ஒன்றுக்கொன்று
கிடைமட்டமாகவும்,
மேற்பாதி குறைநீள செங்குத்தாகவும் பொருத்தப்பட்ட
இரு கழித்தல் குறிக்கட்டைகளின் சேர்ப்பையே நீங்கள்
சிலுவை என்றுரைக்கின்றீர்கள்.

இயேசுவின்
உள்ளங்கை அறையவென
ப்ரத்யேக ஆணிகளைத் தயார்செய்கின்றீர்.
சமயத்தில்
முள்முடிக்கும் தயாராகிறது
தேவனின் சிரசு.

இச்சமூகத்தின் பார்வையில்
உங்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம்
பெண்ணென்றும் பாராமல்
என்னைச் சிலுவையில் அறைய
உத்தரவு பிறப்பிக்கிறீர்.
முள்கிரீடம் அணிவிக்கின்றீர்.

என் உடலில் எஞ்சி நிற்கும் குருதித்துளிகள் வெளிச்சொட்ட
விலா எலும்பை அடித்து நொறுக்குகிறீர்.
தொக்கி நிற்கும் உயிரை
உங்கள் பசிக்கென பருகிக்கொள்கின்றீர்.

நான் உயிர்துறக்கும் முன்பாக
அவசியம் இதைச்
சொல்லியாக வேண்டும்.
உங்களுக்கென
தரம்வாய்ந்த பரிசுப்பொருள்களை
சிலுவைக்குக் கீழாக முளைத்து
வானுயர வளர்ந்து நிற்கும்
கிறிஸ்மஸ் மரத்தில்தான்
முடிந்துவைத்திருக்கிறேன்.
தயக்கமின்றி சேகரித்துக்கொள்ளுங்கள்.

பேரன்பானோர்களே....
ஒன்றை மட்டும் மனதில் நிறுத்துங்கள்.
மரமும் ஆணியும் கொண்டு
வடிவமைக்கக் கிடைப்பது
சிலுவை மட்டுமல்ல ,
சவப்பெட்டியும்தான்.
தாமதம் செய்யாமல்
அடுத்த புண்ணிய காரியமாக
ஆகவேண்டியதை கவனியுங்கள்.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It