அடர்ந்து இருளப்பிய அவ்வர்த்த ராத்திரியில்
நட்சத்திரங்கள் சிமிட்டிக் கிடக்கும்
அவ்வத்துவானக் காட்டில்
அவதியுற்றுக் கிடந்த அவ்வொருத்தனைப் பற்றி

கார்மேகங்களும் கரைந்தொழுக கணம் நோக்கும்
அவ்விளவேனிற்கால சாயங்கால பொழுதுகளில்
உடனாடிக்கிடந்த அந்த நண்பர்களின்
அடுத்த நிலைகள் பற்றி

திடுமென உட்புகுந்து
முகமப்பிய கலவரத் தோரணைகளில்
உத்தரவும் உபதேசமும் அள்ளியிறைத்துச் சென்ற
முன் பார்த்திராத முகவரியற்ற
அம்மூன்றாமவர்களைப் பற்றி

ஏதென்றறியாமலும்
என்னவென்றுணராமலும்
எதெதற்கோ ஏகத்தும் வியர்க்கச் செய்த
என் பீதிக்கான காரணங்கள் பற்றி

மலர் சுகந்தங்களில் மணந்தோடிச் செல்லும்
இரவும் பகலுமற்ற இடைத் தருணங்களொன்றில்
வெறுமையடர்ந்த அத்தார்ச்சாலை வழியினூடாக
கரம் பற்றிக் கதை பேசிச் சென்ற
நண்பனுடனான அவ்வழிப் பயணத்துக்குண்டான
தார்மீகக் காரணங்கள் பற்றி

இப்படித்தான் அந்தங்களின்றித் தொங்கும்
என்றென்றும் நிறைவுறுத்தப்படாத
அரைகுறைக் கனவுகளிலேயே
அடித்தெழுப்பப்டுகிறேன்
அனுதினமும்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It