தாத்தா

இது அவ்வளவு சாதாரணமான விஷயமாகத் தோன்றவில்லை. இதுகுறித்து முழு விசாரணை நடத்தியே ஆகவேண்டும். யோசித்துப் பார்த்தால் உலகில் சகஜமாக நடக்கக் கூடிய விஷயமாகத்தான் தோன்றியது. ஆனால் அவன் சற்று எல்லை மீறியிருக்கிறான். அதை எப்படி சொல்வது. இந்த தள்ளாத வயதில் என்னை அசிங்கப்படுத்துவதில் அவனுக்கு அப்படி என்ன ஆசையோ. அவன் கூறியிருக்கிறான். எனக்கு நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறதாம். அதனால் நான் சாகக் கிடக்கிறேனாம். அந்த மடவாத்தியாருக்காவது தெரிய வேண்டாம், எனக்குப் பேதியென்றால் அவனுக்கு எதுக்கு லீவு கொடுக்க வேண்டும். அவன் என்ன எனக்கு மருத்துவமா செய்யப் போகிறான். ஆனால் ஒரு விஷயத்தில் என் பேரனைப் பாராட்டியே ஆக வேண்டும். 5 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே தனது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிக சாதூர்யமாக நடந்துகொள்கிறான். எதிர்காலத்தில் பிழைத்துக் கொள்வான் என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது சரியல்லவே. நல்ல குணங்களை கற்றுக் கொடுப்பது பெரியோரின் கடமையல்லவா? அவனுக்கு கற்றுக் கொடுத்தேயாக வேண்டும் நல்ல குணங்களை. 

பேரன்

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவரிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று ஏக்கமாக உள்ளது. சுதந்திரத்தை பிறப்புரிமையாக பெறுவதற்கு ஏதேனும் ஏஜ் லிமிட் இருக்கிறதா என்பதுதான் அந்த கேள்வி. 5ம் வகுப்பு படிக்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக எனக்குரிய சுதந்திரம் தடுக்கப்பட வேண்டுமா? இது ஒரு நியாயமான காரணம் இல்லையென்று சுட்டிக்காட்ட யாருக்கும் உரிமையில்லை. அதாவது, அது நான் ஒரு சினிமா பார்க்க விரும்பியது. சினிமா ஒரு சமுதாய குற்றமாக இருக்கவில்லை என்பது உண்மையெனில் ஒரு ஆசிரியர் அதற்காக என்னைக் கடிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. யார் அந்த ஷகிலா. அந்த வயதான பெண்மணி நடித்த படத்தை நானும், எனது உயிர் நண்பனும் பார்க்கக் கூடாதா? கூடாது என்றால் அதை வாயால் சொல்ல வேண்டியது தானே. அதற்காக டவுசரை கழற்றச் சொல்லி, புளிய விளாறால் அந்த இடத்தில் அடித்தால் என்ன நியாயம். அந்தப் படத்தை முழுவதுமாகக் கூட பார்க்கவிடவில்லை. அந்த தியேட்டர் முதலாளி நாங்கள் படத்துக்கு வந்த விஷயத்தை தண்டோரா போட்டுவிட்டான். பெயர் போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே நாங்கள் இழுத்து வரப்பட்டு தண்டிக்கப்பட்டு விட்டோம். நியாயமே இல்லாத இது போன்ற விஷயங்களிலிருந்து என்னை தற்காத்துக் கொள்ளவே நான் பொய் சொல்ல ஆரம்பித்தேன். பாருங்கள் என் போன்ற சிறுவர்கள் பொய்யை கற்றுக்கொள்ள எங்கும் போய் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொள்வதில்லை. இங்கேதான், இதே சமுதாயம்தான் தூண்டிவிடுகிறது. அன்று நான் தண்டிக்கப்படும் போது என் தாத்தா என்னைப் பார்த்து சீரியஸாக கூறினார்.

