Peopleவருடங்கள் சிலவற்றுக்குப்பின்
ஊருக்குப் போயிருந்தேன்.

பெண்ணாகிவிடும் பேராசையில்
அறுவை சிகிச்சை எதற்கும்
ஆயத்தமாகவே இருக்கும்
ஆணுமல்லாததைப் போலிருந்தது அது.

கடைவீதிகளின் காரணப்பெயர்
கீழே வீழ்ந்திருக்க
வீதிகளெங்கும்
விளைந்திருந்தன கடைகள்.
வியாபாரமும் பரவாயில்லை!
கலப்படங்களைப் போலவே
'களை' கட்டியிருக்கிறதாம்

புழுதி பறந்த செம்மண் சாலைகளில்
தார் ஊற்றப்பட்டிருந்தது.

இயற்கைத்தரையில்
ஆடப்பட்ட பால்ய விளையாட்டுக்களை
இன்னமும் நவீனமாக
செயற்கைத்திரையில்
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
கண்ணாடி அணிந்த
இன்றையச் சிறுவர்கள்.

'பள்ளிக்கூடம் மட்டும் இப்போ
பத்து இருக்கு-ஊருல.
பத்தாது - இன்னும் வேணும்
பசங்களும் படிக்கிறாங்க நல்லா..'

'வேலைப்பிச்சை கேட்கவோ...?
வேலைப்பிச்சை போக்கவோ...?'

'எல்லா கிராமங்களுக்குள்ளும்
நுழைந்து வந்து விடுகின்றன
எங்கள் அரசுப் பேருந்துகள்'

'ஜனங்களின் அன்னியோன்னியங்கள்
உடைந்துப்போய்
அந்நியங்களாகவும்
அந்நியங்களாகவுமே பார்க்கிறார்கள்
சக மனிதங்களை'

பழைய சில முகங்களைத்
துழாவும் கண்களை
பராக்கு பார்க்கின்றன
புதிய சில முகங்கள்.

இன்னும் மாறாமலே இருப்பது
இந்த மின்சாரம் தானாம்.
அது பெறும் மின் அழுத்தத்திலும்
அது தரும் மன அழுத்தத்திலும்.

'எப்போ வரும்?'

'எப்போ வருமுன்னு தெரியாது'
எப்போ போகுமுன்னு தெரியும்

சரியா வெளக்கு வெக்கிற நேரத்துல போயிடும்'

இப்போதெல்லாம் மின்சாரத்தை
அதிகம் சபிப்பது
இளம் பெண்கள் தானாம்
தொலைக்காட்சித் தொடர்களுடன்
அவர்களுடைய நெருக்கம் அப்படி.

ஆயிரம் தான் சொன்னாலும்
திரும்பவும் புறப்படும் சமயம்
மனம் சொன்னது:
'தங்கி விடலாமே..'

அறிவு சொன்னது:
'வாழ்க்கை என்பது
தங்கிவிடுதல் அல்ல..'


பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It