அந்த வழியில்
அப்படி ஒரு தனித்த பயணம்
யாராவது கொண்டிருக்கலாம்
இயல்பாய்தான் இருந்தது எனக்கு

யாருமற்ற இரவென்று
நான்தான் நம்பியிருக்கிறேன்
இரவுக்கு அப்படி இருந்திருக்காது

எதுகை மோனையாற்ற
கடுங்காற்றும் பனி வெள்ளையும்
சூழ்ந்து நகருதல்
ஒரு காட்சி ஊர்வது போல

வெற்றிட வெளிப்புறம்
சாளரம் துடைத்தபடியே
சூடும் சலனமுமென வானம் கொஞ்சம்
தலை முட்டுதல் கற்பனையோ

தூரம் தொடர்ந்திருக்க
எங்கு இருக்கிறது வீடு
மறப்பது இயல்பென்று வந்த
யோசனை சுற்றி என் மூச்சுக்கு
காற்று இன்னும் கொஞ்சம் தேவை

காற்றில் அலையும்
வரைதலின் நுனியைப் பற்றிக் கொண்டு
குதிரையொன்று
பயணித்திருக்கிறது

யாரோ பின்னொரு நாளில்
பகிர்ந்திருக்கிறார்கள்
என்னைப்போல தான்
தெரிந்ததாம்
குதிரை மேல் நின்றபடி சென்றது
அப்படியே நின்றபடியே
நகர்ந்து போனது குதிரையும் என்று....!

ஒரு குதிரைக்காரனின் கனவு
கண்டிப்பாக நீங்கள் காணும்
கனவல்ல...!

- கவிஜி

Pin It