‘தீக்குள்ள விரல விடாதன்னு சொல்றேன், நீ கேக்க மாட்டேங்ற'

அதெப்படி சுடு உணர்வை அனுபவப் பூர்வமாக அறிந்து கொள்ளாத யாரேனும் இந்த உலகில் இருக்கிறார்களா? இல்லை என் தாத்தாதான் இதுவரை அந்த தீக்குள் விரலை விட்டதேயில்லையா? இதுவரை இந்த உலகில் நடக்காத மற்றும் நடக்க இயலாத விஷயங்களை இந்த தாத்தா ஏன் என்னிடம் எதிர்பார்க்கிறார்? இது அவரது பிரக்ஞையற்ற மனதிலிருந்து எழக்கூடிய முட்டாள்த்தனமான கடைபிடிப்பு. இதுகுறித்து சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும் ஒரு சினிமா பார்ப்பதை தீக்குள் விரலை விடுவதோடு ஒப்பிடுவது அவ்வளவு சரியாகப் படவில்லை எனக்கு.

தாத்தா

எனது 36ஆவது வயதில் எனக்கு அந்த ஆசை வந்திருக்கக் கூடாது. என் மனைவிக்கு தெரிந்திருந்தால் அவ்வளவுதான். அவள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் கண்டிப்பாக உலக்கையாகத்தான் இருக்கும். ஐந்தரை கிலோ எடையுள்ள உலக்கையை எடுத்து அநாயசமாக வீசுவாள். குறிதவறிவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு ஈட்டி எறியும் தடகள வீராங்கனையை இந்தியா இழந்துவிட்டது என்று கூறினால் அது மிகையல்ல. ஆனால், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என் முன்னோர்கள் செய்த புண்ணியத்தைப் பற்றிதான். அப்புண்ணியங்கள் மட்டும் இல்லையென்றால் என் உயிரை வேறு எவற்றால் காப்பாற்றியிருக்க முடியும். இருப்பினும் ஆசை யாரை விட்டது. எனது தோழர்கள் அனைவரும் செல்லும் பொழுது நான் மட்டும் எப்படி செல்லாமல் இருக்க முடியும். அந்தப் படத்தில் நடித்த பெண்மணி வேறு அழகாக இருந்தாள் அப்பொழுது.

எங்கள் ஊரில் இருப்பது இரண்டே இரண்டு தியேட்டர்தான். அதை தியேட்டர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. கொட்டகை என்று கூறலாம். உலகில் வேறு எந்த தியேட்டரிலும் இருக்காது பார்வையாளர்கள் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதி. ஊர் மிராசு மட்டும் முட்டாள் தனமாக சேர் போட்டு உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பான். காலையில் மட்டும் தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகனேசன், எஸ்.எஸ்.ஆர். படமெல்லலாம் போடுவார்கள். இரவாகிவிட்டால் அந்த பெண்மணியின் படம்தான். வெகுநாள் கழித்துதான் எனக்கும் ஆசை பிறந்தது. 36 வயதில் கூட இல்லையென்றால் பின் எப்போது. என் நண்பர்களுடன் நானும் சென்றேன். (அப்போது நம் நாட்டின் மக்கள் தொகை 75 கோடி)

இதையெல்லாம் நான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமேயில்லை. இருப்பினும் என் பேரனின் நியாயமான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் அவன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது ஆச்சரியப்படத்தக்க உண்மையல்ல. அவனுக்கு சொல்லிக் கொடுத்தாக வேண்டும். இது முறையான வயதல்ல, எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு என்பதை எந்த வகையிலாவது அவனுக்கு தெரிவித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் விஷயம் விபரீதமாகிவிடும். இன்று காலை எனக்கு பேதியாகிவிட்டது, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறேன் என்று பொய் சொல்லி பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு எங்கோ சென்றிருக்கிறான். கடவுளே இப்பொழுதெல்லாம் பகலிலேயே அந்த படத்தைப் போடுகிறார்கள். அவன் அங்கு மட்டும் சென்றிருக்கக் கூடாது. அவனை எப்படியாவது நல்வழிப்படுத்த வேண்டும்.

