Clockசின்னதாய், பெரியதாய் வட்டமாய்
சதுரமாய், நீள்வட்டமாய் மனிதர்..
முகம் போல வெவ்வேறு வடிவமாய்
காலநேரம் காட்டும் கடிகாரங்கள்..

பேசத்தெரிந்த, பாடத் தெரிந்த, டிக்டிக்
ஓசையில் இதயமொழி கூறும், எண்
பத்து வலது கண்ணாக, எண் இரண்டு
இடது கண்ணாக தோன்றுமுகத்தில்

பன்னிரெண்டு ஆகும் நெற்றிபொட்டாய்
முள்ளால் சிரிக்கும், முகமும் சுளிக்கும்
காய்நறுக்கி உலைவைத்து அலுவலகம்
கிளம்பும் இல்லத்தரசி போல் விடாது

ஓடும் வினாடி முள், சுட்டிப்பிள்ளையாய்
ஓரிடத்தில் நிற்காமல் நிமிடத்துக்கு
இடம் மாறும் பெரியமுள், குடும்பத்தில்
இருந்த இடத்திலே எல்லா கடமையும்

ஏற்று நடத்தும் தலைவனாய், சின்னமுள்
என கடிகாரத்திலொரு குடும்பமே தெரிகிறது
ஒரே வீட்டில் மூன்று தனித்தனி உலகமாய்
ஒவ்வொரு முள்ளுக்கும் தனித்தனி குணம்

மகளை முத்தமிடும் தந்தையாய், சின்னமுள்
நகரும் சிலநேரம் பெரியமுள்ளை தொட்டு
ஒரு ஊரிலுள்ள மருத்துவர் நோயாளிக்கு
வரு(ம்)வியாதி கண்டறிவதில் மாறுபடுவதாய்

ஒரு வீட்டிலுள்ள வெவ்வேறு கடிகாரங்கள்
ஒருபொழுதும் ஒரேநேரம் காட்டுவதில்லை
பழம்பெரும் ரோமானிய எண் கடிகாரங்கள்
பதினொன்றா, ஒன்பதா என அறிவுகுழப்பம்

கொடுத்தும், முள்ளிருந்தும் குத்தாத பூவாய்
காற்றில் கொளுத்தி வைத்த கற்பூரமாய்
கண்ணுக்குத் தெரியாமல் நேரம் மறையும்
மின்னணு டிஜிட்டல் கடிகாரத்தில் அது

குழாயில் வழிந்தோடும் நீராய் கண்முன்
கொட்டிடும், எண்ணிடை இருபுள்ளிகள்
சிமிட்டும் மௌன ஓசை கண்களுக்கு
பேரிரைச்சலாய் ஓங்கியது ஒலிக்கும்

பேரழகு சேர்க்கும் மணிக்கூண்டாய்
பார்த்து ரசித்தது நேற்றைய கடிகாரம்
இன்றைய கடிகாரத்தின் எண்தோற்றம்
இதன் வடிவத்தால் மணிக்குண்டாய்

வெடித்து சிதறி விடுமோ என அச்சம்
விளையும் மனதில், ஓட்டம் முடிந்ததாய்
முள்நகராமல் நின்றுபோன கடிகாரம்,
மூச்சு நின்றுபோன மனிதனாய் காணும்!

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It