1

தான் ஒரு 50 கிலோ தாஜ்மஹால் என்று ​சொல்லிக்‍ கொள்வதில் பெண்களுக்‍கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியும் பெருமை ஏற்படலாம். ஆனால் ஒரு ஆண் 50 கிலோ எடையுடன் காணப்பட்டால் பலநாள் பட்டினி கிடந்தவன் போல், எலும்புருக்‍கி நோய் வந்தவன் போல் பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளிப்பான். பெண்களுக்‍கும், ஆண்களுக்‍கும் உடல்வாக்‍கில் உள்ள வேறுபாடு இது. அதனால் கணேசுக்‍கு இந்த தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அவன் ஏன் வேகமாக காற்றடித்தால் தெருவோரமாக ஒதுங்கி நின்று விடுகிறான் என்கிற கேள்விக்‍கு இப்படியொரு பதில் இருக்‍கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்‍கவில்லை.  ஒரு 48 கிலோ எடையுள்ள மனிதனை காற்று அப்படியே தூக்‍கிச் சென்றுவிடுமா என்ன? இப்படியெல்லாம் கூட பயம் வருமா என்ன? ட்விஸ்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை அவன் பார்த்ததிலிருந்தே அவன் கண்களில் அந்த பயம் வெளிப்படையாக தெரிந்தது. சுழற்காற்றில் பசுமாடு கூட பறக்‍குமா என்று அவன் ஆச்சரியமாக அன்று கேட்டான்.

மிஸ்டர் இண்டியா ஜிம் பக்‍கமாக அடிக்‍கடி சென்று தயங்கி தயங்கி நின்றுவிட்டு பின் எச்சிலை விழுங்கியபடியே அறைக்‍கு வந்து விடுகிறான். யாரிடம் இந்த அறிவுரையைக்‍ கேட்டான் என்று தெரியவில்லை. ​தினமும் ஒரு பச்சை முட்டையை உடைத்து வாயில் ஊற்றிக்‍ கொள்கிறான். அப்பொழுது அவன் மூஞ்சி போகிற போக்‍கை பார்க்‍க வேண்டுமே. அவன் தன் எடையை கூட்டுவதற்கு துன்பப்பட தயாராக இருக்‍கிறான் என்று தெளிவாகத் தெரிகிறது. அன்று ஒரு 3 கிலோ தம்பிள்ஸ் ஒன்றை வாங்கி வந்திருந்தான். அவன் ஏன் குளிக்‍கும் அறைக்‍குள் சென்று உடற்பயிற்சி செய்கிறான் என்று அருகில் உள்ள அறைகளில் வசிக்‍கும் அனைவரும் கேட்டுவிட்டார்கள். அதற்கு அவன் வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்திருக்‍கலாம். என்னோடு விஷயம் முடிந்திருக்‍கும்.  அவனுக்‍கு தாழ்வு மனப்பான்மை. தன்னைத் தவிர யாருக்‍கும் தன்னுடைய முயற்சி தெரியக்‍கூடாது என்று தாழ்வு மனப்பான்மை.  ஒருநாள் கடைவீதிவழியாக சென்று கொண்டிருக்‍கும் போது,  காய்கறிக்‍கடைக்‍காரர் என்னை அழைத்து இந்த பச்சைக்‍ காய்கறிகளை உங்கள் அறை நண்பரிடம் கொடுத்து விடுங்கள் என்று பணிவுடன் கூறுகிறார். அதோடு ஒரு 900 ரூபாய் பில் ஒன்று இருந்தது. அவன் தொள்ளாயிரம் ரூபாய்க்‍கு பச்சைக்‍ காய்கறிகளை சாப்பிடுகிறான் என்று அப்பொழுதுதான் எனக்‍குத் தெரிந்தது. கேரட், தக்‍காளி, முட்டைகோஸ், அடக்‍கடவுளே ....... முள்ளங்கி, பீன்ஸ்.....

