ஓடையே
கால்கள் அமிழ்த்து
காலம் வரையட்டும் ஓவியம்

*
பலூன் வயிற்றை நிறைத்து விட்டு
பசியோடு காத்திருக்கிறான்
பலூன்காரன்

*
மிகச் சிறிய கனவை
உருட்டுகின்ற கைகளில்
மிகப் பெரிய ராட்டினம்

*
ஒற்றை விரலால் அழித்து விடலாம்
மொத்த உறவையும்
வாட்ஸப்பில்

*
எங்கெங்கு காணினும்
ஒற்றைச் செருப்பு ஒரு முறை
உணர்வடிக்கும்

*
கடன் வாங்கி
கல்யாணம் செய்வதை விட
கவிதை வாங்கி காதல் செய்

*
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
திருமணம் தான்
கடனில் நடந்து கொண்டிருக்கிறது

*
காதலில் இருக்கிறதோ
வரிக்கு வரி கவிதை காட்டுகிறது
வரிக்குதிரை

*
நேரத்துக்கு வந்து விடும் குருவிக்கு
வாரத்துக்கு ஏழு நாள்
என்று தெரியுமா

*
கட்டி வைத்திருக்கும் ஆடும்
கூண்டில் குனிந்திருக்கும் கோழியும்
என்னவோ பேசிக் கொள்கின்றன

*
நெகிழிப் பையை உதற
பழகி விட்டிருக்கிறது மாடு
மனுஷன் ம்ஹும்

- கவிஜி

Pin It