இவன் அவள் நெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்தான். அவளின் கரங்கள் அவன் தலையைக் கோதிக்கொண்டிருப்பது வழக்கம். அன்று அது நடக்கவில்லை. பேருந்தில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.. பேருந்தின் ஜன்னலைக் கிழித்துக்கொண்டு வந்த காற்றுதான் இவன் தலையை வருடிக் கொண்டிருந்தது. அதனை இவன் அறியாமல் காதல் மனைவியின் மார்பளித்த சுகத்தில், பேருந்தின் தாலாட்டில் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவளின் கைப்பையில் இருந்த செல் ஒலிக்க, அவள் எடுக்க முயற்சித்தாள். அந்த அசைவில் கண் விழித்த இவன் அவள் வசதிக்காக நேராக அமர்ந்துகொண்டான். அவள் செல்லை எடுத்துப் பேசினாள். பின்னர், கீழுதட்டைக் கடித்தவாறு யோசிக்க ஆரம்பித்தாள்.

தொலைபேசி உரையாடல் முடிந்தது என்று உணர்ந்த இவன், அவள் முகத்தைப் பார்த்து துணுக்குற்றான். ‘என்ன யோசனை இவளுக்கு?’ என்று யோசித்தவனாக ‘என்னடி பாப்பா?’ என்று கேட்டான்.

‘ஒன்னுமில்ல’, என்றவள், யோசித்தவாறு, ‘ஒரு ரிசர்ச் புராஜக்ட்… மேடம் ஷோபனா ஒடனே மதுரைக்கு வான்னு சொன்னாங்க.. அதான் யோசன..’ என்றாள் அவள்.

மரணப் படுக்கையில் இருந்த நண்பரைச் சந்திக்க அவர்கள் தஞ்சைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அதன் பின் அவளின் பெற்றோரைப் பார்க்க அவள் சென்னை செல்ல, இவன் திரும்பிவிடுவான் என்பது திட்டம்.

‘பேசாம மதுரைக்குப் போயிடலாமா..? அடுத்த ஸ்டாப் எது?’, என்றாள் அவள் பரபரப்பாக.

இவன் யோசித்தான். ’நீதான் முடிவு செய்யனும்.. ஒன்னோட அப்பா அம்மா என்ன நெனப்பாங்க? மதுரைக்குப் போனா நல்லதுதான். ஒரு ரிசர்சு புராஜக்ட்னா... கணிசமா.. காசு கெடக்கும்ல.. ஆனா.. நீதான் சொல்லனும். ஒன்னோட விஷயத்துல நீதான் முடிவு எடுக்கனும்’ என்றவாறு அவளை பின்னோக்கி சாய வைத்து அவள் மார்பில் தலை சாய்த்தான்.

பேருந்து தஞ்சையை நெருங்கும் வரை இவன் எழவில்லை. அவளும் பேசவில்லை. பேருந்து நகரத்திற்குள் நுழைந்தபோது அவள் கேட்டாள்.. ‘கடைசியா நல்லா தூங்கினியா?’.

அவள் முகத்தில் கேலியான சிரிப்பு இருந்தது. ஆனால், அவனுக்கு அப்போது ‘கடைசியா..’ என்பதன் பொருள் புரியவில்லை.

இறங்கும்போதும் அதன் பின்னும் எதையோ யோசித்தவாறு இருந்தாள். இவன் அதைக் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. ‘குட்டியம்மா எப்போதும் இப்படித்தான்’, என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்றபோது அவள் இயல்பாக இருந்தாள். சூழ்ந்துகொண்ட நண்பர்களிடம், ‘அவருகிட்ட சொல்லுங்க.. பொது வாழ்க்கைக்கு அந்தாண்ட சொந்த வாழ்க்கையிருக்கில்ல’, என்று சொன்னாள்.

இவனுக்குச் சற்று எரிச்சல் வந்தது. ஆனாலும், அது வழக்கமாக அவள் சொல்வதுதான் என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

மருத்துவமனையைவிட்டு வெளியேறும்போது மணி இரவு 9 ஆகியிருந்தது. பேருந்து நிலையத்திற்கான தனியார் மினி பஸ்சில் ஏறி இவனும் அவளும் அமர்ந்தனர். பேருந்தில் இவர்களையும் சேர்த்து பத்து பேருக்கு மேல் இருக்காது. இவர்கள் பேச முடியாத அளவுக்கு வீடியோ பாட்டு அலறிக்கொண்டிருந்தது.

