பாசிஸப் பாம்புக்குப் பாலினை வார்த்ததேன்
பாரத வக்காளரே!- அதற்கு
ஆசி வழங்கிடும் ஆர்எஸ்எஸ் பூதத்தின்
ஆட்டம் தொடர்ந்திடுமே!- இனிப்
பேசிச் சிரிக்கவும் அஞ்சி நடுங்கிடப்
போவது நம்மினமே- நீ
காசிக்குப் போனாலும் கர்மம் தொலையுமோ
கஷ்டப் படுபவரே!

நாட்டாண்மை பண்ணும் அதிகாரம் தன்னை
நரிக்குக் கொடுத்துவிட்டோம்- அது
பாட்டாளி யைக்கிடை ஆடு களைப்போல்
புசிக்க அனுமதித்தோம்- நமது
ஓட்டாலே காவிக்கு நாட்டினை ஆளும்
உரிமை அளித்துவிட்டோம்- நம்மை
ஜோட்டாலே காலம் அடித்திடப் போவது
சத்தியம் என்றுகண்டோம்

சிம்மா சனங்களில் உட்கார்ந்து கொண்டது
சந்நியாசிக் கூட்டமொன்று- அது
வம்பாக இங்கு மதவெறி யைத்தூண்டி
மக்களைக் கொல்கிறது- காவிக்குக்
கும்பாபி ஷேகங்கள் செய்து முடிக்குது
கார்பரேட் கம்பெனிகள்- தமக்கு
சம்பாதிக் கும்வழி செய்து கொடுக்கிற
சர்க்காரை வேண்டியின்று

தண்டலை ஒன்றிலே பூத்திடும் பூக்களில்
தாமரைப் பூவுமொன்று- பல
வண்ணங் களில்வேறு பூக்களும் அவ்விடம்
மண்டிக் கிடப்பதுண்டு- நம்
கண்ணைப் பறித்திடும் முத்து மணிகளில்
கொள்ளை நிறங்களுண்டு- புட்களின்
பண்ணிசை யில்எந்த ஒற்று மையுமில்லை
போதை அதிகமுண்டு

வேதத்தில் உள்ளது வேதியர் அந்நாளில்
மாமிசம் தின்றகதை- தயிர்
சாதத்தை இன்றவர் உண்பது மேயொரு
சூதென்று நாமறிவோம்- வர்ண
பேதத்தை உண்டாக்கி சூத்திரர் வாழ்வினைப்
பாழ்பட வைத்தகதை- நம்
பாதத்தில் சிக்கி மிதியுண்டு செத்திடப்
போவது நிச்சயமே!

- மனோந்திரா

Pin It