man 208ஊர்க்காரனை
நகரத்தில் பார்க்க நேர்ந்தால்
ஊரையே பார்த்தது போலிருக்கும்

அவன் களைத்து களையோடிதான் இருப்பான்
வீட்டுக்குப் போகலாமா என்றால்
முடிக்கப்படாத வேலை
முன்நிற்பதைச் சொல்லி
இன்னொரு காலத்தை வரவு வைத்து
நகரப் பார்ப்பான்

ஊர்க்கதை கலந்த
சிறிது நேர தேநீர் பருகலில்
புதுப்பித்துக் கொள்ளலாம்
உள்ளூர் உணர்வுகளை
வயதான அப்பா நலங்குறித்து
பேச்செடுக்கலாமென உள் ஓடுகையில்
அவர் இருப்பது போல் இருந்து
இல்லாதது போலும் இருக்கிறார்
ஞாபக நம்பிக்கை மேலோங்க
அப்பாவைக் கேட்ட கனத்தில்
அப்பா இறந்து மூன்றாண்டு....என
முடிப்பதற்குள்ளாகவே
உயிர்ச்சுடும் அதிர்வில்
ஆமாய்யா என உணர்வேன்

கொளஞ்சிக் கோனார் இறந்துபோன அன்று
குடும்ப சகிதமாய்
மாலை போட்டு மரியாதை செய்தது
மறந்தே போயிற்று
வற்றிய மிளாறாய் வதங்கி நின்ற கிழவி
மரணத்தின் சட்டையை உலுக்குவதுபோல
என் சட்டையைப் பிடித்துத் தொங்கி
அந்தரமாய் அழுததும் மறந்து போயிற்று

நிலத்திலிருந்து பிடுங்கப்பட்ட செடிகளின்
நிலந்தங்கிய நிலக்கடலைகளை
நிலம் புரளும் உழவின் போது
காட்டுப் பறவைகள் பொறுக்கிக் கொள்வதுபோல
இல்லாதவர்களின் இருப்பை
பொறுக்கிக் கொள்கிறோம்
புலம்பெயர்ந்து நகரம் போனவர்களிடம்
செத்துப் போன பலபேர்
உயிர்ப்பூண் அணிந்தபடி
இன்னும் உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்

- முனைவர். அகவி, ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, பாடாலூர் அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்

Pin It