Goatகண்டபடி அடிக்காதடா!
கருப்பண்ன சாமிக்கு
நேர்ந்து விட்டது
என்பாள் பாட்டி

அடுத்த ஆடு
அரைவயிறாய் கிடக்க,
கிடாவுக்கு மட்டும்
இருமடங்காய் தருவாள்
அம்மா

அடுத்த மாசமாவது
கல்யாணம் கைக்கூடணும்
அக்காவுக்கு
சன்மானம் சாமிக்கு

பண்டிகை வந்தது
மேனிக்குப் பொட்டு
கொம்புக்கு காவி
கழுத்துக்கு மாலை
நம்ம கிடாவுக்கு
ஈடில்லை இவ்வூரில் என
சுற்றிப் போட்டாள் அம்மா

களத்தில்
மாலையோடு கிடாவும்
அரிவாளோடு பூசாரியும்
தீர்த்தமிட்டு தலையசைத்தால்
வெட்டிவிடலாம் என்றார்

தூங்காத கிடா
தலை அசைப்பதாயில்லை
சாமிக்கு வைத்தீர்
குறையென்றார்
தாங்காத குளிருக்கு
தலையசைக்க
ஆத்தா தந்தாள்
அருள் என்றார்

அடுத்த நொடி
உடலும் தலையும்
இருவேறு துருவங்களில்

பண்டிகைகளில்
பலி - கிடாய்கள்
திருமணங்களில் - பெண்கள்


கதிர்மொழி
Pin It