இவனுக்குச் சத்தம் பிடிக்காது. ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தான். நகரம் இருட்டாக இருந்தது. ’இவள் ஏன் திடீரென்று சென்னைக்குப் போறேங்குறா?’ என்று யோசித்தான். தெரியவில்லை. சமீப மாதங்களில் அவள் இயல்பாக இல்லை. இவர்கள் உறங்கும் அறையில் அவள் உறங்குவதில்லை. ஹாலுக்குச் சென்றுவிடுவாள். இவர்களின் பராமரிப்பில் படிக்கும் சிறுமிகளின் மத்தியில் படுத்துக்கொள்வாள்.

இவன் நள்ளிரவில் சென்று எழுப்புவான். அவளோ ’ச்சூ.. புள்ளைங்க.’ என்பாள், இவன் விலகிவந்து கட்டிலில் படுத்து தூங்காமல் யோசிப்பான்.

இப்போது சென்னைக்குப் போகிறேன் என்று புறப்பட்டிருந்தாள். ஏன் என்று இவனுக்குத் தெரியாது. நிறைய வேலைகள் வந்தும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்களின் பொருளாதாரம் சிரமத்தில் இருந்தது. ‘என்ன யோசிக்கிறாள் பாப்பா’, என்று இவன் யோசித்தும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவளை இவன் கைபிடித்தது சென்னை மெரினா கடற்கரையில். அது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு…

கடற்கரை இருட்டில் ஏதோ பேசியபடி வந்தவள், இவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.. இவனுக்கு உடலெல்லாம் தீ பற்றி எரிந்தது. அது இவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. போராட்டம்தான் வாழ்க்கை என்றான இவன் பல பெண்களைத் தோழர்களாக அறிந்தவன். ஆனால், எவரும் இவனுக்கு இந்த தொடல் உணர்வு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை.

மாஸ்கோவில் எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையை இவன் படித்திருக்கிறான். சிறந்த அடுத்த வாரிசு ஏற்பட இந்த எலிதான் சிறந்தது என்று எலிகள் துணையைத் தேர்ந்தெடுக்குமாம், அதுதான் உயிர்களின் இயல்பான உணர்வாம்.

அப்படியானால், இவள்தான் என் துணையா என்று இவன் யோசித்தான். எந்த யோசனையும் இன்றி அவளின் கரங்களை இறுக்கிக் கொண்டான். அவளின் கைகள் பட்டுத்துணி போல இருந்தன. இறுக்கிய விரல்களின் வேர்வை இவன் கைகளை சில்லிட வைத்தது. அவளின் கை வெப்பம் இவனுக்குள் தீ மூட்டியது. ஐந்து உணர்வும் பெண்ணிடம் உள்ளன என்றான் வள்ளுவன். ஆனால், வெப்பமும் குளுமையும் ஒரு சேர அளிக்கும் வினோதப் பெண்ணை இவன் முதன் முதலாக இப்போதுதான் சந்தித்திருந்தான்.

சென்னை கடற்கரையில், ஓரமாக கொடிகள் வளர்ந்திருந்த மேடான பரப்பில், அமர்ந்து நிறைய பேசினார்கள். அவள் இவன் கைகளை விடவில்லை. உயர்ந்த விளக்குத் தூண்களில் இருந்து பரவிய வெளிச்சம் அந்த இடத்தை இருட்டாக்கியிருந்தது.

‘அப்ப என்ன சொல்றடா?’ என்று அவள் கேட்க இவன் சற்று யோசித்தான். பின்னர் அவளை நோக்கி நகர்ந்தான். அவளின் உதடும் இவனின் உதடும் மிக நெருக்கத்தில் இருந்தன. சட்டென இவன் கழுத்தில் கை வைத்து இழுத்தாள். அது இவனின் முதல் முத்தம். இவனின் தாய் தந்த முத்தம் மாதிரியில்லாமல் உடலெல்லாம் முறுக்கேறின. அவளை இறுக்கிக் கொண்டான். எத்தனை நேரம் போனதென்று தெரியவில்லை.

அப்படி நெருங்கிய பெண்தான் சில மாதங்களாக விலகியிருந்தாள். ஏன் என்று இவன் பல முறை யோசித்திருக்கிறான். பிரச்சனைகள்தான் காரணம் என்று இவன் அறிவான். இவர்கள் இருவரும் சம்பாதித்தது போதுமானதாக இல்லை. இருவருமே நிரந்தர வேலையற்றவர்கள்..

