கீற்றில் தேட...

0
காலப் பாதையின் பயணத்தில்
தெரிகின்றன பாதத்தின் சுவடுகள்.
ஒவ்வொன்றிலும் பொருத்திப் பார்க்கிறேன்.
சிறியவை நெருக்கி அணிய
புண்ணாக்கி விடுகின்றன.
பெரியவை பாதங்களை ஒட்டாமல் கழண்டு ஓடுகின்றன.
அகண்ட பாதங்கள் அலைகழித்தன.
அளவில் சரியானவைகளில்
மனம் ஒப்பவில்லை.
எதுவும் பொருத்தமில்லை பொருந்தவுமில்லை.

0.
சுவடுகளின் பாதங்கள் குறித்த தேடல் நீள
யுகங்கள் கழிந்துக் கொண்டிருந்தன.
கலைப்புற்ற கால்கள்
சுமைதாங்கியின் மீதமர்ந்தது.
நீண்டு கிடந்த சுவடுகளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
பொருந்தாத ஒன்று மட்டும்
பார்த்து சிரித்தது.

0
இப்போது
எந்த சுவடின் மீதும்
பாதத்தைப் பொருத்திப் பார்க்கவில்லை
தனித்து நடக்கிறேன்
சரளைக் கற்களென இடறுகின்றன.
ஏளனச் சிரிப்புகள்
சிராய்ப்புகளாய்ச் சிவந்திருக்க
உதிர்கின்றன சொற்கள்.
கல்சொற்கள் குத்துகின்றன.
சுடுசொற்களின் சூடுதாளாது
கொப்புளம் கொப்புளமாய் வீங்கியிருக்க
கிளருகின்றன கடுஞ்சொற்கள்
அவச்சொற்கள் மானத்தை
தின்று செரிக்கின்றன.
பெருகி உருளும் உதிர்ச்சொற்கள்
பீதியை நிரப்ப
செவிகளுக்குத் திரையிட்டு
கண்களுக்குக் கடிவாளமிட
சுவடுகளைப் பதித்தபடி தொடர்கிறது
தனிவழிப் பயணம் .

2.ரெட்டை வால்

வறண்ட வானிலை நிலவ வெக்கையடிக்கிறது
எல்லாப் பக்கமும் புழுக்கம்
நிழலைத் தேடுகிறேன்
வெயிலில் நிழலைத் தேடுவதும்
கடுங்குளிரில் வெப்பத்தை தேடுதலும்
எல்லோர்க்கும் தொடர்கதை
தொலைந்த பொருளை தேடுதலும்
புதியனவற்றை தேடுதலும்
அதன் வகைமை
கிளையில் கூடுகட்டும் குருவிக்கு
ரெட்டை வால் இருந்தது
அதில் ஒன்று வெள்ளை
மற்றொன்று கருமை
வண்ணங்கள் யாவும்
நிறப்பிரிகை செய்யும் மாயம்
"தேடித்தேடி கண்ட பொருள்
வாழ்வில் தொலைவதில்லை"
தொலைவில் ஒலித்துக் கொண்டிருக்கும்
பாடலின் வரிகள்
நொடிகளை நகர்த்தி ஆடுகிறது.

3.மென் கோடுகள்

பிரபஞ்ச வெளியில் உருவாகும்
எவ்வுயிரும்
தனக்கென்ற எல்லைகளை
ஒருபோதும் வகுப்பதில்லை
திசைகளற்று பறக்கவும்
எல்லைகளற்று திரியவும்
இயல்பாய் தெரிந்திருந்தன.
மனித மூளையின்
நியூரானின் அதீத வளர்ச்சியே
மெல்லியக் கோடுகள் வரைந்து
நாடுகளை உருவாக்குகின்றன.
ஒன்றையொன்று சூரையாடவும்
வளங்களை சுரண்டவும்
காலம் காலமாக
புரிகின்றன பெரும் போர்களை.
அதிகாரங்கள் தன் இருப்புகளை
தக்க வைத்துகொள்ள
எய்துகின்றன ஏவுகணைகளை
வெடித்துச் சிதறும் அவைகள்
மானுடத்தை கருக்கி
புகை மூட்டமாய் மேலுழும்புகிறது.
போரின் இரத்த சகதியில் தப்பிக்க
வலசை பயணிகளை தத்தம்
நாடுகளுக்கு திரும்ப சொல்லி அழைக்கின்றன
விமான நிலையத்தில் பசியோடு
காத்திருக்கும்
எய்த தேசத்து சிட்டிசனுக்கு
ஏவுகணைகள் தின்ற தேசத்தின்
குழந்தையொன்று
ரொட்டித் துண்டுகளை
நீட்டிச் சிரித்து
அன்பில் மலர்த்துகிறது மானுடத்தை.

4. இரவின் கிண்ணத்தில்
புலியின் சாயல் கொண்ட பூனை
இரவின் கிண்ணத்தில்
வைத்த பாலை
மேல் மூடியைத் தள்ளிவிட்டு
நக்கிக் கொண்டிருக்கிறது.
அடர் மௌனத்தை
குலைத்து விடுகிறது
'சலக்' 'சலக்' என்ற சத்தம்
கம்பி சொறுகியது போல் இருக்கும்
உதட்டு ரோமங்களில்
ஒட்டியப் பாலை
நாவால் நக்கி விட்டு
மியாவ் மியாவ் என்கிற பூனை
காதுகள் உயர்த்தி
மின்னும் கண்களை
கூர்மையாக்கிப் பார்க்கிறது
தூரத்தில் பன்றி உறுமிக் கொண்டிருக்கிறது
அப்போதுதான்
ஏமாற்றியவனை நொந்து
வயிற்றில் பிள்ளையுடன்
சுருக்கிட்டுக் கொண்டிருந்தாள்

- விஜயபாரதி