இது ரொம்ப பெரிய கதை. இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை. கதையின் அளவு பெரியதல்ல. ஆனால், காலம் பெரியது. இருந்தாலும் இன்றாவது, எழுதியே ஆக வேண்டும்.

அப்போது நான் சின்னப் பையன். எங்கள் ஊரின் வயல் வரப்பின் வழியாக நடக்கும்போது பயமாக இருக்கும். மேலே உள்ள வானத்தைத் தவிர எதுவும் தெரியாது. நெல்லின் பெயர் ஏதோ கார் என்று சொல்வார்கள். எனக்கு சரியாக நினைவில்லை. அப்புறம் பள்ளி செல்லும் எனக்கு, இலகுவான பெயர் உள்ள நெல் அறிமுகமானது. ஐஆர்8. எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்று நான் சிலாகித்திருக்கிறேன். அது என்னை பயமுறுத்தாத நெல். என் உயரத்திற்கும் குறைவாக இருக்கும்.

என் அண்ணியைப் பார்த்தால் எனக்குப் பயம். என் பெரியண்ணன் ரொம்ப நல்லவர். அவரும் சின்னண்ணனும் மூத்த தாரத்தின் பிள்ளைகளாம். நான் என் அக்கா அம்மா எல்லோரும் ஒரே வீட்டில்தான் இருந்தோம். அண்ணி என்னை அடித்துத் துவைக்கும்போது நான் கோபித்துக்கொண்டு சுடுகாட்டு வாய்க்காலுக்குப் போய்விடுவேன். மொட்டைகல் விளக்குத் தூணுடன் சுடுகாடு நிற்கும். கண்ணுக்கெட்டியவரை வயல்தான். உச்சி வெயிலில் பேய் அடிக்கும் என்று யாரும் வரமாட்டார்கள். நான் அங்குபோய் உட்கார்ந்து விடுவேன். எனக்குத் துணையாக பேய்கூட வராது.

வாய்க்காலில் செங்கழுநீர் பூத்திருக்கும். சின்ன மீன் குஞ்சுகள் ‘முய் முய்’ என்று மொய்த்துக்கொண்டிருக்கும். செம்பச்சை கொடிகளுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த மீன்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, என்னை யாரோ பிடித்துத் தூக்குவது உணர்ந்து அலறினேன். ‘ஐயா, நா அய்யாறு’ என்ற பின்தான் அச்சம் போனது. அவனது பரந்த மார்பு… அதில் படர்ந்துள்ள வெள்ளை முடி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அப்போதெல்லாம் அவரை அவன் என்றுதான் குறிப்பிடுவேன். அப்படித்தான் எனக்கு சொல்லியிருந்தார்கள்.

அய்யாறு எங்கள் ஊர் தலையாரி அத்தோடு வெட்டியான். தண்ணிக் பாய்ச்சுவது, சாவுக்கு குழி வெட்டுவது எல்லாம் அவன் மன்னிக்கவும் அவர் வேலை. அவர் மார்பில் சுருண்டு கொண்டு தோளில் தலை சாய்த்தால் அப்படி சுகமாக இருக்கும். தூங்கிப் போவேன். அவரின் வேர்வை மணம் அப்படியேத் தூக்கும். அன்றும் அப்படித்தான் தூங்கிப் போனேன்.

கனவில் அண்ணி வந்தார். எம்புருஷன் என்ன ஒனக்கு புள்ளையா புருஷனா? மாற்றாந்தாயிதானே நீயி. எம் புருஷன் ஏன் ஒனக்குச் சம்பாதித்துப் போடனும்’ என்று கேட்டார். அம்மா தரையில் உட்கார்ந்து அழுதார்., அப்புறம் எழுந்து அப்பாவின் கடைக்குப் போய்விட்டார்.

அப்பாவை கொஞ்ச நாள் முன்பு ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் புதைத்தார்கள். நெய் பந்தம் பிடித்துக்கொண்டிருந்த நான் சுடுகாடு வரை சென்றேன். பந்தம் அணைந்து போனது என்று சேனியத்தெரு இராசு தலையில் அடித்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

எங்கள் அப்பா மரமேறி. நான் பிறந்த ஜாதகம் அவருக்குக் கண்டம் என்று திருவேட்டகுடி வள்ளுவன் சொன்னதால், மரமேறுவதை விட்டுவிட்டு கடை வைத்தாராம். அம்மா சொல்லியிருக்கிறார். அப்பாவை நிமிர்ந்து பாக்கும்போது இடுப்பு துவங்கி, ஆங்கில எழுத்து வி போல அவரது மார்பு விரிந்து கிடக்கும். அவரைப் பற்றி எனக்கு பெரிதாக ஞாபகம் இல்லை. எனது பள்ளிப் புத்தகத்துக்கு காக்கி அட்டை போட்டுக்கொடுத்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது.

