திருச்சியிலிருந்த சமயங்களில் எல்லா இரவுகளும் மான்ஸனில் தான் கழிந்தன. என் வீடு திருச்சியில் இருந்தும், அப்போதெல்லாம் அறை எண் 6ல் சரவணனுடன் தான் என் வனவாசம்.

அப்போது சரவணன் பர்மா பஜாரின் ரோட்டோரத்தில் வாட்ச் கடை வைத்திருந்தான். நான் 10ம் வகுப்பு இறுதித் தேர்வெழுதி கோடை விடுமுறையில் பர்மா பஜாரின் 7ம் நம்பர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் சந்தித்ததும் நண்பர்களானதும் இங்கே தான். அதன் பிறகு தான் இந்த அய்யாதுரை மேன்சனுக்கு அவன் குடி பெயர்ந்தான்.

படித்தவர்கள், படிக்காதவர்கள், இளையோர், முதியோர் என கலவையாக மான்ஸன் இருந்தது. நக்கல், கேலி, நையாண்டி என சகல வால்தனங்களையும் காலையிலேயே அரங்கேறக் காணலாம். இந்திரா காந்தி மகளிர் கல்லூரியின் பின்புற வாசலை ஒட்டியே மான்ஸன் இருந்ததால் முதல் மாடியிலும், இரண்டாம் மாடியிலும் தரிசனத்துக்காக கல்லூரி மணி அடிக்கும் வரை வெற்று மார்புடன் காத்திருந்தார்கள் ஜொள்ளர்கள்.

நான் இந்த மான்ஸன்வாசி அல்ல என்றாலும் மான்ஸனில் உள்ள அனைவரும் எனக்குப் பரிச்சயம். மான்ஸன் உரிமையாளர் அய்யாதுரை கீழ் போர்ஷனில் குடியிருந்தான். மன்னிக்கவும் நான் உள்பட அனைவரும் அவரை ஒருமையில் தான் அழைத்தோம். பணத்திற்காக எதையும் இழக்கத் துணிந்தவர். சில ஜால்ரா ஒட்டுண்ணிகளைத் தவிர மற்றவர்கள் அவரை காட்டெருமை, எமராஜன், பன்னி என பட்டப் பெயர் வைத்து தான் பேசிக் கொள்வார்கள்.

இரவு யாரேனும் கெஸ்ட் தங்கினால் கெஸ்ட் பில் ரூ.25/-ஐ தர வேண்டும். நான் சரவணன் ரூமில் தங்கினால் அய்யாதுரை ரௌண்ட்ஸ் வரும் போது கக்கூசிலும் மொட்டை மாடியிலும் 'கண்ணா மூச்சி ரே ரே' விளையாடுவோம். செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் சமயங்களில் வாட்ச்மேனுக்கு லஞ்சம் கொடுப்பதும் அவன் விசுவாச மிகுதியில் எங்களை காட்டிக் கொடுப்பதும் எங்களுக்குப் பழகி விட்டது.

அப்போதெல்லாம் சிப்பி தியேட்டரில் படம் மாறியதுமே நானும் அவனும் ஆங்கிலப் படம் பார்க்க கவுன்டரில் ஆஜர் ஆகி விடுவோம். அர்னால்டும் ஜிம் கேரியும் எனக்குப் பிடித்தவர்கள். எனக்கே பிரமிப்பூட்டும் வகையில் பாய்ஸில் வரும் செந்திலைப் போல ஆங்கில படங்களின் கம்ப்ளீட் டேட்டாபேஸே வைத்திருந்தான் சரவணன்.

இந்த கதைக்கு மிக முக்கியமானவர் ரவி. அவர் மேன்சனுக்கு வந்ததிலிருந்து அவரை 'ரவி சார்' என்று தான் அழைத்தோம். கட்டுமஸ்தான உடம்பும் லேசான தொப்பையும் அவரது சொத்துக்கள். தன்னால் கடைபிடிக்க முடியாத விஷயங்களையெல்லாம் மற்றவர்க்கு அட்வைஸாக வாரி வழங்குவார். எங்களை விட மூத்தவர். எங்கள் மேன்சனில் அவருக்கு மட்டும் பட்டப் பெயர் வைக்கப்படவேயில்லை.

ஆனால் எங்களுக்கெல்லாம் அப்படியில்லை. எங்களின் பெயரை விட எங்களுக்கு வைக்கப்பட்ட பட்டப் பெயர்களே பிரசித்தம். எனக்கு சரவணன் வைத்த பெயர் 'ஸ்பைடர்'. காரணத்தை சரவணனிடம் தான் கேட்க வேண்டும்.

