அவ்வப்போது
என்னை ஆண் என்னும்
முகமூடியால் மூடிக்கொள்!

என் காலத்திற்கு
நீ யிட்ட பெயரில்
இன்னும் மாற்றமில்லை
உன் பெயரில்
பல உருவங்கள்
முகிழ்ந்து கொண்டிருக்கு!

சில வேளை
வெறித்தனம் பிடிக்கும்
என் சன்னலுக்கு
நகரமுடியாத
அதன் ஆணிகள்
சாபக்கோடு கிழித்திருக்கும்
அதனால்
காற்றை கடன்வாங்கி
கைதட்டி அழுகிறேன்
பட பட என்று!

கடலில் வீழும்
மழைத்துளியை
கண்டுகொள்ளாத அலைகள்
ஒவ்வொரு வீட்டின்
தலைகளாய்!

உனது வருகைக்கு
முன்
உதிரும் ஒவ்வொரு
சொட்டு கண்ணீரும்
எனது மார்புக்குள்
மறைகிறது!

நிழலை விழுங்கும்
வெயிலென
உன் பெயரால்
உருகும் என்
மெழுகுவர்த்தி...

- ஜெ.ஈழநிலவன்

Pin It