அவனுக்‍குத்தான் எவ்வளவு தெரிநிலை, என்னவொரு ​டைமிங் சென்ஸ். அவனுடைய ஒரு செய்கைக்‍கு பதில் சொல்ல முடியாமல் கொள்கையை மீற வேண்டியதாகப் போயிற்றே. அவன் இவ்வளவு புத்திசாலி என்று தெரியாமல் போய்விட்டது. சும்மா சொல்லக் கூடாது, பிச்சையெடுப்பதற்கு கூட ஒரு திறமை வேண்டும். என்ன செய்வது அவனது திறமைக்‍கு கொடுத்த பரிசாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

முழுதாக 50 ரூபாயை ஒரு பிச்சைக்‍காரனுக்‍கு கொடுத்தேன் என்பதை மட்டும் என் நண்பர்கள் கேள்விப்பட்டால் ஒரு ட்ராக்‍டர் கனரக வாகனம் உறுமுவது போல் அல்லவா காரி உமிழ்ந்து விடுவார்கள். எப்படி என் கொள்கைக்‍கு விரோதமாக நடந்து கொண்டேன்? உழைப்பவர்களுக்‍கு மட்டுமே உண்பதற்கு உரிமை உண்டு என்று எத்தனை மணி நேரம் லெக்‍சர் கொடுத்திருப்பேன். பள்ளிக் கூடத்தில் நான் முதலமைச்சரானால் என்ற கட்டுரைப் போட்டியில், பிச்சைக்‍காரர்களை எல்லாம் ஒழித்துக் கட்டுவேன் என்று எழுதி ஆசிரியரின் பாராட்டுதலைக் கூடப் பெற்றேனே. அப்படிப்பட்ட நானா இப்படி செய்தேன்?

நல்லவேளை என் பள்ளிக்‍கூட ஆசிரியர் இப்பொழுது இல்லை. அவர் மட்டும் இதைக் கேள்விப்பட்டால் எவ்வளவு கேவலமாக நினைப்பார்? சொல்வது ஒன்று செய்வது ஒன்று. மற்றவர்களின் கண்களுக்‍கு ஒரு இரண்டாம்தர அரசியல்வாதியாக தெரிவதைவிட, தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்.

அந்த பிச்சைக்‍காரன் ஒரு உளவியல் ​மேதை, மனிதர்களின் மனநிலையை எடைபோடத் தெரிந்தவன். கண்களால் சுற்றுப்புறத்தை ஒரு நிமிடத்தில் எடை போட்டுவிடக்‍கூடிய திறமை படைத்தவன். அவன் வெறுமனே சும்மா நின்று கொண்டு காசு வாங்கிக் கொண்டிருக்‍கிறான் என்று இவ்வளவு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இல்லை. அவன் பாடம் படித்திருக்‍கிறான். இவ்வளவு நாட்களாக ஒரே விஷயத்தில் மனதை வைத்து பாடம் கற்றுக் கொண்டிருக்‍கிறான். அவனுக்‍கு 50 ரூபாய் பரிசு கொடுப்பதில் தவறொன்றும் இல்லை. இப்படி சொல்லி எனது தோல்விகளில் இருந்து என்னை தேற்றிக் கொள்வதில் சமீப காலமாக நான் திறமை பெற்று வருகிறேன் என்று என் உள் மனசாட்சி அவ்வப்பொழுது குத்திக்‍காண்பித்துக் கொண்டுதான் இருக்‍கிறது.

ரயில் நிலையத்தில் ஓரமாக அமர்ந்து பிச்சையெடுக்‍கும் ஒருவனுக்‍கு என் ஒருதலைக் காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்‍கிறது. நான் ஒன்றும் அவனிடம் கூறவில்லை..... சரியாக 8:15 மணிக்‍கு கடந்த 6 மாத காலமாக ரயில் ஏறி அலுவலகம் செல்லும் - சற்றும் என் நிறத்துக்‍கு பொருந்தாத - பெயர் தெரியாத அந்தப் பெண்ணைத்தான் ஒரு தலையாக காதலிக்‍கிறேன் என்று, அவனிடம் சத்தியமாக சொல்லவில்லை. அவனும் என்னிடம் கேட்கவில்லை. சற்றும் வெயில் பட்டறியாத நிறத்தையுடைய அந்தப் பெண்ணையா காதலிக்‍கிறாய் என்று.

என்னுடைய சற்றும் பொருந்தாத ஒரு தலைக்‍காதல் அவனுக்‍கு நன்றாகத் தெரியும். அவனுக்‍கும் நன்றாகத் தெரியும் என்பது எனக்‍கும் தெரியும். ஆனால் இருவரும் பேசிக்‍கொண்டதே கிடையாது, என்றாவது ஒருநாள் அந்தப் பெண் வேறு யாரையாவது வீட்டிற்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால் போலீஸ் விசாரணையில் அந்த பிச்சைக்‍காரன் என்னைத்தான் கைகாட்டுவான் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அவனுக்‍கு ஒரு கண் சரியாக இல்லையென்றாலும் அவன்தான் ஐவிட்னஸ்.

ஆனால், நயவஞ்சகன் அவன். என் மானசீக ஒரு தலைக் காதலை அவனுக்‍கு சாதகமான பயன்படுத்திக் கொள்கிறான். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது வியாபார உலகில் மேதைகளின் மொழி. இப்படியொரு வியாபார மேதை இந்தியாவில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்‍கிறான் என்று யாருக்‍குத்தான் தெரிகிறது.

அவனுக்‍கு அவள் வரும் நேரம் தெரிந்திருக்‍கிறது. அதனால்.......அதனால்....... நான் வரும் நேரமும் அவனுக்‍கு அத்துப்படி. அவள் வரும் நேரத்தை மட்டும்தான் அவன் கணக்‍கிடுகிறான். நான் வரும் நேரம்தான் நிர்ணயிக்‍கப்பட்டதாயிற்றே. அதனால் என் வருகை குறித்து அவன் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவனுக்‍கு சரியான நேரம் தெரிந்திருக்‍கிறது. 'அவள் முன்னிலை' என்பது தான் அது. அவள் முன்னிலை என்பதுதான் என் பாக்‍கெட்டில் இருக்‍கும் பணம் அவன் தட்டிற்கு இடம் மாறும் நேரம் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்‍கிறான்.

அவள் ஆஸ்திரேலியாவில் (அல்லது அமெரிக்‍காவாக இருக்‍கலாம், நிச்சயமாக இந்தியா இல்லை) யாரோ ஒருவருடன் குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழப்போவது நன்றாக தெரிந்திருந்தும், அவள் முன்னிலையில் நான் ஒரு தவிர்க்‍க முடியாத தயாள குணமுள்ளவன்தான் என்பதை, அவன் மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்‍கிறான்.

ஆனால் என்னோடு சேர்ந்து மேலும் 4 பேர் வரிசையாக அவனிடம் 50 ரூபாய் நோட்டுக்‍களை இழப்பதைப் பார்த்தால். கடவுளே...... நான் என்ன 5 ஆவதா.......என்ன கொடுமை இது.

- சூர்யா

Pin It