ஒரு புள்ளியில்
ஆரம்பமாகும்போது
அழகாய்த்தான் இருக்கிறது
கையெழுத்தும், தலையெழுத்தும்...

புள்ளியைத் தாண்டி
வளரும் போதே
தெரிந்து விடுகிறது
அதனதன் அழகு....

புள்ளியில் ஆரம்பித்து
கிறுக்கலாய் வரும்போதே
கட்டுக்குள் கொண்டு வந்து
முத்தான சொத்தாக
அழகாய் மாற்றியாயிற்று
என் கையெழுத்தை....

பிறந்ததும் என்னுடன்
புள்ளியில் ஆரம்பமாகி
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
இலக்கேதுமின்றி எய்திட்ட
அம்பினைப்போல
நான் வளர வளர்ந்து......

குறிக்கோளின்றி
கோணல் மாணலாகி
இடியாப்பச் சிக்கலான
வாழ்க்கையை சீர்படுத்த
தலையெழுத்து எனும் பெயரிட்டு
தப்பிக்கும் வழி தேடி
முயற்சித்து முயற்சித்து
தோல்வி அடைகிறேன்
வாழ்நாள் முழுவதும்....!

- க.தமிழ் அரசன்

Pin It