இரவிலேயே
நடந்து முடிந்து விடுகின்றன
முக்கிய நிகழ்வுகள் எதுவும்.
விழித்த பொழுதோ
அல்லது விடிந்த வேளையிலேயே
அறிய முடிகிறது
நடந்தவைகளை.
மனைவி எழுப்பி சொல்லியே
தெரியும்
முன்னாள் முதல்வர்
எம்.ஜி.ஆர் மறைவு.
முன்னாள் பிரதமர் ராஜீவின்
படுகொலையும் அவ்வாறே
யாரோ கூறியதாக நினைவு.
அலுவலகத்திலிருந்து வந்த
அவசர அழைப்பிலே தெரிய வந்தது
நடு இரவில் கலைஞர்
கைது செய்த விவரம்.
இப்படியே நிகழ்ந்தது
பின்னர் தெரிந்தது
எதிர் வீட்டு பாட்டியின்
இயற்கை மரணம்.

'அம்மா' என்றாலும்

அம்மா இல்லாத அவஸ்தை
எனக்கு.
மனைவி இல்லாத சிரமம்
அப்பாவிற்கு.
என் சம்மதத்துடனேயே
அப்பா செய்து கொண்டார்
இரண்டாம் திருமணம்.
இருவரின் தேவையையும் அறிந்து
பூர்த்தி செய்வாள்.

சினிமாவில் பார்த்த
'சித்தி'யாக இல்லாமல்
சினேகிதமாக இருந்தாள்.
'அம்மா'வெனவே அழைப்பேன்;
அவளும் மகிழ்வாள்.

அப்பாவிற்கு நல்ல மனைவி
எனக்கு அன்பான 'சித்தி'.

ஆயினும்
என் இதயம் நிறைந்த
அம்மாவின் இடத்தை
எட்டமுடியவில்லை
என் சித்தி.

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It