கீற்றில் தேட...

வெறும் கோலத்தைத்
தரையில் போட்டு விட்டு
அழகு கோலமாய்
எழுந்து நிற்பவளிடம்
கேட்க வேண்டியது
அந்தக் கோலம் புள்ளியில்
இந்தக் கோலம் மச்சத்திலா

*

காற்றுக்கு
காற்றில் கசியும்
தூரத்துக்கு
நிலவுக்கு
நீல வான உழவுக்கு
நட்சத்திரங்களுக்கு
நல் ஒளி வீசும் அதன்
முத்துப் பற்களுக்கு
திறந்ததென்னவோ
ஒற்றை ஜன்னல்
கிடைப்பதென்னவோ
மேய்ச்சல் நிலம்

*
பூசாரிகளை
தொப்பையும் தோரணையுமாக
வைத்துக் கொள்ளும்
கடவுள்
பூக்காரிகளை
எலும்பும் தோலுமாகவே
வைத்திருக்கிறான்

*
உணவுக்கு முந்தியடிக்கும்
பூனைகள் தான்
ஒன்றின் மேல் ஒன்றாக
நெருக்கியடித்து
ஒட்டிக்கொண்டே தூங்குகின்றன

- கவிஜி