நீங்கள் என்றால்
நீங்கள் எல்லாரும் தான்....

தாஸ்தாவெஸ்கியை நெருங்க
அனுமதிக்காத உங்களைத்தான்....

வள்ளுவனை வாய் கொண்டு
மெல்ல முடியாத வாழ்வு
பெருங்கொடுமை...

பாரதியை முனகிக் கொண்டு
திரிவது எத்தனை அபத்தம்
வெடிக்க முடியாத வரிகளை
ஜீரணிக்காத மனம் வெடித்தாலும் தகும்...

நடுமதிய வானத்தை என் போக்கில்
ஏறெடுக்க இயலாத சிறைக்குள்
நான் பறவை தேடும் செக்காவ்...

இரண்டு நாள் சேர்ந்தாற் போல
படிக்க முடியாத எழுத முடியாத
வெள்ளைப் பக்கங்கள் முழுக்க
எனது ரத்தங்கள்....

நுகரட்டும் உங்கள் நகரம்!

பிரமிள்
கன்னத்தில் கைவைத்து
அமர்ந்திருக்கும் அறையில்
அடித்து போட்டாற்போல தூங்குவது
நிர்வாணத்தின் கூச்சம் எனக்கு...

பொறுத்திருங்கள்
தூக்கிட்டு தொங்கி உங்கள்
பிளாஸ்டிக் அரிசி வயிற்றிலிருந்து
விலகும் நாளில் நானொரு
ஆலன் போ வென ஜொலிப்பேன்....

காது அறுத்துக் கொடுத்த
வான்காவின் ஓவியத்தில் காலாட்டி
அமர்ந்திருக்கும் நீட்சேவை நீங்கள்
நினைத்தாலும் நெருங்க முடியாது...

ஆமென்றே வைத்து கொள்ளுங்கள்....

நான் நீட்சே மற்றும் காபிரியேல் அல்லது
ஜிப்ரான்.....

- கவிஜி

Pin It