எப்போதாவது மனம் விட்டு பேசும்
கனவுகளோடு தான்
அன்றும் விடிந்தது

விண்மீன் தொடாமலே
ஆகி விடும்
தொடுவானம் தொடத் தொட
நீண்டு விடும்

பின்னிரவு நிசப்த மொழிக்குள்
ஆழிப்பேரலை ஆழ்மூச்சிட்டு
அகம் முடிச்சிடும்

பின் மதியம் திரும்பி விடும்
துள்ளல் செதில் திறக்கும்
அதிகாலை கனவொன்று

பட்சி ஒன்றின் எதுகை மோனைக்கு
காற்றில் கீதம் ஒன்றை
முணுமுணுக்கும் சுவடு

யாருமறியா காதலிக்கு
மீன் விற்ற கடலை
பரிசளிக்க நினைத்திருக்கலாம்

நடுவானம் பொத்தலிட்டு
துண்டொன்றாய் சரிவான் என காத்திருந்ததோ
காலத்தின் குருதித் துளி

பிணமாகிட வாய்த்த மீன்களோடு
பெருமீனாய் கரை வந்தவன்
உடலெங்கும் புத்த வாசம்...!

- கவிஜி

Pin It