அவன் ஏன் என்னிடம் எந்தவொரு அறிவுரையும் கேட்கவில்லை. என்னிடம் அவனுக்‍கென்ன அப்படியொரு வெட்கம். அவன் கேட்காவிட்டாலும் அவனுடைய எடையை கூட்ட எனக்‍குத் தெரிந்த சில ஐடியாக்‍களை அவனுக்‍கு கொடுக்‍கலாம் என்ற நினைப்பு எனக்‍கு இல்லாமல் இல்லை. தமிழ்நாடே அறிந்த அந்த ஐடியாவை அவனுக்‍கு நான் சொல்லத்தான் போகிறேன். உடல் எடையை கூட்ட எவனோ ஒருவன் முள்ளங்கியை பரிந்துரை செய்திருக்‍கிறான் என்றால்....... பாவம் அவன் எதை சொன்னாலும் நம்புகிறான் போல. மனதில் தன்னம்பிக்‍கை குறைந்து விட்டால் இப்படித்தான். எதைச் செய்வது எதைச் செய்யக்‍கூடாது என்பதில் குழப்பம் ஏற்பட்டு கண்டதை கடைபிடிக்‍க ஆரம்பித்து விடுவார்கள். இத்தனை நாள் அறை நண்பனுக்‍கு இந்த உதவியைக்‍ கூட செய்யவில்லை என்றால் எப்படி.

அந்த புகழ்பெற்ற ஊரறிந்த ரகசியத்திற்குப் பெயர் 'பியர்' ....  அதை நான் அவனுக்‍கு உபதேசிக்‍கப் போகி​றேன்.

இதற்கு ஏன் அம்மன் படத்தில் வரும் ரம்யாகிருஷ்ணனைப்போல் அவன் கோபமாக முகத்தை வைத்துக்‍ கொண்டு திரும்பிப் பார்த்தான் என்றுதான் புரியவில்லை. அவனிடம் நான் கூறினேன், அடே நண்பா, " ஆல்கஹால் குறைவாக இருந்தால் உடலுக்‍கு நல்லது, அதுவே அதிகமாகும் போதுதான் உடலுக்‍கு கெடுதியாகிவிடுகிறது. அதனால் பயப்படாமல் பியர் சாப்பிடலாம், பியர் ஒன்றும் உடலுக்‍கு கெடுதி இல்லை" என்று கூறியும் அவன் ஆவேசம் அடங்குவதாக இல்லை. ஊரிலிருந்து சென்னைக்‍கு கிளம்பும் பொழுது அழுதுகொண்டே மூக்‍கில் வழிந்த சளியை சிந்திவிட்டு அவன், அவனது அம்மாவுக்‍கு 3 சத்தியங்கள் செய்து கொடுத்தானாம்.

1. குடிக்‍க மாட்டேன். 2. பெண்களை நிமிர்ந்து கூட பார்க்‍க மாட்டேன் 3. பொய் பேச மாட்டேன்.

நான் மனதிற்குள் முனங்கிக்‍ கொண்டேன்.  "அந்த நோபல் பரிசு கமிட்டியை சேர்ந்தவர்களை செருப்பால் அடித்தால் என்ன?" என்று.

இவன் இல்லாவிட்டால் இந்த நாடு என்னாவது என்பதை நினைத்துப் பார்க்‍கையில் நெஞ்சை அடைக்‍கிறது.

2

பழைய எம்.ஜி.ஆர். படத்தில் வருவது போன்று அவனுக்‍குள் இருந்து 2 கணேஷ் வெளிவந்து அவனிடம் 2 மணி நேரம் பேசியிருக்‍கிறார்கள் என்று நினைக்‍கிறேன். ஒரு நல்ல கணேஷ், ஒரு கெட்ட கணேஷ், 2 பேருமாக இவனை நடுவில் நிற்கவைத்து, எதை எதையோ பேசி குழப்பி, மண்டையை உடைத்து, கடைசியில் அவன் ஒரு முடிவுக்‍கு வந்துவிட்டதாக குறிப்பிட்டான். இறுதியில் கெட்ட கணேஷ்தான் வெற்றி பெற்றிருக்‍கிறான் போல. அவன் பியர் குடிக்‍கப் போவதாக ஒரு நல்ல முடிவுக்‍கு வந்து விட்டான்.