மேன்சன் முழுவதும் அவனால் பட்டப் பெயர் வைக்கப்பட்ட கேரக்டர்கள் ஏராளம். பட்டப் பெயர் வைத்ததோடு அதை தண்டோரா போடாமலேயே பிரபலப்படுத்தி விடுவான். மேன்சனிலேயே அதிகம் பேசுவது இவன் தான். மேன்சன்வாசிகள் அதிகம் கடன் வாங்குவதும் இவனிடம் தான். அப்பாஜி, க்ராக் ஜாக், செமி, பீர்பால், சூட்கேஸ், சீன், சிரி, பல்லி என பட்டப் பெயர்கள் நடப்பில் இருந்தன.

அப்போது ரவிக்குத் திருமணமாகவில்லை. மாலை நேரங்களில் இந்திரா காந்தி கல்லூரி வாசலில் சைட் அடிக்கப் போய் விடுவார்.

"என்ன சார் எதாச்சும் தெறிச்சா" என்று நாங்கள் கேட்டால் போதும் உடனே தன்னிடம் மடிந்த பிகர்களைப் பற்றி புழுகத் தொடங்குவார். நாங்கள் எல்லாவற்றையும் கேட்டு முடித்து விட்டு, "இதெல்லாம் எந்த சினிமாவுல சார் வருது" என்போம்.

பின் வந்த நாட்களில் எங்களுடன் ஐக்கியமாகி விட்டார்.

கேரமில் நானும் சரவணனும் ஒரு டீம்... ரவியும் வசந்தும் ஒரு டீம்... கேரம் விளையாட உட்கார்ந்தால் எப்படியும் இரவு 2 மணி ஆகி விடும்.

"இன்னுமாட முடியல, மனுஷன் தூங்க வேண்டாமாடா " என்று சாரதாஸில் வேலை செய்யும் அப்பாஜி புலம்பத் தொடங்குவான்.

அந்த சிறிய அறையில் ரவி சார் ஊதித் தள்ளிய புகை வெண் படலமாய் படர்ந்து மூச்சு முட்டும். நானும் சிகரெட் பிடிப்பேன் என்றாலும் இவர் அளவுக்கு இல்லை.

"சார் விளையாடும் போது கூட சிகரெட் வேணுமா, வெளிய போய் குடிங்க சார்" என்பான் சரவணன்.

"பார்ரா சாத்தான் வேதம் ஓதுது, தண்ணி மட்டும் அடிக்கலாமா" என்பார்.

"சார் தண்ணி அடிச்சா டைஜெஸ்ட் ஆயிரும், ஆனா புகை உள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கும்" என்று சரவணன் அவனுக்குத் தெரிந்த அறிவியல் விளக்கம் தருவான்.

சரவணன் சிகரெட் தொட மாட்டான். ஆனால் சிவா ஒயின்ஸில் சில இரவுகளில் தென்படுவான். அவனுடன் நானும்.

எங்களின் கூட்டணியில் பின்னொரு நாளில் ரவியும் சேர்ந்து கொண்டார்.

ஒரு நாள் சரவணனின் ரூமிற்கு வந்தபோது சரவணன் ஒரு பானசோனிக் டூ இன் ஒன் டேப் ரிகார்டரைக் காட்டி "இது சும்மா தான் இருக்கு... வேணுமின்னா நீ எடுத்துக்கோ, கேசட் சிக்குது. ரிப்பேர் பண்ணி யூஸ் பண்ணிக்கோ" என்றான்.

நானும் எடுத்துச் சென்றேன்.

சில நாட்கள் கழித்து மேன்சன் வந்தபோது ரவி என்னிடம் வந்து,

"அந்த பானசோனிக் டேப்ப நீ தான் எடுத்துட்டுப் போனியா" என்று கேட்டார்.

"எடுத்துட்டு எல்லாம் போகல, சரவணன் தான் குடுத்தான்" என்றேன்.

பின்பு நடந்த பேச்சுவார்த்தையில்தான் விஷயமே புரிந்தது. ரவி சரவணனிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். பல மாதமாக ரவியும் அதைத் தரவில்லை. அவருடைய பானசோனிக் செட்டும் சரவணனின் ரூமில் கிடந்திருக்கிறது. இது இனி என்னுடையது தான் என சரவணனே முடிவு செய்து என்னிடம் தர, இப்போது நான் சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.

