அன்று
நீயும் நானும்
திருவிழா கொண்டாடிய
அதே வீதிதான் இது.

நம் ஊரின்
பெரும் அடையாளமான நதி
வற்றத் துவங்கிய நாள் முதலே
தலைதூக்கியது மணற்கொள்ளை.

சொட்டு நீருக்கு
நாம் கையேந்தும் இவ்வேளையில்தான்
மணல் திருட்டிற்குப் பெயர்போன ஒருவன்
திருவிழாக் கடையொன்றில்
தன் சிறு பிள்ளைக்கென
தண்ணீர்த் துவக்கையினை
பேரம் பேசிக் கொண்டுள்ளான்.

வா நண்பனே ...
என் விரல்களை இறுகப் பற்று.
பீய்ச்சியடிக்கும்
அவன் துப்பாக்கி நீரில்
சிறிது நேர ஆறாகி
சலசலத்து ஓடலாம்
நாமும்....நம் தெருவும்...

- வான்மதி செந்தில்வாணன்

Pin It