பேரன்

உலகிலேயே மிக மோசமான தண்டனை என்ன தெரியுமா? ஞாயிற்றுக்கிழமை மாலை தூர்தர்ஷனில் (அதுவம் அந்த நெல்கோ பிளாக் அண்ட் வொய்ட் டி.வியில்) வீடு, ஒருவீடு இருவாசல் போன்ற உலகத் திரைப்படங்களை பார்ப்பது தான். மனசாட்சியில்லாத அந்த தூர்தர்ஷன் நிர்வாகி, வீடு படத்தை 5வது தடவையாக இந்த வாரமும் போட்டுவிட்டார். என் மனம் நொறுங்கிப் போனது. தலைவலி தாங்க முடியவில்லை. இத்தகைய கசப்பான மன உணர்வோடு திங்கள் கிழமை அதுவுமாக நான் எப்படி பள்ளிக்கு செல்ல முடியும். மனம் ஒரேயடியாக எத்தனை இடிகளைத்தான் தாங்கும். அதனால்தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன்.

என் பாட்டிதான் அந்த ஐடியாவை எடுத்துக் கொடுத்தார். ராத்திரி நேரத்தில் பட்டாணியை அதிகமாக சாப்பிட வேண்டாம். வயிறு செரிக்காமல் பேதியாகிவிடும் என்று. எனக்கு அப்பொழுதுதான் அந்த ஐடியா தோன்றியது. நான் விருப்பத்தோடு குழம்புச் சட்டியிலிருந்து அனைத்துப் பட்டாணிகளையும் எடுத்துச் சென்று தாத்தாவிற்கு சாப்பிடக் கொடுத்தேன். அவரும் பல்லே இல்லாவிட்டாலும் அரவை இயந்திரத்திற்குள் போட்டு அரைத்து விழுங்கினார். ஆனால் எனது துரதிர்ஷ்டம் இந்த வயதான காலத்திலும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. பாட்டி கூறியது பொய்யா அல்லது தாத்தா ஒரு வைரம் பாய்ந்த கட்டையா? தெரியவில்லை. நான் பயந்தது போலவே அது நிகழ்ந்தே விட்டது.

என்னையும் எனது நண்பனையும் தியேட்டர் வாசலிலேயே மடக்கி விட்டார் எனது தாத்தா. அப்பொழுது நாங்கள் படம் பார்த்து முடித்து விட்டு வந்து கொண்டிருந்தோம். அவரது முகக் குறிப்புகளை பார்க்கும் பொழுது அவர் மனமுடைந்து போயிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றியது. அவருக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது. தனது கைத்தடியை உயர்த்தியபடி ஒருபோர் வீரனைப் போல ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற இரண்டு பெரிய மனிதர்கள் பின்வரும் வசனத்தை பேசிக்கொண்டு சென்றார்கள். அதை கேட்டவுடன் என் தாத்தாவின் வேகம் சற்று குறைந்து விட்டது. அவரது கோபம் தணிந்து விட்டது. அந்த வசனம் பின்வருமாறு இருந்தது.

நபர் 1 : சும்மா வால்போஸ்டர ஒட்டி ஏமாத்திட்டாங்க மாப்ள

நபர் 2 : பத்து ரூவா வேஸ்ட்

நபர் 1 : இந்த தியேட்டர் சரியில்ல மாப்ள, நம்ம ஆர்,ஆர் தியேட்டருக்கே போயிருக்கலாம்.

நபர் 2 : சரி வுடு அடுத்த தடவ பாத்துக்கலாம்.

அந்த படம் அப்படி ஒன்றும் நன்றாக இல்லை. இதைப் பார்க்க ஏன் இவ்வளவு கூட்டம் என்று புரியவில்லை. தூர்தர்ஷனில் போட்ட வீடு படத்தை விட மொக்கையாக இருந்தது அந்தப் படம். அந்த நடிகையை பற்றி பிரமாதமாக கூறினார்கள். அப்படி ஒன்றும் நேஷனல் அவார்டு வாங்கக் கூடிய அளவிற்கு எந்த நடிப்புத் தகுதியும் இல்லை. ஆனால், இப்பொழுது குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என் தாத்தா என்னை அடிக்கவில்லை. ஆனால் காதைப்பிடித்து திருகியபடி இழுத்து செல்லும் கெட்டப் பழக்கத்தை விட்டுவிடுவதை பற்றி அவர் யோசித்தால் நல்லது. எனக்கல்ல அவருக்கு.

- சூர்யா

Pin It