அப்பா இறந்த கொஞ்ச நாளில் கருப்பா இறந்து போனது. சாப்பிடாமல் பட்டினி கிடந்து இறந்து போனது. கருப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கன்றுகுட்டி உயரத்திற்கு இருக்கும். என்னைப் பார்த்தால் தரையில் படுத்து காலை முகர்ந்து முத்தமிடும். பிள்ளை வீட்டு காளை மாடு என்னை முட்ட வந்தபோது கருப்பாதான் என்னைக் காப்பாற்றியது. மாட்டின் கொம்பு எனக்குப் பயமாக இருந்தது. கருப்பாவுக்குப் பயமில்லை. கருப்பாவின் கோரைப் பல்லைப் பார்த்து அந்த மாடு வெறித்து நின்றுவிட்டது.

இப்போது கருப்பாவும் இல்லை. அதனைப் புதைத்த இடத்தில் நட்ட சவுக்கு வானை முட்டிக்கொண்டிருந்தது.

அய்யாறு கடையில் என்னை இறக்கிவிட்டார். அம்மா அவருக்கு வெற்றிலைப் பாக்கும் பீடியும், நூலில் கட்டப்பட்ட தீக்குச்சிகளையும் கொடுத்தார். ‘சின்னய்யாவ உட்டுடாதிங்க அம்மா, எங்க அய்யா உயரம் வருவாரு சின்னையா’, என்று அய்யாறு சொல்லிவிட்டுப் புறப்பட்டார். போகும்போது ‘தீப்பெட்டி பட்டையொன்று கொடுங்க ஆச்சி’, என்று அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்.

அம்மா என்னை அணைத்துக்கொண்டு அழுதார். என் தலையில் கைவைத்துக் கோதிவிட்டார். அம்மாவின் கையை உணர்ந்திருக்கிறீர்களா? அடிக்கும்போது கூட உங்களைத் தழுவும் கரங்கள் அவை. கரடிக்குட்டி போன்ற என் தலைமுடியில் அம்மாவின் விரல்கள் கோலம் போட்டன. நான் தூங்கிப் போனேன்.

இப்படி எத்தனையோ நாட்கள். அம்மாவுக்கு வயதாகிப் கொண்டே வந்தது, ஆனாலும், கடைத் திண்ணையில் நான் படுத்திருக்க என் தலையில் கைவைத்து நான் உறங்கிய பின்தான் தூங்குவார். அல்லது விழித்திருந்திருப்பாரோ?

பக்கத்து வீட்டு பிள்ளையின் வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் இடையில் மூங்கில் வேலியிருக்கும். நான் சின்ன பையானாக இருந்தபோது நானும் என் சின்ன அண்ணனும் சேர்ந்துதான் வேலியை ஐப்பசி மாதத்தில் கட்டுவோம். அப்போதுதான், பெய்யும் மழையில் ஒதியன் துளிர்க்கும். ஒதியன் இருந்தால்தான் வேலி நிற்கும்.

முட்படலைக் கட்டுவதற்காக நான் பிள்ளை வீட்டின் பக்கம் நிற்க அண்ணன் எங்கள் வீட்டுப் பக்கத்தில் நின்றிருந்தார். என்னை வேலியின் அந்தப் பக்கம் தூக்கி இறக்கியபோது நெஞ்சில் முள் குத்தி இரத்தம் வந்தது. அண்ணன் பாலையை அந்தப் பக்கம்இருந்து சொருக கவட்டையைக் கொண்டு முட்படலை அணைத்து அழுத்தியபடி பாலையைத் திருப்பித் தருவது என் வேலை.

அப்போது வெளியே வந்த பிள்ளையின் மகள் சரசு அண்ணனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். நான் தட்டான்பிடிக்க வேலி பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். ‘பளீர்’ என்று சத்தம் கேட்டது. முதுகு எரிந்தது. திரும்பிப் பார்த்தால் தங்கவேல் பிள்ளையின் வீட்டுக்காரம்மா. செம குண்டு. நிமிர்ந்து பார்த்த என் கண்ணில் அவர் எங்கவூர் கோவில் பெரியாச்சி போல தெரிந்தார். ’சின்னவனுக்கு தட்டான், பெரியவனுக்கு எம்பொண்ணா?’ என்று கேட்டது நினைவில் இருக்கிறது. சின்ன அண்ணனையும் காணவில்லை. தங்கவேல் பிள்ளையின் மகள் சரசுவையும் காணவில்லை. மாட்டிக்கொண்டு அடிவாங்கும் பூனைக்குட்டியாய் நான்.

பிள்ளை வீட்டில் வேலை செய்யும் ஆச்சி என்னை அணைத்துக்கொண்டாள். ஆச்சி எங்கள் இரண்டு வீட்டிலும் வேலை செய்த கிழவி. அவளையும் நான் டீ போட்டுத்தான் அழைப்பேன், ஆனாள் ஆச்சி மிகவும் நல்லவர். காலையில் வந்து எங்கள் வீட்டு வேலை செய்து விட்டு, அண்ணி கொட்டும் பழையதைச் சாப்பிட்டுவிட்டு, என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.

