கபில மலையில்
உதிர்ந்த கற்கள்
மாஸ்கோ வீதிகளில்
உருண்டோடியது
கூழாங்கற்களாக
மார்க்ஸ்க்குப் பிடித்த ஒன்றை
மறுபடியும் எடுத்து
உறங்கியபோது
கல்லறையில் சிக்கி
கடினத்தைக் கொடுத்தது.
தேவாலயக் கதவுகள் திறந்து
விடிவெள்ளியைத் தேடிய பொழுது
சிறகசைத்து பறவைகள்
வானில் மறைந்தது.
எப்பொழுதும் போல
இரு வேறு கருத்துக்களின்
அனலில் சிக்காத உலகம்
அதன் போக்கில் போனது.
கபில மலையில் பெய்த மழை
காவிரியில் கரை புரண்டு ஓட
மூலதனக் காகிதத்தில் செய்த
கப்பலை மூழ்காமல் விட
முயற்சிக்கும் சிறார்களை
வண்ணத்துப் பூச்சிகள்
அழைத்த வண்ணம் இருந்தது.
வசந்தமாக வாழ்க்கை மாறி
தோழமை கொள்ள
சூரியனும் சந்திரனும்
சுயாதீனமாக சுற்றுவதாக
நம்பிய மனம்
பூமியை மறந்து
புலம்பித் தவிக்கிறது.
- ரவி அல்லது