man treeஅவன் மாய்ந்துவிட்டான்.
இறுதி ஆசையாக அவனொன்றைக் கோரினான்.
விழிகள் வான் செருக
எனது கல்லறை எப்படி இருக்கவேண்டும்
தெரியுமா?
நிறம் குருதியில் முக்கியதுபோன்றும்,
வடிவம் அவளின் இதயத்தை ஒத்தும்.

***

உச்சிப்பொழுதொன்றில்
எனக்காகவே
நிழல் விரித்து
பல வருடமாய் காத்திருப்பதாக
பாவனை செய்து நின்றது ஒரு புளியமரம்.

உற்றுப்பார்த்தேன்
அதற்கு அப்படியே என் கால்களைப்போல் வேர்கள்.
என் புட்டத்தை மெல்ல அதன் மீது இருத்தினேன்.

புளியங்குச்சியால் எதையோ மண்ணில் கிறுக்கியவாறு
உதிர்ந்து கிடந்த புளியம்பழம் பொறுக்கி
நாவருகே வைத்தேன்.
தாய்ப்பால் போன்று சுரந்தது உமிழ்நீர்.

ஆஹா கொஞ்சூண்டும் குறையாமல்
அப்படியே இருக்கிறது பால்யத்தின் ருசி.

- நெகிழன்

Pin It