திருட்டுப் பயலைப் போல் தலையில் ஒரு குல்லாயைப் போட்டுக் கொண்டு ஏதோ கப் டீ வாங்கப் போவது போல. கையில் ஒரு தூக்‍குவாளியை எடுத்துக் கொண்டு நடுங்கியபடி சென்றான். அவர்களே ஒரு பாட்டிலில் பியரை அடைத்து வைத்திருப்பார்கள். நீ ஏன் தூக்‍குவாளியை எடுத்துச் செல்கிறாய் என்று கேட்டால், அதெல்லாம் எனக்‍குத் தெரியும் என்று திமிர்த்தனமாக பதில் சொல்லிவிட்டுச் சென்றான்.  மனதிற்குள் என்ன திட்டமோ.

பொதுவாக தமிழ்நாடு டாஸ்மாக்‍கைப் பொறுத்தவரை அங்கு வரும் குடிமக்‍கள் 3 சத்தியப் பிரமாணங்களை நியமம் தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள்.  1. அவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு கழிவறையை பயன்படுத்தக்‍கூடாது என்று கூட்டாக உறுதிமொழி ஏற்றிருப்பார்கள். 2. அங்கு கெட்டவார்த்தை பேசும் போட்டியில் தான்தான் வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் கடுமையாக போராடிக் கொண்டிருப்பான் 3. மற்றும் கண்ட இடத்தில் காறி உமிழும் போட்டியும் இடைவிடாமல் நடைபெறும்.

இந்த 3 விதமான போட்டிகளை சமாளித்து சக்‍ரவியூகத்தை உடைத்து கூட்டத்தைக் கலைத்து உள்ளே சென்று அரைமணி நேரத்தில் ஒரு பியரை வாங்கி சாதித்த பெருமையுடன் வேர்க்‍க விறுவிறுக்‍க வெளியே வந்தான் கணேஷ்.  ஆனால் எல்லா சாதனையாளர்களும் ஏதோ ஒரு இடத்தில் தோற்று விடுவது சகஜம்தானே. அவனுக்‍கு அந்த பாட்டிலின் மூடியை எப்படி திறப்பது என்று தெரியவில்லை. அருகில் இருந்த ஒரு குடிமகனை அழைத்து அதை கழற்றி தருமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டான். அவர் தாறுமாறாக ஒருபார்வை பார்த்து, பின் தன் இளவயது நியாபகம் வந்ததோ என்னவோ கணேசுக்‍கு உதவி புரியலாம் என்கிற மேன்மையான முடிவுக்‍கு வந்தார். அவர் மூடியை 2 தட்டு தட்டி அலேக்‍காக மூடியை திறந்து காண்பித்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில் ஒரு ஆசிரியரின் கனிவு தெரிந்தது.

பாட்டிலை தன் கையில் வாங்கி தலைகுனிந்து தன் வணக்‍கத்தைத் தெரிவித்த கணேஷ் ஏதோ நீண்டநாள் நண்பனை பிரிய மனமில்லாத தோழனைப் போல சோகமாக அவரைப் பார்த்து விட்டு நகர முற்பட்டபோது, அந்த குடிமகன் தன் மாணவனை இழுத்து அணைத்து தலையில் ஒரு முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பினார்.