அதுமட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிருந்தது… நிறைய சிக்கல்களுடன்.

இருவரும் குழந்தையைத் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார்கள். முடிவு செய்த பின்னர் முயற்சி செய்தும் இவர்களுக்கு ஏனோ குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்களிடம் போக போதுமான பணமில்லை.

சில சமயம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தியின் குழந்தையை எடுத்து தங்கள் குழந்தையாக ஆக்கிக் கொள்ளலாம் என்று யோசித்திருக்கிறார்கள்..

‘இருக்கிற நெருக்கடியில் குழந்த வேறயா?’ என்று அவள் கேட்டிருக்கிறாள்.

‘எதுக்கு தத்துப் பிள்ளை..? ஒன்ன மாதிரி ஒரு பிள்ளை வேணும்’, என்றும் சொல்லியிருக்கிறாள். இவன் பெயரையும் அவள் பெயரையும் வைத்து ஒரு பெயரை தயார் செய்து வைத்திருந்தாள். என்ன வேடிக்கையென்றால் அந்தப் பெயர் ஆண் குழந்தைக்கும் பொருந்தும். பெண் குழந்தைக்கும் பொருந்தும்.

சிக்கல்… பிள்ளை பிறக்கவில்லை, தத்தும் எடுக்க முடியவில்லை.

ஒருவேளை தன்னிடம்தான் குறையோ என்று இவன் யோசிக்க ஆரம்பித்திருந்தான். வெட்கம் இவனைப் பிடுங்கித் தின்றது. குழந்தையில்லை என்றால் என்ன? அவள்தான் இவனின் அரவணைப்பிற்குப் பின் களைத்து உறங்குகிறாளே என்று தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கிறான். ஆனால், தாயாக வேண்டும் என்ற அவளின் கனவு பலிக்கவில்லையே.... என்ன செய்யலாம்?

காதல் என்பது என்ன என்று இவன் பலமுறை யோசித்திருக்கிறான்..

இவனுக்கு அது உடல் சார்ந்த விஷயம் என்று படவில்லை. எத்தனையோ ‘அழகான’ பெண்களைக் கடந்திருக்கிறான். மார்க் போடுவதற்குமேல் இவனுக்கு ஏதும் தோன்றியதில்லை. மார்க் போடத் தோன்றுவதே தான் ஓர் ஆண் என்பதற்கான அடையாளம் என்று தன்னை விமர்சித்துக் கொண்ருக்கிறான்.

ஆனால் இவளைப் பார்த்த முதல் நாளில் இவனுக்குள் மணியடித்தது. ஒல்லியான, உடலில் சதைப் பற்றில்லாமல் இருந்த அவள், இவனை ஈர்த்தாள். அவளின் குரலில்தான் விஷயம் இருக்கிறது என்று நினைத்தான். அப்படியில்லை என்று பட்டது. அந்த இனிய குரலுக்குப் பின்னிருந்த உன்னதமான மனம் காரணம் என்று பட்டது.

அவள் அருகில் இருந்தால், உலகம் இனிமையாக இருந்தது. ஒரு நாள் அவர்கள் தனிமையில் இருந்தபோது அவளைத் தூக்கி, குழந்தையை இருத்துவது போல, இடுப்பில் இருத்திக் கொண்டான். அத்தனை ஒல்லியவள். வெட்கத்தில் இவன் தலையில் குத்து குத்து என்று அவள் குத்தியது இன்றும் இவன் தலையில் இனிக்கிறது.

எதற்காக அவளைப் பிடிக்கிறது என்று இவன் யோசித்திருக்கிறான். காதல் என்பது சுயநலமற்றது.. மனதுக்குப் பிடித்தவர்களுக்காக வாழ்வதுதான் காதல் என்று இவனுக்குச் சொல்லியிருக்கிறார்கள்..

அவளை இவனுக்குப் பிடித்திருந்தது. அவளுக்காக வாழலாம் என்று முடிவு செய்துதான் இணைந்திருந்தான். ஆனால், அந்த மினி பஸ் பயணத்தில் அவள் விலகி அமர்ந்திருந்தாள். இந்த சில மாதங்களாக விலகியிருந்தது போல அவளின் துப்பட்டா கூட இவனின் மேல்படாமல் விலக்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள்..