சரவணனும் "பெரிய டேப்பு, டேய் நீ திருப்பி கொடுத்திர்ரா" என்றான். நான் அதை என் சித்தப்பா வீட்டில் தானம் செய்தது இன்னொரு சிக்கல். இதனாலேயே ரவி சார் இருந்தால் மேன்சனுக்கு வருவதைத் தவிர்த்தேன்.

சில மாதங்களில் அந்த விஷயமும் கரைந்து விட்டது. எனக்கு வேறு வேலை கிடைத்து பெங்களூருக்கு சென்று விட்டேன்.

பின்பு திருச்சிக்கு வரும்போது எல்லாம் மேன்சனுக்கு வந்தேன். இப்போது ரவியுடன் வேறு வேறு பார்களுக்கு மது அருந்தச் சென்றோம். ரவிக்கு மாற்றம் தேவைப்பட்டது. சிகரெட் ப்ராண்ட்களும் மாறின.

ஏறக்குறைய எல்லா நாட்களும் நன்றாகவே சென்றன. வழக்கம் போலவே ரவி கேரமில் தோற்றுப் போய் நொண்டி சாக்குகளை சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருந்தார். சைட் அடிக்க ரெகுலராய் சென்றதன் பயனாய் ஒரு "வாழ்வே மாயம்" பிகர் கிடைத்து, அந்த பிகரின் பற்கள் சற்றே எடுப்பாக வெளியே தெரிவதால் சரவணன் அதற்கு "பல்லு" என்று பெயர் வைத்திருந்தான்.

"சார் நீங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணா, தேங்கா துருவ கவலையே பட வேண்டாம்" என்று சரவணன் கிண்டலடிப்பான்.

ஒரு நாள் திடீரென்று அவரின் சொந்தத்தில் ஒரு பெண்ணை மணந்தார். ஆனாலும் மேன்சன் ரூமை காலி செய்யவில்லை. பின் மேன்சனில் அவர் அதிகமாகத் தென்படவில்லை. ஆனால் பனி பொழியும் ஒரு டிசம்பர் மாதத்தில் நான் மேன்சன் சென்றிருந்தபோது ரவியும் இருந்தார். அவர் அன்று தான் வந்திருந்தார்.

"டேய், ரவி இன்னைக்கு ட்ரீட் தராருடா, எப்படிடா மோப்பம் பிடிச்சு வந்தே" என எல்லாரும் என்னை கேலி செய்தார்கள்.

அன்றிரவு நாங்கள் சிவா ஒயின்ஸ் சென்றோம். ஒயின் ஷாப்பின் கீழ் தளம் முழுக்க குடிமகன்களால் நிரம்பி இருந்தது. நாங்கள் முதல் மாடியில் ஒரு டேபிளைப் பிடித்து, சகலகலா விஷயங்களையும் பேசி சார்ஜ் ஏற்றி திருப்பினோம்.

ரூமில் வந்து கேரம் விளையாடினோம். வழக்கம் போலவே ரவி தோல்வியில் வெற்றி கண்டார்.

புதிதாக பர்மா பஜாரில் மதியமே வாங்கி வைத்திருந்த பர்மா சுருட்டை பற்ற வைத்தார்.

"சார் சுருட்டெல்லாம் குடிக்காதீங்க சார்... உடம்புக்கு கெடுதல் சார்" என்றான் சரவணன்.

"சுருட்ட குடிக்கெல்லாம் முடியாது, நான் ஸ்மோக் பண்றேன்" என்றார்.

"எப்படி சார் இவ்வளவு அறிவா பேசுறீங்க" என்றேன் நான்.

பதிலுக்குப் பதில் பேசி, விளையாடி முடித்து, படுத்தபோது மணி இரண்டு.

"டேய் கீழ அய்யாதுரை சத்தம் கேக்குதுடா, போய் எங்காவது ஒளிஞ்சுக்கோ" என்று என்னை எழுப்பினான் சரவணன்.

விடிந்திருந்தது.

நானும் மொட்டை மாடியில் போய் ஒளிந்து கொண்டேன். அய்யாதுரை ரவுண்ட்ஸ் முடிந்து போனவுடன் நானும் வீட்டிற்குச் சென்று விட்டேன். மதியம் சரவணன் கடைக்குச் சென்றேன், புது DVD ஐ கேட்டு. அவன் சாப்பிட சென்று கொண்டு இருந்தான். நானும் அவனுடன் சென்றேன்.

