கீற்றில் தேட...

இன்றைக்கு வாய்த்தது
நல்ல வேடிக்கை காட்டும் முகம்.

பெரிய கோமாளியாகக் கடவது
என்று தினசரியில்
என் பெயருக்கு ராசிபலன்

பொய்யில்லை
யாரைப் பார்த்தாலும்
சிரித்து வைக்கத் தோன்றுகிறது

பசிக் கொடுமை
கூர்மையான பகடிகளைக் கூட
மனச் சேதம் அடைந்தவன் போல்
கடந்து போகச் சொல்கிறது

கோமாளிகளை தெரு நாய்களும்
விட்டு வைப்பதில்லை போலும்
ஒரு பூனை கூட
உன் பேச்சைக் கேட்காது

இன்று இரவு
சீக்கிரம் வந்தால்
பரவாயில்லை என்று தோன்றுகிறது

இந்த வேசத்தைக் கலைத்து விட்டு
சொந்த முகம் காணலாம்
மனதார இரண்டு சொட்டு
கண்ணீர் விடலாம்

எப்படியும் நாளை ஒரு
புத்தம் புதிய வேஷத்திற்கு
தயாராக வேண்டும்

எப்போதும் கெட்டதிலும்
ஒரு நன்மை உண்டு.
கோமாளியாக சபிக்கப்பட்டாலும்
அரசியல் கோமாளியாக
சபிக்கப்படவில்லை
என்பது தான் அது

- தங்கேஸ்