Rain floodமூர்க்கமழை
திமிறியாடும் வெள்ளம்
நீர்ப்பண்டமாய் கரைகிறது ஊரே
வீதி நிர்த்தூளியானாலென்ன
வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிடக்கூடாது

ஊருக்கு வந்தும் ஊருக்குள் வராத
புறவழிச்சாலை பேருந்துபோல
எங்கும் தங்காமல்
கண்காணா வெளியோடி
வெள்ளக்காடு வடிந்தபின்
சேறும் சகதியுமாய்
நிலைதளம்பிக் கிடக்கிறது திடநிலம்

தெருவில் இறங்கமுடியாது யாரும்
அதனாலென்ன
வீட்டோரம் ஒதுங்கியிருக்கும்
பிணமொன்றை நடைப்பாலமாக்கி
ஏறிக் கடந்து இலக்கை
அடைவதில் இருக்கிறது
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிற்குள்
உன்னைப் பொருத்திக்கொள்ளும் சாதுர்யம்.


ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It