அருந்தமிழ்ப்  பாவரங்  கணிசெயுந்  தலைவ !

இருந்தமிழ்ப்  பாவலீர் !  பொருந்தவை  யமர்ந்த

அறிஞரீர் !  பெரியீர் ! அன்புறு  தாய்க்குலச்

செந்தமிழ்  உணர்வீர் !  செயல்வல்  இளமையீர் !

தோழமை  சான்ற  தூயநல்  லுளத்தீர் !

ஆழன்  பார்ந்தே  அனைவரை  வணங்கினேன் !

அண்ணா  நூற்றாண்  டணிதிகழ்  நிறைவில்

எண்ணிப்  பாவரங்  கெளிமையில் அமைத்தனர் !

‘பாவலர்  நெஞ்சில்  பேரறி  ஞர் ’என

மேவுறு  தலைப்பில்  பாவளி  என்றனர்!                           -10

 

அண்ணா !  அட,ஓ !  எண்ணம்  இனிக்கும்

வண்ணத்  திருப்பெயர் !  ஈரா  யிரமாண்(டு)

இழிதளைப்  பட்டஎம்  இனத்தினைக்  காக்க

எழுச்சியோ  டிளைஞரை  ஈர்த்தவர்  பெயரிது !

ஆரையும்  விடவும்  ஆரிய  அராவை

நேருறத்  தாக்கி  நிலைகெடக்  கிடத்திய

ஒருதனிப்  பெரும்பணிப்  பெரியார்  தேர்ந்தசெந்

தெருள்தெளி  மாணவர்  தீந்தமிழ்ப்  பெயரிது !

மூடுற்ற  தமிழினப்  பீடு  விளக்கிய

ஈடிலா  அறிஞரின்  சூடெழும்  பெயரிது !                          -20

 

தாய்நிலந்  தன்னைத்  தமிழ்நா  டென்றே

வாய்மகிழ்ந்  தழைக்க  வைத்தவர்  பெயரிது !

ஆட்சியில்  கல்வியில்  காட்சியில்  இசையில்

நீட்சி  தமிழின  வீழ்ச்சியென்  றுணர்த்தி

நலங்களைச்  சிதைத்தோர்  கலக்குற  துலக்கமாய்ச்

சொலல்வல்  திறத்தரின்  சுருக்கப்  பெயரிது !

செத்ததை  விலக்கிய  செந்தமிழ்த்  திருமணம்

ஒத்தொப்  பிடவோர்  சட்டஞ்  சமைத்தவர் !

பிறப்பிற்  பிரிவினை  இறக்கங்  கூறிய                                

சிறப்பிலா  ஆரிய  மாயை செகுத்தவர் !                      -30

 

தமிழர்  உணர்வுத்  தழல்தீப்  பரவவும்

இழிவொழித்  திவ்வினம்  ஏற்றமுற்  றிடவும்

அயரா  துழைத்த  வயவரி  யாரவர் !

பெயராப்  பெரும்புகழ்ப் பேற்றில்  நிலைத்தவர் !

இராசாசி  சூழ்ச்சியில்  நேரு  தட்சிண

இராச்சியம்  கொணர  இங்கதற்  கெதிராய் 

மொழிவழி  அரசுகள்  வழிவழி  அமைய

கழிபெரு  மாற்றலாய்க்  கடுங்குர  லார்த்தவர்! 

இந்திய  தேசிய  மெதிர்த்தா  ராயினும்

நந்தமி  ழினநல  நாட்டமிக்  கிருந்தும்                       -40

 

தெரிந்தே  திராவிடத் தேசியம்  பேசி

அருந்தமிழ்த்  தேசியம்  பொருந்திடா  தெதிர்த்தமை

ஒப்போலை  அரசியல்  தப்பதே!  சறுக்கலே ! 

இப்பிழை  யிவர்புகழ்  இறக்கிட  வில்லை !

செந்தமிழ்ச் சீருரை  தந்திடும்  வெற்றியால் 

எந்த  நிலையையும்  சந்தித்த  திவர்நா !

அடுக்கு  மொழியுடன்  அண்ணா  தமிழை

ஒடுக்கம்  உடைத்தே  உலாவரச் செய்தார் !

இருமொழி  போதும்  இந்திவேண்  டாவென

மருட்டலாய்த்  திட்டம்  மறுத்துக்  கொணர்ந்தார் !                 -50

 

 

அறிஞர்  இவரென  பெர்னாட்  சாவென                     

அறிவித்  தேத்தினார்  அண்ணாவைக்  ‘கல்கி’ ! 

ஆங்கிலந்  தனிலிவர்  பாங்குற  ஆற்றிய

ஓங்குரை  நேருவின்  உளங்கவர்ந்  தீர்த்தது !

ஈழத்  தமிழர்  இன்னலைத்  தீர்க்க

ஆழவு  ணர்ந்தே  அன்றவர்  முயன்றார் !                   

ஓர்வோம்  அண்ணா  உயிர்த்திருந்  தாரேல்

ஓரிலக்  கம்பேர்  சூருற  மடிவரோ ?

இன்றுமூ  விலக்கம்  இழிவினி  லின்னலில்

குன்றி  யங்கவர்  நின்றிட  விடுவரோ ?                          -60

 

தன்னலந்  தன்னுடை இன்குடும் புறுப்பினர்

நன்னலங்  கருதா  செந்நலத்  தொண்டர் !

ஒருமுறை அண்ணா  உரோமிற்குப்  போனார்

திருவுறை  போப்பிடம்  தேர்ந்திவர்  கேட்டதோ

விடுதலை  மறவர்  இரானடே விடுதலை

வடுவறுந்  தொடுப்பில்  எடுப்புற  அடுக்கி

அண்ணா  கேட்டதா  லவர்விடு  பட்டார் !                   

எண்ணிய  வெல்லாம்  நன்மாந்த  நேயம் !

பெரிதுபெரி  தண்ணா  பெரும்புகழ்  விரிக்க!

உரிமைபெற்  றிங்குநாம்  உயர்வுறற்  கெனவே                     -70

 

ஆர்த்தார்;  உழைத்தார்;  அதன்வழி

சீர்த்திசால்  தமிழினங்  காத்தனர்  அவரே!

----------------------------------------------------------------------------------------------------------

- தமிழநம்பி

Pin It