எங்கள் வீட்டில்
பழமையான
நாற்காலி ஒன்றுண்டு

வீட்டின்
ஒதுக்குப்புறத்தில்
கேட்பாரற்று
வீற்றுக்கிடக்கும்
வெற்றுக் கம்பீரம் அது!

நாற்காலியில்
ஒருபோதும்
நாங்கள்
அமர்ந்ததேயில்லை...
எப்போதேனும்
ஆசை ஆசையாய்
ஆசுவாசங்கொள்ள
அமர்ந்தால்
அடுத்த நொடியே
அம்மா வந்து விரட்டியடிப்பாள்!!

ஏனென்றே
அறியாது அம்மாவின்
பதட்டங்கண்டு பயந்தே
ஓடிடுவோம்.

பிணங்களை
சாற்றி வைத்தே
பழக்கப்பட்ட நாற்காலி
அதுவென்று பின்னொரு
நாளில் தெரிந்து கொண்டோம்!

அமர்ந்தவுடன்
அண்ணாந்தே
பார்க்கத் தோன்றும்.
அப்படியொரு கோலத்தில்
அமர்ந்திருத்தலைப் பார்க்கையில்
அம்மாவுக்கோ
ஆத்திரம் தலையிலமரும்!

ஊருக்குள்
இருக்கிறவர்கள்
இந்நாற்காலியில்
உட்காருகிறார்களோ இல்லையோ?
உலகை விட்டுப் போகிறவர்கள்
எப்படியும் உட்கார்ந்தே பின்
விடைபெறுகிறார்கள்.

நாற்காலி
வீடடைந்த கதையை
கேட்கையில்
கொஞ்சம் நா வறளும்!

போலீஸ்
வேலைக்குப் போன
என் முப்பாட்டன்
எப்போதும் அதிகாரி முன்
அமர்ந்ததேயில்லையாம்...
அவருக்கான
இருக்கையிலே
இருந்ததென்னவோ
அலுவலக கோப்புகள் தாம்!

வருகிற
வருமானம்
வயிற்றுப் பாட்டுக்கே
சரியானாலும்
சிறுபாடு சேர்த்து
செஞ்சு வெச்ச நாற்காலி இது!

வேலை முடிஞ்சு
வேசடையாய் வருதுண்ணு
வியர்த்த படி
நாற்காலில வந்தமர
எத்தனை முறை
எழுப்பினாலும்
எழுந்திடாம
உட்கார்ந்த மாதிரியே
உயிர் பிரிஞ்சதால
ஒருத்தரும்
அதுல உட்காருவதில்லை!

அதுவோ
வீட்டின் ஓரத்தில்
வீற்றிருக்கும்
வெற்றுக்கம்பீரம்!

- இசைமலர்

Pin It