ஆச்சி என்னை இடுப்பில் சுமந்து கொண்டு எங்கள் வீட்டுக்கு தூக்கிச் சென்றார். அந்த குண்டு பிசாசு கத்தியது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆச்சி வலது கையை உயர்த்தி மடிக்கப்பட்ட ஆள் காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் கட்டை விரலை நுழைத்து ஏதோ சொன்னார். சர்வநாடி ஒடுங்கிப் போன அந்த குண்டு பேய் சத்தம் போடுவதை நிறுத்திவிட்டது. நான் ஆச்சியிடம் ஒண்டிக்கொண்டேன். அய்யாறுவின் மீது வீசும் மணம் ஆச்சியின் உடலிலும் இருந்தது.

அப்புறம் என்னென்னவோ நடந்தது. என்ன ஆனாலும், ஆண்டுக்கு ஒரு முறை நான் ஊருக்குச் சென்றுவிடுவேன். ஆனால், அம்மா என்னோடு நான் வேலை பார்க்கும் ஊருக்கு வரவில்லை. ’ஒனக்கு நான் பேண்ட் துணி எடுத்து வைச்சிருக்கேன்’ என்று கொடுப்பார். அவரது புடவைக்கு என்று பணம் கொடுத்தால் வாங்கமாட்டார். ’ஒங்க அண்ணன், ஒங்க அப்பன், ஒங்க சனத்தை நம்பி நா பொறக்கல’ என்பார்.

ஆனால், இரவு கடை திண்ணையில் படுக்கும்போது அம்மாவின் கை என் தலையில் இருக்கும். அவரின் கரம் ஓயாமல் தலையில் கோலம் வரையும். அந்த சுகத்தை இதுவரை யாரும் எனக்குத் தந்ததில்லை. காலையில் எழுந்தால் அம்மா கொல்லைப்புரத்தில் கொடி அடுப்பில் காப்பி போட்டபடி, விறகடுப்பில் இட்டிலி சுட்டுக்கொண்டிருப்பார். பனை மட்டை எரிந்துகொண்டிருக்கும். அம்மா தூங்கியது எப்போது என்று நான் யோசித்திருப்பேன்.

கடைசியாக நான் ஊருக்குச் சென்றது அம்மா ஒரேயடியாக தூங்கியபோதுதான். நண்டலாற்றின் கரையில் அம்மாவைப் புதைத்தார்கள். நான்தான் முதல் கை மண்ணை அள்ளிப் போடவேண்டுமாம், போட்டேன், அவரது காலடியில்… ‘நல்லா போடு தம்பி எப்போ காரியம் முடிக்கிறது’, என்று யாரோ சொன்னார். அள்ளிப்போட்டேன், கல் ஒன்று உருண்டு சென்று அம்மாவின் முகத்தில் விழுந்தது.

‘வலிக்கும்.. வலிக்கும்’ என்று கதறினேன். ’யாரடா இவன் ஊருல இல்லாத புள்ள’ என்று யாரோ சொன்னார்கள். வலிக்கும் வலிக்கும் என்று என் என் மனது அழுதது. அப்புறம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.

நான் தனியனாக கரையை நோக்கி நடந்தேன். வெள்ளைத் துணியை ஆற்றங்கரையோர ரோட்டில் விரித்து வட்டமாக அமர்ந்திருந்தார்கள். மையத்தில் என் அக்கா வீட்டுக்காரர் இருந்தார். இரண்டு பத்து ரூபாயையும் சில காசுகளையும் தூக்கி வீசினார். ’என்னோட வயசுக்கு அஞ்சு பங்கு ஒங்க வெட்டியான் கூலி அதிகமாயிடுச்சு என்று கத்தினார். பணத்தைப் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த அந்த பெரியவரின் உடல் முழுக்க நரைமுடி. அய்யாறுவின் மார்பில் இருந்த நரைமுடி.

அய்யாறு என்றேன். சின்னய்யா என்றார் அவர். தழுவிக்கொண்டேன். அந்த வியர்வை மணம் அப்படியே இருந்தது. ஆச்சியின் அரவணைப்பு வெம்மை அவரின் அணைப்பில் இருந்தது.

டேய்.. சாதி கெட்டவனே என்று வெள்ளை வேட்டி ஒருவர் கத்தினார். நான் அய்யாறுவை அணைத்தபடி நடந்தேன்.

‘டேய் எவனுக்குப் பொறந்தடா’, என்று ஒரு குரல் கேட்டது. அய்யாறு என்னை விலக்கினார். நான் அவர் கையைப் பிடித்துகொண்டேன்.

அய்யாறு என்னைப் பார்த்த பார்வையில் பயமிருந்தது. என்னைப் பைத்தியமென்று நினைத்தாரா அல்லது ஊரை நினைத்துப் பயந்தாரா என்று தெரிவில்லை. நான் என் அய்யாறுவை அணைத்தபடி, தரதரவென்று இழுத்தபடி நடந்தேன்…. மிரண்டுபோனவராய் அவர் என்னை பின்னுக்கு இழுத்தார்….

- சி.மதிவாணன்

Pin It