பூமியை கனச் செவ்வகமாக துளைத்து
தாத்தா வெட்டியதுதான்
தோட்டத்து கிணறு
மூன்று ஆள் ஆழக் கிணற்றில்
எப்போதும் இரண்டு ஆள் ஆழத்திற்கு
தண்ணீர் பெருகி நிற்கும்
மின் இறவைகள் காலத்திற்கு முன்பு
தாத்தா கமலை இறைத்ததே
இந்நூற்றாண்டில் நான் பார்த்த
ஆகச் சிறந்த உற்சவம்
கப்பி உருளை வழியே
கிணற்றினுள் இறங்கும் கூனை
வாலுருளிக் கயிறு நெகிழ
வாலப்பையின் வழியே
ஒரு குட்டி யானை போல
கூனை தண்ணீர் பருகும் காட்சியை
கிணற்றுச் சுவரில் அமர்ந்து பார்ப்போம்
கவற்றுமடியில் அமர்ந்து
மேக்காலில் பூட்டிய மாடுகளை
தாத்தா விரட்டுகையில்
கூனை மேலே வந்து தண்ணீர் கொட்டும்
கமலைக்கல்லில் அமர்ந்து
குளிர்ந்த கிணற்று நீரில் விளையாடுவோம்
நாள் முழுதும் இரவை இறைக்கும் தாத்தா
சட்டை அணிய மாட்டார்
அவர் உடல் முழுவதும்
சூரியன் கறுத்து அப்பிக்கிடக்கும்
கலியாணம் முடிஞ்ச அன்னிக்கு
கழட்டின சட்டை என்று அப்பாம்மை
கேலி செய்வாள்
பருத்திச் செடிகளின்
தூர்களனைத்தையும் நனைக்காமல்
வடக் கயிற்றை விட்டு இறங்க மாட்டார் அய்யா
கமலை மாடுகளை அப்படிப் பேணுவார்
புண்ணாக்கும் தவிடும் திகட்டத் திகட்டத் தருவார்
இளைத்து விடும் என்றெண்ணி
இன விருத்திக்கு அனுப்ப மாட்டார்
அய்யா காலத்திற்குப் பிறகு
மின் இறவையும்
கடைசியில் நீர் மூழ்கியும் வந்து விட்டது
இப்போதெல்லாம் கிணற்றை யாருமே எட்டிப் பார்ப்பதில்லை
கமலைத் தடத்தில் பொன்னரளி மரங்கள் மண்டி விட்டன
தோட்டத்தில் வீடுகள் முளைத்து விட்டன
அய்யாவின் கூனை
பழைய வீட்டு மச்சியில்
உடைந்த விளையாட்டுப் பொருட்களை
சுமந்தபடி கிடக்கிறது
நீர் மட்டம் பார்க்க
எப்போதாவது கிணற்றை எட்டிப் பார்த்தால்
அய்யாவின் முகம்தான் தெரியும்
----------------------------------------------------------------------------------------------- 

 

இருளின் அணைப்பில்
கவலைகளற்று
பூமி நிம்மதியாய்
சுழன்று கொண்டிருந்தது
வேத கோவில் மணி
ஐந்து அடித்து ஓய்ந்தது
திடுக்கிட்டு எழுந்தான் அவன்
மருதாணி வைத்த கையோடு
மூத்தவள் தூங்கிக் கொண்டிருந்தாள்
விரலை சூப்பியபடியே
சின்னவன் துயில் கொண்டிருந்தான்
நேர்முகத் தேர்வு நடைபெறும் ஓட்டலில்
காலை ஏழு மணிக்கெல்லாம்
இருக்க வேண்டும்
கடுங்காப்பி போட்டுத் தரவா
என்றவளிடம்
சாயா குடிச்சுக்கிடுதேன்
என்று பதிலுரைத்தவன்
முகத்தை அலம்பி விட்டு
விறு விறுவென்று கிளம்பினான்
அவனும் என்ன செய்வான் ?
பத்து நிமிடம் ஓடும் பம்பு செட்டையும்
கிணற்றையும் வைத்துக் கொண்டு
பருவ மழையிடம் சூதாடி சூதாடித் தோற்கிறான்
மூன்று வருடங்களாய் மழை இல்லை
பயிரிட்ட கத்தரியும் பாழ்
கிணறு வெட்ட தாலித்தங்கம் கூட இல்லை
இருள் வழிவிட்டு விலகத் தொடங்கியது
தோட்டத்தைக் கடந்த போது
அவனை அடையாளம் கண்டு சிரித்த
ஊதா நிற கத்தரிப் பூக்களை
திரும்பிப் பார்க்க மனமின்றிக் கடந்தவன்
மாறாந்தை விலக்கை அடைந்து
திருநெல்வேலி செல்லும் முதல் பஸ்ஸில்
இருக்கையைப் பிடித்து அமர்ந்தான்
இனி ஏதாவது
ஒரு ஏடிஎம் வாசலில்
சீருடை அணிந்த காவலாளியாய்
அவனை நீங்கள் காணலாம்


