snake fearகூரையால் வேயப்பட்ட குளியலறையின்
மேற்புறத்தில்
கூரைக்கும் சுண்ணாம்புச் சுவற்றுக்கும்
இடைப்பட்ட கருந்துளையை விட்டு
தலையை நீட்டுகிறது
கருநாகப் பாம்பு
கனவுதான் என்றாலும்
அதன் தலையில் வரையப்பட்ட நாமம்
முகத்தில் காணும் நாக முத்திரையென
சரிபார்த்தபின்பு அலறியோடுகின்றேன்...

சமீபத்தில் கருஞ்சட்டையணிந்த
குட்டிப் பாம்பொன்று
சுற்றுச் சுவரினிடுக்கில் குதித்தபோது
குறுக்கே சென்ற பங்கம்
ஆடை வழி பிடித்து பின்பு
வலக்காலில் வால் பட்ட பதற்றத்தில்
இழுத்து இழுத்து ஊர்ந்த நினைவோ...

அது கொண்டு படமெடுத்த பீதியில்
பிதற்றித் திரியுமெனக்கு
மாரிக்கண்ணியின் ஓட்டுவீட்டுக் கதையை
உதாரணப்படுத்துகிறாள் அம்மா
ஓடு பிரித்த
சாரையும் நாகமும்
குளிர்சாதனப் பெட்டிக்கருகே தொங்க
ஊரே பார்த்த வேடிக்கை நிகழ்வோ....

ஒரு முறை காதல் பறவைக்கூண்டை
காற்றுவெளியில் கலந்தாட விட
நெருங்கி நெடிந்துயர்ந்த வேம்பின்
கிளை தழுவி தலைகீழ் விழுந்த
பச்சைப் பாம்பின் கோரைப் பல்லில்
இணைகளில் ஒன்றின் இரத்தம்
கசிந்ததைக் கண்ட அச்சுறுத்தலோ....

பழைய வீட்டில் சமையலறைத் திட்டில்
மின்சாரத் துண்டிப்பின் போது
மண்ணெண்ணெய் விளக்கொளியில்
சற்றே தடித்த பாம்பின் வாகு
சுருண்டு கிடந்த காட்சியின்
மீள் பதிவோ....

வீட்டருகே மண்டியிருக்கும்
புதர்களைக் குறித்து
பாம்பின் சாத்தியம் பேசி
எட்டிப் பார்த்த பொழுது
ஆள் அரவம் தொற்றி
வெடுக்கென்று ஓடியதொரு
மஞ்சள் நிறப் பாம்பின் அச்சமோவென

அரவமே பலனாகத் துரத்தும் கனவின் ஞாபகமாய்
சுற்றிச் சுற்றித் தேடுகிறேன்
அக்கருநாக நெற்றியில்
சிவந்திருந்த மணி வடிவிலான
அடையாளப் புள்ளியை.....!

- புலமி

Pin It