'வாழ்க்கை'ப்பட்டு வந்த..
Dead caveஎல்லோருக்கும் போலத்தான்
எனக்கும் வழங்கப்பட்டது
ஏதேன் சீதனம்.

கதறியழுதவர் தம்மின்
கண்ணீரினூடே தெரிந்தன
இருப்பின் நியாயமும்..
இறப்பின் அநியாயமும்.

என்றாலும்...
இம்'மை' அநியாயம்
மறு'மை'க்கு நியாயமோ..?

இமைக்க மறந்த ஒரு கணத்தில்
இன்னொரு(வர்) தோளுக்கு
இறங்கிப்போயிருந்தன
சுமைகளும்; சொந்தங்களும்
சொல்லிக்கொள்ளாமலேயே..

ஆள் மாற்றி, தோள் மாற்றி
அனுப்பி வைத்தனர்
'நிலையத்'துக்கு.

எண்ணங்கள்;
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல்
சமாதி வழிப்பயணம்.

வழியனுப்ப வந்தவர்களில்
கனவுக் குமரிகளைத்தான் காணோம்
அடைந்து விட்டவை
சாதனைத் திருமதிகளாய்..
அடையாதவைகளோ
ஏக்கக் கன்னிகளாய்..

குடும்பங்கள்-பொறுப்புக்கள்
கூட்டாளிகள்-தொழில்கள்
கடமைகள் உடமைகள் எல்லாமே
கழற்றி விடப்பட்டிருந்த
கால் செருப்புக்களோடு!

தன் தேகக்கூடு தவிர
தெரிந்துவைத்திராத ஆன்மா
நன்மை தீமைகளின்
நீதிநிலை அறிக்கையை
வழியெங்கிலும்
யோசித்தப்படி..

ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க..
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது
நாளை நிரப்பப்படுமோ?....!

(குறிப்பு: ஏதேன் என்பது அந்த ஆதி சுவர்க்கத் தோட்டம் தான்- பைபிள் மரபில் ஈடன் என்பது தமிழில் ஏதேன் ஆனது.)


இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It