அடையாறு ரெட்டைப் பாலம் அருகே குப்புறப் படுத்துக்‍ கொண்டு மாண்புமிகு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரை நொடிக்‍கு ஒரு தரம் முனங்கலாக கூப்பிட்டுக்‍ கொண்டிருந்தான் அவன்.

அம்மா........அம்மா......அம்மா........

----------------------------

எவ்வளவுதான் முறுக்‍கினாலும் 140 கிலோ மீட்டரைத் தொட மாட்டேன் என்கிறதே என்று பைக்‍கில் வேகமாக போய்க்‍ கொண்டிருக்‍கும் போது ஒரு விஞ்ஞானியைப் போல் வேகமுள்ளை ஆராய்ச்சி செய்யக்‍ கூடாது என்று நூறு முறை சொல்லியாகிவிட்டது. ஆனாலும் அவனது ஆராய்ச்சித் தாகம் குறைவதாக இல்லை. பொதுவாகவே சாலையைப் பார்த்து வண்டி ஓட்டுவதில் சென்னை வாசிகளுக்‍கு நம்பிக்‍கை இல்லாவிட்டாலும் இவனது நம்பிக்‍கை எல்லை மீறியதாக இருந்தது. கண்ணைக்‍ கட்டிக்‍ கொண்டு இருசக்‍கரவாகனம் ஓட்டி சாதனை புரிவதை லிம்கா புத்தகம் சாதனையாக ஏற்றுக்‍ கொண்டாலும், இவன் ஏற்றுக்‍ கொள்வதாக இல்லை. கண்ணை திறந்து வைத்துக்‍ கொண்டு வண்டி ஓட்டுவதை மானம் போகும் செயலாக கருதும் ஊரில் (சென்னையில்) பிறந்து விட்டு இது போன்ற சாதனை முயற்சிகளை எல்லாம் எப்படி ஏற்க முடியும்.

வண்டியில் போகும் போதுதான் பாடல் கேட்கத் தோன்றும், தோழியுடன் நட்புறவாடத் தோன்றும், எச்சில் துப்பத் தோன்றும், பாட்டுப்பாடத் தோன்றும், சிகரெட் பிடிக்‍கத் தோன்றும், பயபக்‍தியுடன் சாமி கும்பிடத் தோன்றும். இந்தியா ஜனநாயக நாடு என்பதால், எல்லாவிதமான உரிமைகளும் வழங்கப்பட்டிருப்பதால் அந்த உரிமையை அவன் பயன்படுத்திக்‍ கொண்டான்.

----------------------------

விழுந்து கிடந்தவனைச் சுற்றி அவனது உருவத்தின் அளவிற்கு அழகாக படம் வரைந்திருந்தார்கள். அதைப் பார்க்‍கும் போது ஒருவன் ஓடுவது போன்ற பழங்காலத்து பாறை ஓவியங்களை ஞயாபகப்படுத்தியது.

---------------------------

ஒருமுறை உயிரை பணயம் வைத்து அவனை மடக்‍கிப் பிடித்தார் போக்‍குவரத்து காவலர் ஒருவர். சாலையோரங்களில் சிவப்பு விளக்‍கு என்ற ஒன்றை அரசாங்கம் எதற்காக வைத்திருக்‍கிறது என்று உனக்‍குத் தெரியுமா? என்று கேட்டதற்கு, திரு திருவென விழித்திருக்‍கிறான் அவன். சிக்‍னலில் ​நின்று செல்ல வேண்டும் என்பது பற்றி அவனுக்‍கு யாருமே சொல்லிக்‍ கொடுக்‍கவில்லை. போக்‍குவரத்து நெரிசலில் கூட நடைமேடையை உபயோகப்படுத்தாத முட்டாள்களைப் பார்த்து அவன் சிரித்திருக்‍கிறான். அவன் சில சமயம் கிழக்‍குப் பக்‍கமாக பார்த்துக்‍ கொண்டு, வடக்‍குப் பக்‍கமாக வண்டி ஓட்டிச் செல்வதைப் பலர் பார்த்திருக்‍கிறார்கள். யாராவது இளம்பெண் அந்தப் பக்‍கமாக நடந்து சென்றிருக்‍கலாம். அவனுக்‍கு பக்‍தி உணர்வு அதிகம் என்பது பொதுவாக சாந்தோம் சர்ச் பகுதி மக்‍களுக்‍கு மிக நன்றாகத் தெரியும். ஏனெனில் அந்தப் பக்‍கமாக அவன் செல்லும் போது வண்டியில் போய்க்‍கொண்டே சிலுவை குறி போட்டுக்‍கொள்வதை அந்தப்பகுதி மக்‍கள் அனைவரும் பார்த்திருக்‍கிறார்கள். இதில் மிரட்சியான விஷயம் என்னவென்றால் அவன் கண்களை மூடிக்‍கொண்டு சிலுவைக்‍ குறி போடுவதுதான். அந்தப் பகுதியில் 2 முறை வெறிச்சோடி காணப்படும், ஒன்று முதலமைச்சர் செல்லும் பொழுது, மற்றொன்று இவன் செல்லும்போது. யாரும் உயிரிழக்‍க விரும்பவில்லை என்பது ஒருகாரணமாகக்‍ கூட இருக்‍கலாம். யாருக்‍குத் தெரியும்.

