Indian wifeதுவைத்த துணியில் ஒரே ஒரு நாள்
திட்டாய்க் கொஞ்சம் அழுக்கு இருந்தால்
எடுத்து வீசி எரிந்து விழுந்து
எரிப்பேன் உன்னை அக்கினிப் பார்வையால்.

தினம் தினம் சிறப்பாய்ச் சமைத்து
என்றோ ஒரு நாள் உப்பின் அளவு
வித்தியாசப் பட்டிருந்தால்
காட்டுக் கூச்சல் போட்டுக் கத்துவேன் நான்.

சமையலறையில் ஏதோ காரணத்தால்
தவறி விழும் பாத்திரச் சத்தத்தில்
தவமே உன்னால் களைந்து போனதாய்
தாவிக் குதிப்பேன் வானத்துக்கும் பூமிக்கும்.

உடம்புக்கு எனக்கு உபாதை வருகையில்
வைத்தியர் மருந்தை வகைப் படுத்திக் கொடுப்பாய்.
ஒரு வேளை பிசகினால் உன்னைக் குறை சொல்லி
வரைமுறையில்லா வார்த்தையால் வதைப்பேன்.

இத்துணூண்டு உன் தவறு எனக்கு
இமயமாய்க் காட்சி தரும்.
உன்னை மட்டும் அல்லாமல் உன்
வம்சாவழியையே வம்புக்கு இழுப்பேன்.

குடும்பக் கவலைகளை மறக்கத்தான் என்று
குடித்துத் திரிந்து வீதியில் புரண்டு
குடும்பத்தையே தள்ளுவேன் கவலையில்.
இதற்கும் காரணம் நீதான் என்பேன் நாக் கூசாமல்.

இத்தனைக்கும் நீ எதுவும் சொன்னதில்லை
எதிர்த்து நின்று மருத்துப் பேசியதுமில்லை.
உன்னாலிவைகள் ஊர் காதுக்கு ஒரு நாளும் போகாது.
என்னால் மட்டுமே எல்லாம் ஒலிபரப்பாகும்.

'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்',
'பெண் என்றால் பொறுமை' என்று
ஊரார்கள் உனக்குத்தான் உபதேசம் செய்வார்கள்!
யாரும் எனக்கு எதுவும் சொல்வதில்லை! 

சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It