித்தது. 

மற்றொரு நாள்

அவர் குதித்தோடிச் சென்று 8 கிலோ தம்பில்சை எடுத்தார். அது அவரது கையில் ஒரு கோழி முட்டையைப் போல காட்சியளித்தது. அதைப் பிடித்துக் கொண்டு மேலும், கீழுமாக கைகளை ஆட்டினார். இவ்வளவு சுலபமான உடற்பயிற்சியையா? இத்தனை நாட்களாக மேற்கொள்ளாமல் விட்டுவிட்டோம்.... எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தனக்குள் நொந்து கொண்டார்.

3 மாதங்களுக்குப் பிறகு

உடற்பயிற்சிக் கூடத்தில் இன்னும் பழுது ஏற்படாமல் இருக்கும் ஒரே எலெக்ட்ரானிக் உபகரணம் எடைபார்க்கும் இயந்திரம் மட்டுமே. அதற்கும் இன்று முடிவு நெருங்கிவிட்டது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை எடைபார்ப்பது உடற்பயிற்சிக் கூடத்தின் வழக்கமாக இருந்தது. ஒரு உடைந்த எடைபார்க்கும் இயந்திரத்தை என்ன விலைக்கு எடுத்துக் கொள்வவீர்கள் என காயிலாங்கடை வைத்திருப்பவரிடம் அன்று காலைதான் விசாரித்து வந்திருந்தார் உடற்பயிற்சி ஆசிரியர். இறுதி அஞ்சலியாக அந்த இயந்திரத்திற்கு மாலை அணிவித்து மானசீகமாக மரியாதை செலுத்தினார். 

அனைவரும் வரிசையாக நின்று தங்கள் உடல் எடையை ஜிம் மாஸ்டருக்குத் தெரிவித்தனர். இறுதியாக அவரது முறை வந்தது. அந்த குட்டி இயந்திரத்தின் மீது ஏறி நிற்க அவருக்கு சங்கோஜமாக இருந்தது. அதை சீரழிக்க அவருக்கு மனம் வரவில்லை. உடற்பயிற்சிக்கூட விதிமுறைக்கு உட்பட்டு அவர் அந்த வன்முறையில் இறங்கினார். எடை இயந்திரத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த முள்ளானது. அவரது அபரிமிதமான எடையால் உந்தப்பட்டு 100 சிசி குதிரைத்திறன் வேகத்துடன் அதிவேகத்தில் சுற்றியது. இறுதியில் அந்த முள் 127 என்கிற எண்ணைக் காட்டியது.

உடற்பயிற்சி ஆசிரியர் இட வலமாக தலையை ஆட்டினார். தனது 3 மாத உழைப்பு விழலுக்கு இறைந்த நீராகிப்போனதை நினைத்து தலைகுனிந்தார். மண்மேடு மழைக்குக் கரையும், மலைக்குன்று கரையுமா? என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். 

ஆனால், அவரோ மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தார். அது ஒருபழையக் கட்டிடம் என்றும் பாராமல்.....அவர் தனது மாஸ்டரின் கைகளைப் பிடித்துக்கொண்டு கூறினார். 

....... நான் இங்கு வரும் பொழுது 130 கிலோ எடை இருந்தேன். ஆனால் தற்போது 3 மாதத்தங்களுக்குப் பிறகு 3 கிலோஎடை குறைந்திருக்கிறேன். அதுாவது மாதத்திற்கு ஒரு கிலோ எடை குறைந்திருக்கிறேன். அப்படியானால் ஒரு வருடத்தில் 12 கிலோ எடை குறைந்துவிடுவேன். 4 வருடங்களில் 48 கிலோ எடை குறைந்துவிடுவேன். 5 வருடங்களில் எனது 6 பேக் லட்சியத்தை அடைந்து விடுவேன். நான் என்னவோ 10, 12 பவருடங்கள் ஆகுமோ என்று நினைத்தேன். ஆனால் 5 வருடங்களில் எனது லட்சியம் நிறைவேறிவிடும் என்பதை நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது........ என்று கூறினார். 

ஜிம் மாஸ்டர் இமைக்க மறந்தவராய் அவரது கணக்கை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் 5 வருடங்களில் அல்ல 3 வருடங்களில் தனது 6பேக் லட்சியத்தை அடைந்து விடுவார் என்று நம்பினார். ஏனெனில் அவரது சக்சஸ் பாய்ண்டை பார்த்து விட்டார் என்பதை உணர்ந்தார். ஆனால் அதுவரை தனது ஜிம்மின் நிலை என்ன கதிக்‍கும் செல்லும் என்பதை நினைத்து சிறிது சிறிதாக மனம் உடைய ஆரம்பித்தார்.

Pin It