மெத்தைகள் தரும் Sleeping man
காந்தித்தாளினும் போதுமானதாய்
இவனுக்கு இருக்கிறது
தூக்கம் தரும்
கொஞ்சம் செய்தித்தாள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடு முன்னேறுவதை சொன்னான் இவன்
எப்படி எனப் புரியவில்லை
என் குழப்பம் எளிதாய்ப் புரிந்தது அவனுக்கு
ஒரு தரைவிரிப்பு போர்வை ரூபாய் இரண்டு மட்டும்
சிரித்தபடி சொல்லிவிட்டு அவன் படுத்துறங்கிவிட்டான்
எனக்கு தூக்கம் தொலைந்தது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாள் இது
சகோதரனின் சாவிலிருந்து
சொந்தங்களின் சங்கடம் வரை எல்லாம் இருந்தது அதில்
உணவு எட்டி மிதிக்கப் பட்டதாய்
உடைகள் உரியப் பட்டதாய்
மானம் உறிஞ்சப் பட்டதாய்
உயிர் உருக்கப் பட்டதாய்
ஏராளமாய் ஈனர்கள் செய்த
ஈழ இழப்புகள் அதிலிருந்தது
என்னிடம் இருந்து அடித்துப் பிடுங்கி
படுத்துத் தூங்கிவிட்டான் அவன்
எழுப்பத் தோன்றவில்லை -யாரறிவார்
நாளை இவனும் நாட்டின் தலைவனாகலாம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிரவின் பயணத்தில் மலைப் பாம்பு துரத்தும்
பூ உதிரும் நொடியில் பகைவர்கள் விதவிதமாய்க் கொல்வர்
மறக்க நினைப்பவரெல்லாம் பாதியில் வந்து முழிப்பு கொடுப்பார்
சிறுவயதின் பேய்க்கதையின் நாயகர்கள்
நாய் குலைக்க எனைப் பார்த்து கை குலுக்குவர்
எப்போதோ ஜெயித்த தேர்வுகளை மீண்டும் எழுதித் தோற்பேன்
மரண ஒத்திகையின் கனவில்
நாடகம் நிஜமாய் நடந்து பிழைக்கத் துடிப்பேன்
என் இப்படியான இரவுகளைப் போலில்லை இவனின் இந்த பகல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேண்டியதெல்லாம் சம்பாதித்தவன்
இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன் ஒரு இடைத்தரகரை
இவனிடமிருந்து தூக்கம் வாங்க முடியுமாவென

- லதாமகன்

 

Pin It