மேன்சன் முன் ஒரு சிறு கூட்டம். பரபரப்பாய் இருந்தது.

நான் "என்னடா அப்பாஜி, சூட்கேஸ், வசந்த் எல்லாம் வெளிய நின்னுகிட்டு இருக்காங்க" என்றேன்.

வசந்த் எங்களைப் பார்த்தவுடன் வந்து "ரவி சார்க்கு உடம்பு சரியில்லன்னு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க" என்றான்.

"என்னடா சொல்ற, காலையில கூட பாத்தேன். நல்லா தூங்கிகிட்டு இருந்தார், என்னாச்சு" என்றான் சரவணன்.

"மத்தியானம் ரவி சார் ரூமுக்கு பாய் போன போது கூட தூங்கிகிட்டு இருந்திருக்கார், எழுப்பி பாத்தபோது பேச்சு மூச்சே இல்லையாம்."

"ஒண்ணும் இருக்காதுடா, கொஞ்சம் ஓவர் ஆயிருப்பாரு. ரூம்ல ஏதும் பாக்கி சரக்கு இருந்திருக்கும்; அத குடிச்சிருப்பாரு. சரி நாங்க சாப்பிட்டு வரோம்" என்று சொல்லி சாப்பிடப் போனோம்.

நாங்கள் திரும்பி வந்த போது ரவி சார் ஆட்டோவில் அமர்ந்து இருந்தார். பக்கத்தில் பாயும்.

"தம்பி ரவி நம்மள விட்டு போய்ட்டார்டா" என்றார் பாய்.

அதிர்ச்சியில் கை கால் எல்லாம் நடுங்கின.

"என்ன பாய் சொல்றீங்க"

"ஹார்ட் அட்டாக்காம், கொண்டு வரும்போதே இறந்திருந்ததா டாக்டர் சொன்னார்"

அய்யாதுரை பொணத்தையெல்லாம் மேன்சனுக்குள்ளே கொண்டு வரக் கூடாதென்று கூறி, ரவியை ஆட்டோவிலிருந்து இறக்கவே விடவில்லை. ஒரு காரை சரவணன் வாடகைக்கு எடுத்து அவரை அதில் வைத்து அவர் வீட்டுக்குக் கொண்டு செல்ல தீர்மானித்தோம். அய்யாதுரையிடம் இருந்த தொலைபேசியில் அழைத்து ரவியின் அப்பாவிடம் விவரம் சொன்னோம்.

இரண்டு மணி நேரத்தில் அவரின் வீட்டின் முன் நானும், சரவணனும், ரவியின் உடலும்.

அவர்கள் பட்ட துயரத்தையும், அழுகையையும் ஆற்ற முடியாது விக்கித்து நின்றோம். அழுகை ஒரு புறம், குற்ற உணர்ச்சி மறுபுறம். அன்றைய நாள் முழுவதும் ஏற்க முடியாத துயரத்தால் நிறைந்திருந்தது. திரும்பி வரும்போது சொன்னான் சரவணன்.

"டேய் எனகென்னமோ ரவி நேத்து குடிச்ச சுருட்டு தான் காரணமோன்னு தோணுது. அட்டு சுருட்டு போல" என்றான்.

"டூப்ளிக்கேட் சுருட்ட குடிச்சா உயிர் போகுமா..."

"தெர்லடா, ஆனா சுருட்டா தான் இருக்கணும்... " ஆணித்தரமாக சொன்னான்.

அன்று மரண பயம் எங்களை அசைத்துப் பார்த்தது. சரவணனுக்கு மறுநாள் காய்ச்சலே வந்து விட்டது.

பின் நானும் சரவணனும் தண்ணி அடிக்கவில்லை. அடிக்கடி ரவி கனவில் வந்தார். "ஆனா புகை உள்ளேயே சுத்திகிட்டு இருக்கும்" என்று சரவணன் சொன்ன வாக்கியம் மட்டும் மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வரும். என் சிகரெட் பழக்கமும் போய் விட்டது.

என் சித்தப்பா வீட்டில் இருந்த பானசோனிக் செட்டை கேட்டு வாங்கி வந்து என் வீட்டில் ரவி நினைவாக வைத்துள்ளேன்.

இப்போது கூட பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி புகைக்கும் ஆட்களைக் கண்டால் ரவியைப் போல் தோன்றுகிறது.

- ஷாஜு

Pin It