--------------------------------------------------
குறைந்த எலும்பு
அதிக நெஞ்சுக்கறியுடன்
இறைச்சி வாங்கி வரத் தெரியாது
கிழிந்த ரூபாய் நோட்டை
கண்களில் ஒளியிழந்த
கீரை விற்கும் முதியவரிடம்
தள்ளி விடத் தெரியாது
கையூட்டை தவிர்த்து விடுகிறேன்
கையளிக்கப் படும் மதுப்புட்டிகளை
மறுதலித்து விடுகிறேன்
நுரையீரலால் புகையிலையை
வாசிப்பதும் இல்லை
மளிகைக் கடைக்காரர்
மீதி தருகையில்
கூடுதலாக பெற்று விட்ட
இருபது ரூபாய் நோட்டை
திருப்பிக் கொடுத்து விடுகிறேன்
சின்னக் குழந்தைகள்
பாவம் போல இரவில்
தூங்குவதைப் பார்த்து அழுகிறேன்
சமயத்தில்
பிட்டுக்கு மண் சுமந்து அடி வாங்கிய
கடவுளுக்கும் கூட இரங்குகிறேன்
என்ன வாழ்ந்து
கிழித்து விடப் போகிறேன் நான் ?


--------------------------------------------------------------
மைக் செட்டுகளின் காலம்
----------------------------------------------
பூவரசம் பூ பூத்தாச்சு பாடல் ஒலித்தால்
மங்கையோ மடந்தையோ
வயதுக்கு வந்து விட்டாள் என்று பொருள்
தாயாரம்மா தாயாரு பாடல் என்றால்
துட்டி வீடு
புருஷன் வீட்டில் வாழப் போகும் பாடலென்றால்
மண வீடு
சுதா ஆடியோசுக்கும்
கண்ணன் சவுண்ட் சர்வீசுக்கும்தான்
எப்போதும் போட்டி
அம்மன் கோவில் திருவிழா
சுதாவுக்கு என்றால்
அய்யனார் கோவில் திருவிழா கண்ணனுக்கு
இருவருக்குமே ஊரில்
தனித்தனி ரசிகர் பட்டாளம்
இரு மைக் செட்டுகளின் பராக்கிரமங்களை
டீக்கடைகளில் அமர்ந்து கொண்டு
இளைஞர்கள் காரசாரமாக விவாதிப்பதுண்டு
சமயத்தில் சண்டைகள் கூட வரும்
பெரிய ஆலமரம் முழுவதும்
சீரியல் விளக்குகள் கோர்த்து
இரவு வானத்தை
தரைக்கு கொண்டு வந்து விடுவாள் சுதா
பனை மர உயர அம்மன் கட் அவுட் வைத்து
பூமியை வானத்துக்கு கொண்டு போவான் கண்ணன்
தண்ணீர் தொட்டி உச்சியில் கட்டப்பட்ட
கூம்புக் குழாய்கள் எழுப்பும் சங்கநாதம்
அலை அலையாய்
சுற்றுக் கிராமங்களில் பரவும்
மைக் செட்டுகள் உபயத்தால்
திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனங்கள்
எல்லோருக்கும் மனப் பாடம்
விழாவுக்கு செல்ல ஏலா முதியவர்கள்
வீட்டிலிருந்தே முளைப்பாரி பாடல் கேட்பர்
கடைசியாக குழல் ஒலிக்கும் போது
திருவிழா முடிந்திருக்கும்
கூம்புக் குழாய்களை அவிழ்ப்பதை நினைத்து
சிறுவர்கள் துயர் கொள்வர்
வார்த்தைகளில் விவரிக்க முடியாத
அமைதியொன்று ஊரைப் பற்றிக் கொள்ளும்
அது ஒரு காலம்
பென் டிரைவ் காலத்துப் பிள்ளைகள் அறியாத
மைக் செட்டுகளின் காலம்


------------------------------------------------------------------------------
அம்மாவின் சனிக்கிழமை
--------------------------------------------
குழந்தைகளை விட
பீடித் தட்டைதான்
அதிகம் மடியில் வைத்திருப்பாள் செல்லத்தாய்
பீடி சுற்றும் அம்மாவால்தான்
வாழ்க்கைச் சக்கரம் ஓடியது
கணக்கு முடித்து
சனிக்கிழமை தோறும் சம்பளம் வாங்கி வரும்
அம்மையை எதிர்பார்த்து காத்திருக்கும் பிள்ளைகள்
அம்மாவின் சனிக்கிழமைகள் எல்லாம்
அப்பிள்ளைகளுக்கு தீபாவளி
அம்மையின் வாரச் சம்பளத்தில்தான்
மளிகை கடை பாக்கி அடையும்
மூத்தவளின் நகைச் சீட்டு அடையும்
இளையவளுக்கு பாசி வளையலும்
கடைக்குட்டி மகனின் பத்து விரல்களுக்கு
அப்பளப் பூவும் கிடைக்கும்
கிணற்றுப் பாசனத்தில் நடவு செய்ய
அப்பா காய்கனி விதை வாங்குவார்
டூரிங் கொட்டகையில்
இரவு முதல் காட்சி பார்க்க அழைத்து செல்லும் அம்மை
பிள்ளைகளுக்கு சொர்க்கத்தை காட்டுகிறாள்
இரவு வழக்கம் போல
காச நோய்க்கு மருந்து வாங்க காசின்றி
இருமலை வாய்க்குள் புதைத்தபடி
தூங்கத் தொடங்குகிறாள் செல்லத்தாய்

Pin It