'சே எவ்வளவு நல்ல மனுஷன்' என்று மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டிருப்பான் அந்த கணேஷ். டாஷ்மாக்‍கில் ஒரு ​ஓரமாக நின்று கொண்டு யாரும் தன்னை கவனிக்‍கவில்லை என்று உறுதி செய்து கொள்வதற்காக அப்படியே நோட்டம் விட்டுக்‍ கொண்டிருந்தான். அவனுக்‍கு எப்படித் தெரியும், கூலிக்‍கு ஆள்பிடித்து வந்து தன்னைக்‍ கவனிக்‍குமாறு கூறினாலும் காறி துப்பிவிட்டு சென்றுவிடுவார்கள் என்று. தன் கையில் இருந்த பியர் பாட்டிலை தூக்‍குவாளியில் கவிழ்த்தான். பாட்டிலை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, தூக்‍குவாலியை மூடிவிட்டு அறைக்‍கு நடையைக்‍ கட்டினான். அவனை யாருமே கவனிக்‍கவில்லை என்றாலும், யாராவது தன்னைக்‍ கவனித்துவிடுவார்களோ என்று பயந்தபடியே சுற்றும்முற்றும் பார்த்துக்‍ கொண்டு சென்றான். எந்த காவல்துறை அதிகாரியாவது அவனைப் பார்த்தால் எந்த வங்கியை கொள்ளையடித்துவிட்டு செல்கிறாய் என்று சட்டையை பிடித்து சாத்த ஆரம்பித்துவிடுவார். அப்படியொரு தெரிநிலையில், அவன் சென்று கொண்டிருந்தான். அவனைப் பொறுத்தவரை எப்பொழுதும் யாருக்‍கும் எதுவும் தெரிந்துவிடக்‍ கூடாது என்றுதான் நினைத்துக்‍ கொண்டு செயல்படுவான். ஆனால், அவனது அந்த செயல்களே அவனைக்‍ காண்பித்துக்‍ கொடுத்துவிடும். என் அப்பன் குதிருக்‍குள் இல்லை என்கிற பழமொழிக்‍கு எடுத்துக்காட்டு சொல் என்றால். கணேஷ் நடித்தே காண்பித்துவிடுவான்.

3

வெகுநாட்கள் கழித்து இன்றுதான் எனக்‍கு ஒரு விஷயம் தெரிந்தது. கணேஷுக்‍கு 2 கெட்டவார்த்தைகள் தெரியும் என்று. அடுத்த நாள் விடிந்ததும் இப்படி பேசிவிட்டாயே என்று  நான் அவனிடம் கேட்டால் என்ன பொய் சொல்வான் என்று பூமியின் அந்தப் பக்‍கம் இருக்‍கும் ஒரு அமெரிக்‍க பிரஜைக்‍குக் கூடத் தெரியும்.

'ஐயோ நானா,.........நானா அப்படி பேசினேன். எனக்‍கு ஒன்றுமே நினைவில்லையே' என்று ஏதேதோ உளறினான். மீன் பிறந்தவுடன் நீச்சல் கற்றுக்‍கொள்வதைப் போல, குடிப்பவன் விடிந்ததும் பொய் பேச ஆரம்பித்து விடுகிறான். இதெல்லாம் நிர்ணயிக்‍கப்பட்ட பிரபஞ்ச உண்மைகள். அரை பியரை குடித்து விட்டு இப்படி தள்ளாடுகிறான் என்றால் என்னால் நம்ப முடியவில்லை. ஏதேதோ உளறினான். 3ம் வகுப்பில் படித்த வசந்தப் பிரியா, டைப்பிங் சென்டரில் பிரீத்தி, எதிர்த்த வீட்டில் வசித்த கவிதா எல்லோரைப் பற்றியும் ஒரே நாளில் பாடம் ஒப்பிப்பது போல் என்னிடம் ஒப்பித்தான். எதிர்த்த வீட்டு கவிதா அவனை ஒருநாள் அடித்து விட்டாளாம். அவளைப் பழிக்‍குப் பழி வாங்காமல் விட மாட்டானாம். அவள் ஏன் உன்னை அடித்தாள் என்று கேட்டதற்கு, அவளுக்‍கு லவ் லெட்டர் கொடுத்தேன் என்று கூறுகிறான்.

"டேய் அந்த கவிதாவுக்‍கு 24 வயது. அப்பொழுது நீ பத்தாம் வகுப்பு படித்துக்‍ கொண்டிருந்தாய், உனக்‍கும் அவளுக்‍கும் 9 வயது வித்தியாசம் இருக்‍கையில் எப்படிடா மனசாட்சியே இல்லாமல் லவ்லெட்டர் கொடுத்தாய்" என்று கேட்டதற்கு அவன் சச்சின், சாக்‍கரடீஸ் என எல்லோரையும் இழுக்‍க ஆரம்பித்துவிட்டான். காதல் வலி அவன் நெஞ்சத்தை பிழிந்து எடுக்‍கிறது என்று கூறி கதறி அழ ஆரம்பித்து விட்டான். அவனை சமாதானப்படுத்தும் முயற்சியாக,