---------------------

உன் பேரென்ன - அம்மா ....... அம்மா.......

அப்பா பெயர் - அம்மா...... அம்மா......

எந்த ஏரியாவுல குடியிருக்‍க - அம்மா....அம்மா.....

தம்பி எங்க வேலை செய்யுற - அம்மா......அம்மா......

தம்பி போன் நம்பர் ஏதாவது இருக்‍கா - அம்மா......அம்மா......

--------------------------

கூடாரத்தில் வட்டமிடும் சர்க்‍கஸ் கலைஞனுக்‍கு பயிற்சி அளிக்‍கும் தகுதி படைத்த ஒரு சில இளைஞர்களில் அவனும் ஒருவன். சமீப காலமாக 4 திசைகளுக்‍குள் வண்டி ஓட்டுவதை கடுமையாக எதிர்த்து வந்த அவன், படிக்‍காதவன் படத்தில் ரஜினி கார் ஓட்டுவது போல, வண்டி ஓட்டுவ​தை செயலாக்‍கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் எல்லாம் கசிந்தன. சென்ற முறை அவன் ஒரு 13 மாடி கட்டடத்தில் மோதி வித்தியாசமான ஒருவித ஆசன முறையில் விழுந்து கிடந்ததைப் பார்த்த போது அவனது சர்க்‍கஸ் முயற்சி வதந்தி அல்ல என்று நம்ப வேண்டியிருக்‍கிறது. அதெப்படி ஒரு சக்‍கரம் சூரியனை நோக்‍கி மலர்ந்திருக்‍கும் சூரியகாந்திப் பூவை போலவும், ஒரு காலை இஞ்சினுக்‍கும், ஆயில் கேனுக்‍கும் நடுவில் நுழைத்தபடி, ஒரு கையை பின் சக்‍கரத்திற்குள்ளும், மற்றொரு கை ஹெட்லைட்டை தடவிக்‍ கொடுத்த படியும். அதை எப்படி விவரிப்பது. அந்த வித்தியாசமான காட்சியை புகைப்படம் எடுத்தால் சிறந்த புகைப்படத்திற்கான முதல் பரிசு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்னொரு முறை அது நிகழவே நிகழாது. இதில் முக்‍கியமான விஷயம் அவன் தாய்நாட்டு மண்ணை முத்தமிட்டபடி கவிழ்ந்து கிடந்தான் என்பதுதான். தேசப்பற்று மிக்‍கவன் அவன். அவன் அலுவலகத்தில் உடைந்த கையில் போடப்பட்ட மாவுகட்டின் மீது பல அழகிய இளம்பெண்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதை பெருமையான விஷயமாக நினைத்துக்‍ கொண்டிருக்‍கிறான் போல. அலுவலக பெண்கள் அவனிடம் அடிக்‍கும் கமெண்ட்டுகளில் அவன் பூரித்துப் போகிறான் போல.

வெகு நாட்களாக அலுவலக அதிகாரி ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என்று விரும்பிய சிலர் அவரை அவனுடைய பைக்‍கில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் வீட்டுக்‍குச் செல்லவில்லை. அவர் வீட்டுக்‍கு அருகில் உள்ள வேறொரு புகழ்பெற்ற கட்டடத்துக்‍கு அவர் கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. அந்த கட்டடத்தின் முகப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருந்ததாம். விஜயா மெடிக்‍கல் சென்டர்.

