சின்ன வயதிலே நானும்..
என் அருமை தந்தையும்..
அன்பில் மகிழ்ந்திருக்க..
அகவை வளர்ந்திருக்க..

புதியதாய் ஒரு மாற்றம்..
உதித்தது எங்களிடம்..
நான் நினைத்த அளவுக்கு..
நல்லவர்.. அவரும் அல்ல..

அவர் நினைத்த அளவுக்கு..
அப்பாவி.. நானும் அல்ல..
என காலம் அவர் முகத்தில்..
எழுதியது சுருக்கெழுத்தில்..

என் முகத்திலோ கரும்புள்ளி..
தன்னால் தோன்றி.. தாடியாய்..
மீசையாய் வளர, அப்பா மகன்..
ஆசைப் பேச்சும் தேய, உடன்..

சொந்த வீட்டிலேயே நாங்களும்..
சொல்லாமல் அன்னியர் ஆனோம்..
அளவளாவ மறந்தோம், ஒரேடியாய்
அளந்து பேசினோம், ஒட்டாததாய்..

வாழ்க்கையெனும் வட்டப்பாதையின்..
வாசல் கதவில்.. "உள்ளே" என்ற..
அம்புக்குறி பார்த்து ஆர்வத்தில்..
தெம்புடன் நான் நுழைய, எதிரில்..

உடல் தளர்ந்து ஆவி ஒடுங்கிட..
நடந்து மெல்ல என்னை கடந்து..
சென்றார் என் தந்தை, "வெளியே"..
என்றிருந்தது அதே வாசல் கதவில்

திரும்பிப் பார்த்ததால் திசை மாறி..
திருந்திய மனிதனாய் நான் அடுத்த..
அடியை யோசித்து வைக்க,என்னை..
அப்படியே தள்ளி விட்டு ஓடினான்..

ஒருவன்.. யாரிவன் கொஞ்சம் கூட..
மரியாதை இல்லாமல் என்ற எனது..
சொல்லுக்கு,நம் மகன் தான் என்ற..
பதில் வந்தது மனைவியிடமிருந்து..

உன்னை பின்பற்றி வீணாய் போக..
நான் என்ன மடையனா என்றபடி..
என் மகன் தன் பாதையில் விரைய..
என்னுள் புரிதலின் நிம்மதி நிறைய..

நான் யார் என் தந்தையா, மகனா..
என்ற எண்ணம் ஆனது,என் கனா..!

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It