"சென்னையிலேயே ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதானே, உன்னை சென்னையில் எந்த பெண்ணும் கவரவில்லையா" என்று கேட்டேன். அவன் கூறுகிறான் "எனக்‍குத்தான் கொரிய மொழி தெரியாதே" என்று. எதிர்த்த பெண்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்த நான்கு கொரிய நாட்டு பெண்கள் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு சிரித்துப் பேசிக்‍கொண்டிருக்‍கும் போதே நினைத்தேன் எவன் சிக்‍கப் போகிறானோ என்று. இவனுடைய டேஸ்ட் ஏன் இப்படி இருக்‍கிறது என்று புரியவில்லை. அவன் பல்லி, பாம்பு, கரப்பான் பூச்சியையெல்லாம் சாப்பிட துணிந்து விட்டான் என்றால் நான் என்ன செய்வது.

அரை டவுசரைப் போட்டுக்‍ கொண்டு அந்த பெண்கள் நடந்த செல்லும் போது ஒருமாதிரியாக அவன் பார்வை சென்ற போது நான் தவறுதலாக அவனுக்‍கு ஒன்றரைக்‍ கண் என்று நினைத்து விட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு. ஒருவேளை கொரியன் சிட்டிஷன் சிப் வாங்கிவிடுவானோ என்னவோ? இந்தயாவைத் தவிர வேறு எந்த நாட்டுக்‍குச் சென்றாலும் நல்ல வாழ்க்‍கை அமையும் என்று எல்லா இந்திய இளைஞர்களும் நம்புகிறார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை என்றுதான் தோன்றுகிறது. வீட்டு வாடகை ஆயிரம் ரூபாய் ஏற்றுகிறார்கள். சம்பள உயர்வு 250 ரூபாய் கொடுக்‍கிறார்கள். ஒரு அடி ஏறினால் 4 அடி சறுக்‍குகிறது. பின் இந்த நாட்டில் இருந்து என்ன செய்ய முடியும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று தினமும் 3 வேளை சாப்பிடுபவனைத் தவிர வேறு யாரும் மனசாட்சியுடன் சொல்லமாட்டான் என்றே நினைக்‍கத் தோன்றுகிறது. இந்திய இளைஞர்களை சாப்பாட்டுக்‍காக சம்பாதிப்பவர்களாக எத்தனை நூற்றாண்டுகளுக்‍கு வைத்திருக்‍கலாம் என்று நினைக்‍கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்‍கு அதற்கு மேல் சம்பாதிக்‍கவோ, கேட்கவோ உரிமை மறுக்‍கப்பட்டுவிட்டது. அதனால்தான், ஏதாவது ஒரு ஆப்பிரிக்‍க நாட்டுக்‍காவது ஓடிவிடலாம் என்று குருட்டுத்தனமாக முயற்சி செய்து கொண்டிருக்‍கிறார்கள்.

ஆனால் கணேஷைப் பார்த்தால் ஒருகொலை செய்துவிட்டுத்தான் வெளிநாட்டுக்‍குச் செல்வான் போல.

"நான் ஒரு எறும்பைக்‍ கூட கொன்றது கிடையாது.... ஆனால் நான் ஏன் பழிவாங்க வேண்டும் என்று நினைக்‍கிறேன் தெரியுமா? என் இதயத்தை அவள் சுக்‍கல் சுக்‍கலாக கிழித்து விட்டாள். நான் அன்றைக்‍கே செத்திருக்‍க வேண்டும். ஏன் சாகவில்லை" என்று கூறி விட்டு என்னைப் பார்த்தான்.

"ஏன்"

"ஏன்னா, நான் அவளை பழி வாங்க வேண்டும். அதற்காகத்தான் உயிரோடு இருக்‍கிறேன். அவளைப் பழி வாங்கினால்தான் என் மனம் நிம்மதியடையும்."