-----------------------------------

ஏற்கெனவே பிளேட் வைக்‍கப்பட்டிருந்த கையில் மீண்டும் ஃபிராக்‍சர் ஆனதால் என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தார்கள் மருத்துவர்கள். இன்னொரு கையிலும் பிளேட் வைக்‍கப்பட்டிருந்தது போல எக்‍ஸ்ரேயில் தெரியவந்தது. ஆனால் கடைசியில் தெரியவந்த செய்தி என்னவெனில் அது இருசக்‍கர வாகனத்தின் போக்‍ஸ் கம்பி என்று, அது எப்படி அவனது கைக்‍குள் சென்றது என்று குழப்பமாக இருந்தது. அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட், தமிழகத்தின் ப்ரொபஷனல் பிச்சைக்‍காரர் ஒருவர் 22 வருடங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தியது போல் மாறியிருந்தது. முக்‍கியமான பல இடங்கள் காற்றோட்டமாக மாறியிருந்தன. தொடைப்பகுதியிலும் கணுக்‍காலுக்‍கு மேல் பகுதியிலும், ஒரு பயிற்றுவிக்‍கப்பட்ட ராஜபாளையம் நாயால் எவ்வளவு கடித்து எடுக்‍க முடியுமோ, அவ்வளவு சதைப்பகுதியை காணவில்லை.

தலைமை மருத்துவர் அவனது தலைப்பகுதியை சோதனை செய்தபோது, அவன் ஏதோ முனங்குவது தெரிந்தது.

"தம்பி பெயின் ரொம்ப இருக்‍கா"

அவன் சற்று சக்‍தியை வரவழைத்துக்‍ கொண்டு தெளிவாக எல்லோருக்‍கும் கேட்கும்படி கூறினான்.

"அம்மா"

-------------------------------

பிள்ளையார் கோவில் குறுக்‍குசந்து, அம்மன்கோவில் குறுக்‍குசந்து, காமராஜர் குறுக்‍கு சந்து, மீனாட்சி செகண்ட் கிராஸ் ஸ்ட்ரீட், மற்றும் கரீம்பாய் சாய்பு சந்து என அனைத்து குறுகலான பகுதியிலும் அவனைப் பிடிக்‍க கன்னி வைத்திருக்‍கிறார்கள். இதில் கரீம்பாய் சாய்பு சந்து வெகுகாலமாக கழிவு நீர்கால்வாயாக இருந்தது என்பது வரலாறு. அப்பகுதியில் அப்படியொரு வழிப்பாதையே கிடையாது என்பதை கூகுள் மேப்பில் சென்று ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்பகுதிக்‍கு சந்து என்கிற அந்தஸ்து கிடைத்ததற்கு காரணமே அவன்தான். முதன்முறையாக கோடையில் காய்ந்து போன கழிவுநீர்பாதையை போக்‍குவரத்துக்‍கு எப்படி பயன்படுத்துவது என அப்பகுதி மக்‍களுக்‍கு கற்றுக்‍ கொடுத்தவன் அவன் என்கிற நன்றி கூட அப்பகுதி மக்‍களுக்‍கு இல்லை சாலைகள், தெருக்‍கள், குறுக்‍குத் தெருக்‍கள், ஒருவழிப்பாதை.... இதை மீறி வேறு என்ன இருக்‍கிறது. யாராவது சற்று ஸ்டாண்டடீஸில் நின்று கொண்டு டீகுடித்துக்‍ கொண்டிருக்‍கும் பட்சத்தில் அவர் ஆபத்தை சந்திக்‍க நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற ரீதியில் அவனது வேகம் எல்லை மீறி போய்க் கொண்டிருந்தது.

பொதுவாக ஞாயிறுக்கிழமைகளில் சாலைகளில் ஸ்டம்ப் ஊன்றி பள்ளி மாணவர்கள் விளையாடுவது என்பது எழுதப்படாத சட்டம். அன்று போக்‍குவரத்துக்‍கு தடை என்பது உச்சநீதிமன்றமே நினைத்தாலும் மாற்றியமைக்‍க முடியாத சட்டம். அன்று சாலைகளில் பயணம் செய்வது என்பது போர்க்‍களத்தின் நடுவே செய்தியை எடுத்துக்‍ கொண்டு ஓடும் ராணுவ வீரனின் தீரச் செயலுக்கு ஈடான செயலாகும். சிறுவர்களின் அந்த எழுதப்படாத சட்டத்தைக்‍ கூட மதிக்‍க வேண்டும் என்கிற புத்திகூட அவனுக்‍கு இல்லை. அன்றும் ஏதோ சந்திர மண்டலத்துக்‍கு செல்பவன் போல ஹெல்மட்டை அணிந்து கொண்டு எங்கோ சென்று வருவான். அப்படி எங்குதான் செல்கிறானோ. அவனுடைய வண்டியின் ஸ்பீட் மீட்டர் 52 ஆயிரம் கிலோ மீட்டர் என்று தகவல் காட்டியது. தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்‍கே மூவாயிரம் கிலோமீட்டர் தானே. இந்த 2 வருடங்களில் அவன் சுற்றிய தூரத்தை கணக்‍கிட்டுப் பார்த்தால் அவன் உலகையே சுற்றி வந்திருக்‍கலாம் போல. இந்த சாதனை நிகழ்ச்சியை ​எல்லாம் யார் கவனிக்‍கிறார்கள்.

