கொன்றொழிக்க ஏதுவாய்தான்
அமர்ந்திருக்கிறேன்
குத்தி குடல் வாங்கி குழம்பு செய்வது
உங்கள் வசதி

காணுமந்த எல்லாமும்
எங்கிருந்தோ என் கண்களையே
கொள்வது எனக்குத் தெரியாது

உம்மொழி பிசகுதல் பற்றிய
துளி சொப்பனங்களைக்கூட
நான் கண்டதில்லை

மிதமிஞ்சிய குறியீடுகளுடன்
நடந்து திரியும் எனக்கு
கீழாடை இல்லை

முகமூடி இழுத்துப் பார்த்தல்
விரல்களின் அபத்தம்
தகவமைந்த தர்க்கத்தில்
ஆயிரம் கால்கள்
எனக்கமைந்தது இயற்கை

இம்மட்டும் எழும் சுகமென
எம் மட்டும் எது அகமென தூவும்
தூரலுக்கு நானே கண்கள்
எட்டிப் பார்க்கும் குடை கொண்ட
குளிர்கால வறட்சி நீங்கள்

இல்லாமலே இருக்கும்
எல்லாமுமாக எதுவரைக்கும்
இந்த ஒளி பிளவென
தரிசிக்கையில் காலம் கும்பிடும்
கைக்குள் ஈ என இருக்கிறது
எனதெல்லாம்

யுத்தம் பெரிதென நம்பி கதவடைக்கும்
உங்களிடம் கேட்பது
ஒன்றே ஒன்று தான்

கொன்று விடுங்கள்
இல்லையேல் கொன்றே விடுவேன்...!

- கவிஜி

Pin It