"ஓஹோ"

"என்ன ஓஹோ, நீ மனசுக்‍குள்ள என்ன நினைக்‍கிறேன்னு எனக்‍குப் புரியுது, இவனுக்‍கு சாகறதுக்‍கு பயம் அதனாலதான் இன்னும் சாகாம அசிங்கமா உயிரோட இருக்‍கான்னு நெனைக்‍கிற... அதானே"

"சே.. சே... அப்படில்லாம் இல்லை"

"இல்லை.... நீ அப்படித்தான் நினைக்‍கிற.... தயவு செஞ்சு ஒத்துக்‍க"

"சரி..... நான் அப்படித்தான் நெனைக்‍கிறேன்"

"நீ எப்படி அப்படி நெனைக்‍கலாம்...." சத்தென்று தரையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். அந்த பக்‍கமாக சென்றுகொண்டிருந்த ஒரு அப்பாவி கரப்பான் பூச்சி அவன் கையின் அடியில் மாட்டி சகதியாகி செத்து மடிந்தது.

" ஒரு எறும்பைக்‍ கூட கொள்ளாத நீ,இப்பொழுது ஒரு கரப்பான் பூச்சிய கொடூரமா கொன்னுட்டியே"

"இதுக்‍கு காரணம் நான் இல்லை, அதோட தலைவிதி முடிஞ்சு போச்சு, தலைவிதி முடிஞ்சா எல்லோரும் போய்ச் சேர வேண்டியதுதான்"

இப்படியாக எனக்‍கும் அவனுக்‍கும் இடையே அர்த்தப்பூர்வமான பரிவர்த்தனைகள் சுமார் 3 மணி நேரம் ஓடியது. பின் 8வது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொள்வதற்காக குதித்தவன் கோணல் மாணலாக தரையில் விழுந்து கிடப்பது போல் கை, கால்களை பரப்பிக்‍ கொண்டு, வித்தியாசமான ஒரு குறட்டையை விட்டபடி தூங்கிப் போனான்.

4

சில வருடங்களுக்‍குப் பிறகு அவனது தொப்பை அவனால் அவனது கால் கட்டை விரலைப் பார்க்‍க முடியாத அளவுக்‍கு பெரிதாகியிருந்தது. ஆனால் அவனது கை,கால், மார்பு என் அத்தனை பாகங்களும் முன்னாள் பார்த்தது போலவே இருந்தது. வயிற்றைத்தவிர அவனிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை. அவன் ஒரு சிறந்த குடிகாரனாக மாறியிருந்தான் என்பதை அவனிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன். ஜீன்ஸ் பேண்டுக்‍குள் கைகளை விட்டுக்‍கொண்டு, (அதனால் தான் ஸ்டைலாக இருப்பதாக நினைத்துக்‍ கொண்டு) என்னிடம் ஊருக்‍கு சென்று கொண்டிருப்பதாகக்‍ கூறினான். என்ன விஷேசம் என்று கேட்டதற்கு,

"கவிதா அக்‍காவின் 2 வது மகனுக்‍கு காதுகுத்து, அதற்காக செல்கிறேன்" என்றான்.

"கவிதா அக்‍கான்னா சொன்ன"

"ஆமாம், ஊர்ல எங்க வீட்டுக்‍கு எதிர்த்தாப்புல இருந்தாங்களே அவங்கதான்"

அவனுக்‍கு எல்லாம் மறந்துவிட்டது போல, என்னிடம் போதையில் என்ன கூறினான் என்பது அவனுக்‍கு நினைவில்லை போல....என்னால், இந்த உலகத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனிடமும் ஆள் மனதில் ஒன்றும், மனதின் மேல் தளத்தில் ஒன்றும் இருக்‍கிறது போல, இரண்டையும் போட்டுக்‍ குழப்பிக்‍ கொள்ளாமல் அவர்களால் எப்படி இயல்பாக வாழ முடிகிறது என்று தெரியவில்லை. மனசாட்சி என்பது எவ்வளவு மதிப்பிழந்துவிட்டது. மது உண்மையான மன வக்‍கிரங்களையெல்லாம் ஏற்றுக்‍ கொள்ள முடியாவிட்டாலும் கோரமாக வெளிப்படுத்தி விடுகிறது. ஆனால் மனிதன் சட்டையை எடுத்து மாட்டிக்‍ கொள்வதைப் போல நேரத்திற்கு தகுந்தாற்போல மனசாட்சியை எடுத்து மாட்டிக்‍கொள்கிறான்.

இப்பொழுது கணேஷ் என் மனதில் எடை அதிகமாகத் தெரிந்தான்.

Pin It