--------------------------------------

தலைமை மருத்துவர் அவனது கால்களில் உள்ள விரல்களை எண்ணினார்.

"ஒன், டூ. த்ரீ. ஃபோர்........."

இரண்டு விரல்களைக் காணவில்லை.

"எங்க நைன் அண்ட் டென்த் ஃபின்கர்ஸ்"

அருகில் இருந்த உதவியாளர் ஒரு ப்ஃரீசர் பெட்டியை திறந்து காண்பித்தார். அதில் ஒரு பெருவிரலும், சுண்டுவிரலும் இருந்தது. நவீன மருத்துவத்தைப் பயன்படுத்தி அந்த விரல்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருத்த வேண்டும். மருத்துவர் நேரத்தைக் கணக்‍கிட்டார். துரித வேகத்தில் செயல்பட்டார்.

"பேஷண்டுக்‍கு மயக்‍க மருந்து கொடுத்திங்களா?

"கொடுத்தாச்சு டாக்‍டர்"

"பின்ன என்ன இன்னும் முனங்கிக்‍ கொண்டே இருக்‍கிறார்."

"அவர் அம்மா அம்மான்னு முனங்கிக்‍கிட்டு இருக்‍கார் டாக்‍டர்"

"இன்னும் அதிக டோஸ் குடுங்க"

"அதுக்‍கு முதல்ல அவங்க அம்மாவ கூட்டி வாங்க"

----------------------------------------

ஒருமுறை நுங்கம்பாக்‍கம் சிக்‍னலில் ஒன்றுக்‍குப் போக வேண்டும் போல் அவனுக்‍குத் தோன்றியது. வண்டியை நிறுத்திவிட்டு 2 பேருக்‍கு நடுவில் போய் நின்று கொண்டு மூன்றாவது ஆளாக போய்க்‍கொண்டிருந்தான். அந்த இடத்தில் அரசாங்கம் கழிவறை எதுவும் கட்டவில்லை என்பது உண்மையாயினும், இந்த இடத்தில் கட்டினால் நன்றாக இருக்‍குமே என்று மக்‍களே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, உபயோகித்து அரசாங்கத்துக்‍கு ஒரு வழிகாட்டியாக செயல்பட்டிருக்‍கிறார்கள் என்றுதான் எடுத்துக்‍கொள்ள வேண்டுமே தவிர வேறுவிதமாக நினைக்‍கக்‍ கூடாது என்பதால் தான் அவனும் அந்த இடத்தை உபயோகித்தான். அதைப் பொறுக்‍க முடியாத காவல்துறை அதிகாரி ஒருவர் விசிலை ஊதிக்‍ கொண்டே வந்து அவனது சட்டைக்‍ காலரை கொத்தாகப் பிடித்து விசாரணை நடத்தினார். அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவெனில் நடு​சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றதுதானே ஒழிய, நல்ல வேலையாக சென்சிடிவ் பிரச்னையான ஒன்றுக்‍குப் போவதைப் பற்றியதாக இல்லை. நல்ல வேளை தேசியப் பிரச்னை எதுவும் ஆகவில்லை. நடுசாலையில் வண்டியை நிறுத்தி தங்கள் சொந்த வேலையைப் பார்ப்பதெல்லாம் எனது பிறப்புரிமை இல்லையா? என்ற ஆச்சரியத்தில் இருந்து அவன் மீளுவதற்கு 2 வாரங்கள் ஆகிப் போனது.

