குளித்து விட நீ பிடித்த அடம்
கோடை மனதுக்குள்
குற்றாலத் தடம்

மெய்மறந்து கிடக்கையில்
மேனிக்கு நிகர் மேனி
முழங்கால் படுகையில்
மேனிக்கு மேனி சுகர்

முத்தமிட்ட இடமெல்லாம்
பறித்துத் தந்தாய்
முத்தமிட்ட எனதெல்லாம்
பறித்துக் கொண்டாய்

ரகசியம் என்பது யாதெனில்
நிறைய நீ
கொஞ்சம் நான்
மாற்றியும் சொல்லலாம்

நெற்றி முட்டியபோது
நேர்பட மூக்கு முட்டிக்
கொண்டபோது
உயிர் முட்டிய போதுங்கூட
அப்படியில்லை
வயிறு முட்டியபோது
அப்படியிருந்தது

சத்தமிட்டு தான்
முத்தமிடத் தெரியும் உனக்கு
சத்தமிடவும் முத்தமிடத்தான்
தெரியும் உனக்கு

வெட்கமின்றி இருக்கையில்
கவனித்தேன்
உனக்கு றெக்கை இருந்தது
மெத்தை மேல் பறக்கையில்
கவனித்தேன்
உனக்குள் வித்தை இருந்தது

ஆற அமர கண்ட கனவு இது
ஆளுயரக் கட்டிலில்
செங்குத்து காட்சிப்பிழை
வேறு வழியின்றி ஜன்னல்
அடைத்தேன்
வெளியே செங்காத்து காட்சி மழை..!

- கவிஜி

Pin It