வாழ்க்கையின் பிரச்சனைகள் அவளை உலுக்குகின்றன என்று பட்டது. அந்தப் பிரச்சனைகளை இங்கே சொல்வது தேவையற்றது. உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளை யோசித்துக்கொள்ளுங்கள்.. அது போதும்.

இன்றைய மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வதே பிரச்சனை. நாளை என்னவாகும் என்பதே பிரச்சனை. உங்கள் பைக்குக்கு 100 ரூபாய்க்கு எவ்வளவு பெட்ரோல் கிடைக்கும் என்பது முதல் குடியிருக்க சொந்தமாக வீடு இல்லை என்பது வரை அனைத்தும் புரிபடாத பிரச்சனைகள்.

வாழ்க்கைச் சிக்கல் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவன் இவன். அவள் கவலையுடன் காத்திருக்க, இவன் வீடு திரும்பும்போது பக்கத்து வீட்டு நாய்க்குப் போட பிரட் வாங்கி வருபவன். இவனுக்கு அன்றைய வாழ்க்கை முக்கியம். மனிதம் முக்கியம்.

அவளுக்கு எதிர்காலம் முக்கியம். ‘இருக்கிற நெலமையில நாயுக்கு ரொட்டியா?’ என்று கடிப்பாள்.

அந்த சின்ன பேருந்து ஆங்காங்கே நின்று நிதானித்துப் பயணித்தது. அலுத்துப்போன இவன், அவளின் தோளில் தலைசாய்த்துக்கொண்டான்.. அவளோ, இவன் தலையை தோளோடு இறுக்கிக்கொண்டாள். பின்னர் சரித்து நெஞ்சில் நிறுத்திக்கொண்டாள். அதில் விரைவு இருந்தது. ‘இதுதானே வேண்டும்.... இதோ’, என்பது போல இருந்தது. விருப்பா? வெறுப்பா? என்று இவன் யோசிக்கும்போது பேருந்தின் வீடியோவில் சர்க்கரை நிலவே என்ற பாடல் கேட்டது.

இவனுக்கு அந்தப் பாடல் பிடிக்கும், தொலைக்காட்சியில் சினிமா பார்க்காமல் பாடல் காட்சி பார்க்கும் வினோத பிறவி இவன். சினிமா அபத்தம். பாடல் காட்சிகளைத் தனியே பார்க்கும்போது மனித உணர்வு தெரிகிறது என்று சொல்லும் வினோத ஜந்து இவன்.

சட்டென்று தலையை அவளின் பிடியிலிருந்து விலக்கிக்கொண்டு பாடல் காட்சியைப் பார்க்க ஆரம்பித்தான். தஞ்சையின் தெருக்கள் மின்வெட்டில் இருட்டாக இருக்க, பாடல் காட்சியில் ஒன்றியிருந்தான்.

‘உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க.. என்னை ஏன் பிடிக்காதென்றாய்?’ என்ற வரிகள் ஒலித்தபோது அவள் இவனைக் கேட்டாள்…‘இந்த மாதிரி நானும் போயிடுவேனடா?’.

இவன் திரும்பவில்லை. யோசித்தான்.. பின்னர் சட்டென்று திரும்பி அவள் முகம்பார்த்து சொன்னான்…

‘போயிடுவ’.

சொன்னவன் தானே அதிர்ச்சியுற்றவனாய், ஏன் இப்படி சொன்னேன் என்று யோசித்தான்.

அவளோ இவனை சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மௌனம் நீண்டது. அப்புறம் இவன் யோசித்தவனாக கேட்டான், ‘சரி.. மேடத்தைப் பார்க்கப் போறியா..? சென்னைக்கா?’

அவள் இருட்டைப் பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தாள். அவள் சிந்தனையில் அல்லது குழப்பத்தில் இருக்கும்போது ஒருபக்க உதட்டைக் கடித்துக்கொண்டிருப்பாள்.. தன்னையே தின்று தீர்க்க நினைக்கும் அரக்கியோ என்று இவனுக்குத் தோன்றும்.

அவள் பதில் பேசவில்லை.

தஞ்சையின் பேருந்து நிலையத்தில் இறங்கி, அவள் சென்னை பேருந்து நிற்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்த பின்னர்தான் இவனுக்குப் புரிந்தது.

