girl boy friendshipஓய்வு நேரப் பொழுதொன்றில்
ஆளரவமற்ற அறையினுள்
நுழையும் பூனையின்
மெல்லடியாய் நுழைகிறது நம்
பால்யகாலத்து நினைவுகள்!

அன்றொரு காலத்தில்....
"உன் வீட்டிற்கு பாம்பு வரும்
குச்சிப்போடு! "
பயங்காட்டி சிலேட்டுக்குச்சியைப்
பறித்துச் சென்றான் பள்ளி நண்பனொருவன்!
பதறிப் போய் நான் அழுது தொலைக்கையில்.....
பாசத்தோடு கரம் பற்றி என்
பயம் துடைத்தவன் நீ!

அண்ணன்...தம்பிகளற்ற
வாழ்க்கை வாய்க்கப்பெற்ற
என் பொழுதத்தனையும் உன்
வரவால் வசந்தமாகிப்போனது!

நட்புக்கும்... காதலுக்கும்
வித்தியாசமறியா கல்லூரி நண்பனின்
கடிதத்தை முதன்முதலில்
காட்டி அழுததும்...பின்
எனைத் தேற்றி நீ சிரித்ததும்.....
நேற்று நிகழ்ந்தாற்போல்
என் நினைவில் தங்கிப்போனது!

என் எல்லா சுக, துக்கங்களிலும்
தோள் தந்திட்ட
என் சொந்தமில்லா சொந்தம் நீ!
திருமணம் என நான் வந்து நிற்கையில்....
சகோதரனாய்... தோழனாய்
என்னோடு நின்றாய்!
மறுவீடு சென்று நான்
திரும்புகையில்.....
மறைவாய் சென்று என் முகம்
பார்த்து பூரித்த தகப்பன்சாமி நீ!

காலம் உருண்டோடித்தான் போகிறது!
வேலைக்காய் வெளிநாடு நீ
சென்றதும்....
வேண்டிய நேரத்தில் நீ
இல்லாதிருத்தலும்....
இயலாமையைக் காட்டுகிறது!
என் எல்லா நிகழ்விலும்
நீங்காது பயணித்த நீ...
எங்கோ தூரதேசத்து ஒற்றைப்
பறவையாய் நானிருப்பதையும்...
உணர்ந்தேதானிருப்பாய்!

ஆனாலும்.....
என் நண்பா!
இப்போதும் கூட என் எல்லா
நிகழ்விலும் நீயேயிருக்கிறாய்!
என் நினைவுகளின் வலியாய்!

- இசைமலர்

Pin It