வனாந்திரத்தின் பாழ்வெளிகளாய்
விட்டு விட்டு துடிக்கும்
அடர் காற்றுக்குள் முதலாம்
சாமம் முந்திக் கொண்டது!
மெல்ல உரசும் கணத்திற்குள்
தொட்டுச் சொல்லும் தூரத்தில்
கட்டுக்காவலுக்குள் அடங்கும்
தவிப்புகள் கணமாகிறது!
'பட்' டென தட்டிச் செல்லும் யுக்திகளில்
பட்டாம்பூச்சி பதைபதைத்ததில்
ஆச்சர்யம் ஏதும் இல்லை!
பிசிறின்றி எரியும் நாழிகைக்குள்
விண்மீன்கள் இமைப்பொழுதும்
இமைக்காது உடனாடும்
தந்திரம்!
வழி தொலைந்த பாதைக்குள்
மாயங்கள் தூறும்
தொலைவின் ஏக வரலாறு!
இரவாகும் பின்பு பகலுமாகும்
யுகாந்த நிலையின் இம்சைக்குள்
முழுசித்திரம் பொத்தலாகி
நிற்பதில் நிறைவடைகிறது
அடங்க மறுக்கும் காட்சிக்கொண்ட
கானகத்தின் பெரும் தாகம்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It