அவள் சென்னை என்று முடிவு செய்துவிட்டாள் என்று உணர்ந்துகொண்டு பேருந்துக்குள் ஏறி சீட்டைப் பிடித்து அமர வைத்து, அவளுக்கு தண்ணீர் பாட்டிலும் பிஸ்கெட்டும் வாங்கிக் கொடுத்தான்.

இவன் கீழே நிற்க, இவன் செல்லில் யாருடனோ பேசினாள். இரைச்சலில் இவனுக்கு எதுவும் கேட்கவில்லை.

பேருந்து புறப்பட்டபோது, பேச்சை நிறுத்தாமல் இவனுக்கு கைகாட்டினாள். பேருந்து வெளியேறி வேகம் பிடித்து திரும்பும்வரை இவன் காத்திருந்தான். வழக்கமாக ஜன்னலுக்கு வெளியே நீளும் அவளின் கரங்களைக் காணவில்லை.

வெறுப்புடன் நடந்து ஒரு சிகெரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான்.

அப்புறம் சில வாரங்கள் வரை அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை. இவன் அழைத்தபோது பதிலில்லை. நிறைய சிகெரெட் பிடித்தான். கையில் காசிருக்கும்போது டாஸ்மாக் போனான். ’நீ பொண்டாட்டி இல்லடி.. அம்மா’ என்று முனகியபடி தூங்கப் பழகியிருந்தான்.

அவளிடமிருந்து ஒரு நாள் விவாகரத்து அறிவிப்பு வந்தது. படித்தவுடன் மயங்கிப் போனவனைப் போல சரிந்தான். வெகுநேரம் அந்த தாட்களைப் படித்தும் ஒன்றும் புரியாமல் தவித்தான். எழுத்துக்களிலா விஷயம் இருக்கிறது? வாழ்க்கையில் அல்லவா? என்ன தவறு நடந்தது?

எப்படி செல்லை சுவிட்ச் ஆப் செய்வது போல உறவை சுவிட்ச் ஆப் செய்ய முடியும் என்று இவனுக்குப் புரியவில்லை. உடனடியாக அவளை அழைத்தான். அவளின் செல் எப்போதும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அதனை அவள் ஆன் செய்ததாகப் படவில்லை. அவளைத் தேடி சென்னை சென்றபோது அவள் வீட்டை மாற்றியிருந்தது தெரிந்தது. இவன் வாங்கித் தத்திருந்த சிம்மை அவள் தூக்கிப்போட்டிருக்கிறாள் என்பது வெகு தாமதமாகப் புரிந்தது.

பேசாமல் திரும்பி நடந்தான். என்ன செய்யலாம்? அவளின் உறவினர்கள் நண்பர்களிடம் விசாரிக்கலாமா என்று யோசித்தான். இரயில்வே நிலையத்தின் அருகே இருந்த பாரில் நுழைந்து அமர்ந்தான். அவன் பகலில் மது அருந்தும் முதல் நாள் அது. தகரக் கூரை போட்ட பார் வறுத்தெடுத்தது. மெதுவாக மதுவை உறிஞ்சியபடி யோசித்தான்.

பேசாமல் ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று தோன்றியது. என்ன பேசி என்ன பயன்? வாழ்ந்தபோது, வாழ்ந்தவளுக்குப் புரியாத செய்திகளா மற்றவர்களின் பரிந்துரையில் புரியப் போகிறது?

கொளுத்தும் வெயிலில் பேருந்து பிடித்து ஊருக்குத் திரும்பினான்.

ஊரில் வாழ்க்கை மிக மெதுவாக நகர்ந்தது. ஒரு நாளில் பலமுறை பலருக்கு அவளைப் பற்றி பதில் சொல்ல வேண்டிவந்தது. இவனுக்கு அலுத்துப்போகும் அளவுக்கு கேள்வி கேட்கும் நபர்கள். அவளின் செல்வாக்கு அந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்று இவனுக்குப் புரிந்தது.

நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆகின. இவன் விவகாரத்து நோட்டீசுக்கு பதில் அனுப்பவில்லை. பதில் அனுப்பி என்னவாகும்? விளக்கமளித்து, கெஞ்சி.. பஞ்சாயத்து வைத்து காதலைப் புதுப்பிக்க முடியுமா? அப்படியானால்,... அது காதலா?