"அது சரி தம்பி, நோ பார்க்‍கிங் போர்டு பக்‍கத்துல போய் வண்டிய நிறுத்துரியே உனக்‍கே நியாயமா படுதா சொல்லு"

"சார் அந்த இடத்துலதான் சார் எந்த வண்டியும் இல்லாமல் ஃபிரீயா இருக்‍கு"

அந்த காவல் துறை அதிகாரிக்‍கு தலையைப் பிய்த்துக்‍ கொள்ள வேண்டும்போல இருந்ததாம். ஆனால் பிரயோஜனம் இல்லை. ஏன் பிரயோஜனம் இல்லை என்பது அவரின் தலையின் மேல்பகுதியைப் பார்த்தவர்களுக்‍கு மட்டுமே புரியும்.

சென்னையைப் பொருத்தவரை எந்த 'நோபார்க்‍கிங்' போர்டும் வானத்தைப் பார்த்தபடி கம்பீரமாக நிற்பதில்லை. வடகிழக்‍கு திசை நோக்‍கியோ அல்லது தென்மேற்கு திசை நோக்‍கியோ சாய்ந்தபடி நீட்டிக்‍ கொண்டு இருக்‍கும். அது என்னவோ எருமை மாடுகளுக்‍கு முதுகு அறித்தால் அதில் போய்த்தான் தீர்வை தேடிக்‍ கொள்கிறது. அவனைப் போன்ற சிலர் அதில் சாய்ந்தபடி தம் அடிப்பது அல்லது பைக்‍கில் சைடு ஸ்டாண்ட் இல்லையென்றால் வண்டியை முட்டு கொடுத்து நோபார்க்‍கிங் போர்டில் சாய்த்தபடி நிறுத்தி வைப்பது என பல்வேறு இன்னல்களுக்‍கு ஆளாகி நெஞ்சை நிமித்தியபடி நிற்கும் அந்த போர்டு தலைசாய்ந்து போய் இருக்‍கும்.

சில சாலையோர வீடுகளில் வசிக்‍கும் பெண்கள் வீட்டிற்குள்ளிருந்து கொடிக்‍கயிற்றை இழுத்து நோ பார்க்‍கிங் போர்டில் கட்டி துவைத்த துணியை காயவைப்பதற்காக பயன்படுத்துவார்கள். ஒரு நோ பார்க்‍கிங் போர்டின் பயன் இவ்வளவு இருக்‍கும் போது அதை ஒரு செய்தி அறிவிப்பு பலகையாக மட்டும் பயன்படுத்துவது கிரிமினல் வேஸ்ட் என்பது சென்னைவாசிகளின் எண்ணம் மட்டும் அல்ல. அவனது எண்ணமும் கூட.

------------------------------------

மொத்தம் உடலில் 47 தையல்கள்.

தான் ஒரு மருத்துவரா அல்லது டெய்லரா என்ற கேள்வி தலைமை மருத்துவரின் மனதைக் குடைந்தெடுத்தது என்றால் அது மிகையில்லை. அந்தக் காலத்து நடிகை தேவிகா சாயலில் யாரோ ஒரு பெண் கண்ணீரும் கம்பலையுமாக கதறியபடி ஓடி வந்து கொண்டிருந்தார்.

"யாரு நீங்க"

"நான் "அவனுடைய" அம்மா"

தலைமை மருத்துவருக்‍கு அந்த "அம்மா"வுடைய காலைத் தொட்டு கும்பிட வேண்டும் போல் இருந்தது. ஏன் அப்படித் தோன்றியது என்று அவருக்‍கே தெரியவில்லை.

---------------------------------

இரண்டு மாதங்களுக்‍குப் பிறகு

ஜெமினி பாலத்திற்குக் கீழே ஒருவன் பூமியை முத்தமிட்டபடி விழுந்து கிடப்பதாக செய்திகள் வந்தன. அவன் ஜெமினி பாலத்தில் ஒற்றைச் சக்‍கரத்தில் வண்டியை ஓட்டி வந்ததாகவும், அவன் ஓட்டி வந்தபோது 2 சக்‍கரங்கள் இருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது 2 சக்‍கரங்களையுமே காணவில்லை என்று தடயவியல் அறிஞர்கள் தங்கள் அறிக்‍கையில் கூறியுள்ளார்கள். ஆனால் விழுந்து கிடந்தவன் உயிருடன் தான் இருக்‍கிறான் என்று பொதுமக்‍கள் கூறுகிறார்கள். எப்படி என்று கேட்டதற்கு அவன் எதையோ புலம்பிக்‍ கொண்டிருந்தானாம்.

அது அவனே தான்

அவன் புலம்பிய வார்த்தை

"அம்மா"

Pin It