தினமும் அவளின் பெயரைச் சொல்லி ‘பாப்பா எப்ப வரும்?’ என்று கேட்ட அவர்களது தெரு பாட்டிக்கு இவன் சொன்ன கதைகள் அலுத்துப்போய் கேட்பதை நிறுத்தியிருந்தார்.

இரவில் இவன் சிகரெட் வாங்கச் செல்லும்போது குலைத்த நாய்கள் இப்போது நட்பாகியிருந்தன. கடை வரை வந்து ரொட்டி பாக்கெட்டைப் பிரித்து இவன் தூக்கிப் போட காத்திருந்தன.

’நாய்களுக்கு உள்ள அன்பு…’ என்று யோசித்தவனுக்கு சிரிப்பு வந்தது. ரொட்டி பாக்கெட்தான் அன்பை அளிக்கிறது என்று நினைவுக்கு வர வாய்விட்டு சிரித்தான்.. கடைக்காரர் இவனை வினோதமாகப் பார்த்தார்.

விலகி நடந்தான். மின்வெட்டில் தெரு இருட்டாகியிருந்தது. நாய்கள் இவன் பின்னே வாலை ஆட்டிக்கொண்டு காவலுக்கு வந்தன. தேவைகள்தான் உயிர்களை ஒன்று சேர்க்கின்றன… சேர்ந்து வாழவைக்கின்றன என்று யோசித்தான்.

வீட்டில் நுழைந்து இவன் கம்பிக் கதவைப் பூட்டும் வரை நாய்கள் இவனைப் பார்த்து வாலைக் குலைத்துக் கொண்டிருந்தன. இவனுக்குப் பாவமாக இருந்தது. சமையலறைக்குச் சென்று பார்த்தான். ஒன்றுமில்லை. நேற்று இவன் சமைத்து இன்றுவரை தின்று மீதம் வைத்திருந்த சோறு மட்டுமே இருந்தது. எடுத்து வந்து கதவைத் திறந்து தரையில் சோற்றை வைத்தான். மோந்து பார்த்த நாய்கள் விலகிச் சென்று நின்றுகொண்டு இவனைப் பார்த்து வாலை ஆட்டின.

‘நாயே.. நானே இந்த வெறுஞ்சோதைத்தான் தின்னேன்’ என்று உரக்க கத்தியபடி கதவை அடித்துச் சாத்தினான்.

வெறுந்தரையில் படுத்துக்கொண்டான். வெளியே நாய்களின் முனகல் கேட்டது. பசிக்கிறதோ?

இவனுக்கும்தான் பசித்தது. ஆனால், அந்த வெறுஞ்சோற்றை இதற்கு மேல் சாப்பிட முடியாது. நாய் வாழ்க்கை என்று சோகம் கவ்வியது.

கண்ணை மூடினான். நாயின் குரல் கேட்டது, அது வெள்ளை நிற நாய், நீளமான, உயரமான நாய். அது இவன் தோள் மீது கால்களைப் போட்டுக்கொண்டு முகத்தை முத்தமிட முனையும்.

அன்று அவள் முத்தமிட்டது நினைவுக்கு வந்தது. மனக் கரங்களால் அவளை இறுக்கிக்கொண்டான். கண்களை மூடினான்.

உறக்கம் விளையாட்டுக் காட்டியது. அலுத்துப் போனவனாய், தலையணையை இழுத்து மடித்து வைத்துக்கொண்டு, அவள் மார்பு என்பதாய் நினைத்துக் கொண்டு தலையைப் புதைத்துக் கொண்டான். இனிமையாக இருந்தது. அவளின் கரங்கள் இவன் தலையைக் கோதுவதாய் நினைத்துக் கொண்டு தானே தன் தலையைக் கோதிக் கொண்டான்.

அந்த கலக்கத்தில் புரிந்து… தனது சுயநலம்தான் தனது காதல் என்று.

ஒன்றையொன்று சார்ந்த இரண்டு சுயநலங்கள்தான் காதல் என்று.

அப்போதுதான் அவளின் நியாயம் இவனுக்குப் புரிந்தது. அவளின் நலன் முரண்பட்டால், அவள் எப்படி இவனைக் காதலிப்பாள்?

எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். காதலும் சுயநலமே என்றானால், மனிதம் எப்படி ஜீவிக்கும் என்று முனகியபடி இருட்டை வெறிக்க ஆரம்பித்தான்.

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It